

லஞ்சம், ஊழல் இவற்றிற்கு எதிராக, கடுமையானச் சட்டங்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. இருப்பினும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தான் பிரச்னை.
ஆனால், இந்த நாட்டில் அப்படியல்ல. யாராயிருந்தாலும் குற்றம் குற்றமே. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே.
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, அமைச்சர் ஒருவரைப் பற்றிய புகார் வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, பிரதமரின் அனுமதியை நாடுகிறது.
பிரதமர் சற்றும் தயங்காமல், உடனடியாக அனுமதி வழங்குகிறார். எவ்வித குறுக்கீடுகளும் இல்லாமல் விசாரணை நடைபெறுகிறது.
'கடந்த இரண்டு வாரங்களாக, நான் மிகவும் கவலையுடனும், மன அழுத்தத்துடனும் இருக்கிறேன். இந்த துரதிஷ்டமான சம்பவத்திற்கு நானே முழு பொறுப்பு என்பதை உணர்கிறேன். அதற்கான முழு பொறுப்பையும் நான்தான் சுமக்க வேண்டும் என்பதையும் உணர்கிறேன். ஒரு மதிப்புமிக்க மனிதர் என்னும் வகையில், நான் செய்த தவறுக்கு, அதிகபட்ச தண்டனையை அனுபவிப்பதுதான் சரியானது என்பதையும் முழுமையாய் உணர்கிறேன்.'
குற்றம் சுமத்தப்பெற்ற அமைச்சர் இப்படி ஒரு கடிதத்தை எழுதி பிரதமருக்கு அனுப்பினார்.
தான் செய்தவற்றிற்கு உரிய தண்டனையினையும், தனக்குத்தானே கொடுத்துக் கொண்டார். தற்கொலை செய்துகொண்டார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசினார். போதிய அளவு ஆதாரங்கள் இருக்குமானால், எந்த அமைச்சரும், விசாரணையையோ, தண்டனையையோ தவிர்க்கமுடியாது.
அடுத்த பிரதமர் பதவிக்கு வருகிறார். அப்பொழுதும் ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
நான்கு லட்சம் வெள்ளிக்குமேல் மதிப்புள்ள பொருள்களையும், சேவைகளையும் அன்பளிப்பாகப் பெற்றார் என்று. அமைச்சர் மறுத்தார். 'நீதிமன்றத்தில், என் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைப்பேன்' என்றார்.
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. முடிவில், குற்றப்பத்திரிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அமைச்சர் மீது ஐந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை ஒப்புக்கொண்டார். அன்பளிப்பாய் பெற்ற பொருள்களை, அரசிடம் ஒப்படைக்கவும் முன்வந்தார்.
நீதிமன்றம் ஒரு வருடசிறை தண்டனையை வழங்கியது. ஒரு வருட சிறை தண்டனையை அனுபவித்தார்.
அன்றைய பிரதமர், நாடாளுமன்றத்தில் பேசினார். அரசாங்கம் இந்த வழக்கை கடுமையாகவும், சட்டப்படியும் கையாண்டுள்ளது. தொடர்ந்து அவ்வாறே செய்யும். அரசாங்கம் மற்றும் கட்சியின் நாணயத்தைக் கட்டிக்காக்கவும், நேர்மை, ஊழல் இன்மை ஆகியவை தொடர்பான நற்பெயரைப் பாதுகாக்கவும், நான் உறுதி பூண்டுள்ளேன். நம் நாட்டு மக்கள் இதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
வியப்பாக இருக்கிறதல்லவா?
நம்பமுடியவில்லை அல்லவா?
இதுதான் சிங்கப்பூர்.
சிங்கப்பூரின் நான்கு தாரக மந்திரங்கள் என்ன தெரியுமா?
1. திறமைக்கு முதலிடம்.
2. சலுகைகள் கிடையவே கிடையாது.
3. லஞ்ச ஊழலுக்கு முழுமையான எதிர்ப்பு, தண்டனை.
4. சமத்துவம்.
பிரதமர் மேலும் பேசினார். சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பு முறையும், அரசியலும், எப்போதும் தூய்மையாகவும், ஊழல் அற்றதாகவும் இருப்பதை உறுதிபடுத்துவதும், தேவைப்படும் பொழுது தக்க நடவடிக்கை எடுப்பதும் எனது குழுவின் கடமை.
அரசியலில் கொடுக்க வேண்டிய விலையைப் பற்றியோ, உடன் பணியாற்றும் ஒருவர் சிறைக்குச் செல்வதால் ஏற்படும் வலியைப் பற்றியோ, பொருட்படுத்தாமல், சிங்கப்பூருக்கும், சிங்கப்பூர் மக்களுக்கும் எது சரியோ? அதைச் செய்வோம்.
பொதுச் சேவைக்கும் பதவிக்கும் வருவோர், நேர்மையின் அதிகபட்சத் தரத்தைக் கட்டிக் காப்பதோடு, அவர்களின் நடத்தை பழிச்சொல்லுக்கு ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரின் தந்தை, முதல் பிரதமர், லீ குவான் யூ போட்டுக் கொடுத்த அடித்தளமும் இதுதான். இதுதான் சிங்கப்பூர். யார் பிரதமராக இருந்தாலும், இதுதான் நிலை.