

சமீப காலங்களில், நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் குறித்த செய்திகள் மீடியாக்களில் வராத நாளே இல்லையென்று சொல்லுமளவுக்கு நிறையச் செய்திகள் வருகின்றன. அதிலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையே மிகுந்த சினத்திற்கு உள்ளாக்கிய செய்தியொன்று தற்போது அனைத்து மீடியாக்களிலும் பரபரக்கிறது!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபை (NCERT), சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணாக்கருக்கான எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறை குறித்த பாடத்தில் சில குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளதாகவும், அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்றும், எந்த விதத்திலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், விநியோகிக்கப்பட்ட புத்தகங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்றும், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியே ஆணை பிறப்பித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபையானது செப்டம்பர்1, 1961 ல் மத்திய அரசால், டெல்லியில் தொடங்கப்பட்டது.
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதுடன், ஆசிரியர்களுக்கான தேவையான பயிற்சிகளை அளிப்பதும், மத்திய, மாநில அரசுகளுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்குவதும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுவதும் இதன் முக்கியப் பணிகளாகச் சொல்லப்பட்டன.
இப்பொழுது வெளியிடப்பட்ட எட்டாம் வகுப்புக்கான புத்தகத்தில் வந்த பாடமே பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறது. இதுவரை இது போன்ற கருத்து வேறுபாடுகள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாணவர்கள் மற்றும் நாட்டினர் மத்தியில் நீதித்துறையின் மீதான இந்தக் களங்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து ஏற்கத்தக்கதே!
ஆனாலும், நமது நீதி மன்றங்களின் சில செயல்பாடுகள் வருத்தம் அளிப்பவையாகவே உள்ளன. என்னதான் சிலவற்றை மறக்க முயற்சித்தாலும், மனம் சிலவற்றை அவ்வளவு எளிதாக மறக்க அனுமதிப்பதில்லை. எதை நினைக்க வேண்டாமென்று எண்ணுகிறோமோ அதுதான் துருத்திக் கொண்டு முன்னாடி வந்து நிற்கும்.
ஓர் ஊரில் நாட்டு வைத்தியர் ஒருவர் மருத்துவம் பார்த்து வந்தாராம். சில முக்கிய மருந்துகளில் அவருக்கே சந்தேகம் இருக்கும் நிலையில், அதனை நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது அவர் ஒரு ஆலோசனை வழங்குவாராம். ”தயவு செய்து இந்த மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை மட்டும் நினைக்க வேண்டாம்!” என்பதுதானாம் அது.
மருந்தைச் சாப்பிடும் போதல்ல, மருந்தை நினைத்தாலே குரங்கு மனதில் குதியாட்டம் போட ஆரம்பித்து விடுமல்லவா? யாராவது மருந்து நிவாரணம் அளிக்கவில்லையே என்று கேட்டு வந்தால், "குரங்கை நினைத்தீர்களோ" என்று காஷூவலாகக் கேட்டு, தன் மீதோ, மருந்தின் மீதோ தப்பில்லையென்றும், சாப்பிட்டவரின் தவறே என்பது போலப் பழி போட்டு விடுவாராம்.
சரி! நாம் நம்ம சப்ஜட்டுக்கு வருவோம். நீதித்துறையின் மீது ஏற்கெனவே மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டுத்தான் நிற்கிறார்கள். அதற்கான மூன்றே மூன்று உதாரணங்களை மட்டும் இங்கு நினைவு கூர்வோம்.
1. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு, சுமார் 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டபோதும், சிரமப்பட்டு நீதிபதி அவ்வழக்கை முடித்தார்.
வழக்கை இழுப்பதற்காக எவ்வளவோ நொண்டிக் காரணங்களெல்லாம் கூறப்பட்டனவாம். ஒரு முறை, வேறு எந்தக் காரணமும் கிடைக்காத நிலையில், நீதி மன்ற வளாகத்தில் அடிக்கப்பட்டுள்ள புது பெயிண்டின் நாற்றம் (மணம்) மேடத்திற்கு ஒத்துக் கொள்ளாது என்று கூறி, வாய்தா கேட்டார்களாம்! அதற்கும் வாய்தா கொடுத்து, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா பொறுமையுடன் தீர்ப்பளித்தாராம். தீர்ப்பு என்னவென்பது உலகம் அறிந்ததுதானே!
அப்புறம் அது அப்பீலுக்குப் போய், நீதிபதி குமாரசாமி அவர்கள் அவர் குற்றமற்றவர் என்று விடுவித்தார். உச்ச நீதிமன்ற அப்பீலில் குன்ஹா அவர்களின் தீர்ப்பே சரியானது என்றும், நடுவில் வந்தவர் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதியற்றது என்றும் கூறப்பட்டது. அதற்கான பல காரணங்கள் கூறப்பட்டன. கூறப்பட்ட காரணங்கள் உண்மையா என்று அவரை விசாரணை செய்யக்கூட யாரும் முன் வரவில்லை. அப்பொழுதே நீதித்துறையின் மீது பலர் நம்பிக்கையை இழந்து விட்டனர்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் மீது, தேர்தலில் குற்றங்கள் இழைத்து அவர்கள் வெற்றி பெற்றதாக வழக்குகள் தொடுக்கப்படுகையில், பல நேர்வுகளில் அவர்களின் பணிக் காலம் முடிவடைந்த பிறகே, தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை நினைத்தாலே வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கை மறைந்தே போனது!
3. சமீபத்திய தீர்ப்பில், டெல்லி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தவறிழைத்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லையென்கிறது ஒரு கோர்ட். அவர்கள் இருவருமே பதவியை இழந்து பல மாதங்கள் சிறையில் வாடினர்.
அவர்களின் வருத்தங்களை எதனாலும் சரியாக்க முடியாதே! மக்களாட்சி நடை பெறும் ஒரு நாட்டில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பேசப்படுகின்ற ஒரு நாட்டில், இது போன்ற சம்பவங்களை நீதி மன்றங்களே அரங்கேற்றினால், மக்கள் நம்பிக்கை இழக்காமல் என்ன செய்வார்கள்? ஒரு நீதி மன்றந்தானே அவர்களைச் சிறைக்கு அனுப்பியது?
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும், சமாதானத்திற்கும் அடித்தளமாக விளங்குவது அந்நாட்டின் நீதித்துறையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்களும் அவற்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அணுவளவும் குறை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நீதி மன்றங்களின் தலையாய கடமையாகும்.