

“வருமுன் காப்போம்!” என்று உலகுக்கு உணர்த்திய நாம், வந்த பின்னால்கூட சில நல்ல முடிவுகளை எடுத்துச் செயல்படத் தவறி விடுகிறோம்! 'ஆதிச்ச நல்லூரில் அது இருந்தது! இது இருந்தது!கீழடியில் இன்று கிடைப்பதெல்லாம் பொக்கிஷங்கள்!’ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ’எங்கள் முன்னோர்கள் மொஹஞ்சாதாரோ நாகரீகத்தையும் மிஞ்சியவர்கள்!’ என்று மார் தட்டுகிறோம். ’எல்லாம் சரிதான்! நீ இப்போது எப்படி இருக்கிறாய் தம்பி!’ என்ற கேள்விக்கு, நெஞ்சை நிமிர்த்தி ‘எனக்கென்ன? ரொம்ப நல்லாத்தானே இருக்கிறேன்!’ என்று கூற முடிகிறதா நம்மால்!‘ ஏதோ இருக்கிறேன்!’ என்ற ஏக்கப் பெருமூச்சல்லவா முன்னால் ஓடி வருகிறது!
இந்தியப் பணமதிப்பு டாலருடன் ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருந்தாலும், வண்டி ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், உண்மையில் நம் முன்னேற்றம் இன்னும் உயர்ந்ததாக இருந்திருக்க வேண்டும். அதற்கான வழி முறைகள் தெரிந்திருந்தாலுங்கூட, அவற்றை ஒழுங்காகப் பின்பற்றாது போனதால், பல துறைகளில் பின்தங்கி நிற்கிறோம்.
இன்றைய உலகின் பிரதானத் தேவை மின்சாரம் மற்றும் எரிபொருள். இவை இரண்டும் இணைபிரியா இரட்டைச் சகோதரர்கள்! எரிபொருள் செய்யும் பல வேலைகளை மின்சாரமும், மின்சாரத்தையே கூட தயாரிக்கும் பணியை எரிபொருளும் செய்கிறது. எந்த நாடு மின்சாரத் தேவையைச் சுய உற்பத்தி மூலம் ஈடு செய்கிறதோ, அதுவே தன்னிறைவு பெற்ற நாடாக இன்றைக்கு நின்று இலங்குகின்றது. நீர் மின் சக்தி, அனல் மின் சக்தி இவற்றைக் காட்டிலும் ‘சோலார்’ என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தியே (solar energy) நிரந்தரப் பயன் தருவதாகக் கருதப்படுகிறது.
முதல் முறை முதலீட்டோடு, அதன் பிறகு அதிகப் பராமரிப்புச் செலவோ, கட்டாய குறுகிய காலப் பராமரிப்பு முறைகளோ இல்லாத இந்த சோலார் பானல்களைக் குளிர்ப்பிரதேசங்களாகக் கருதப்படும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், அதிக அளவில் காண முடிகிறது.
சூரிக்கின் காட்டிகன் வில்லேஜ் வீட்டுக் கூரை இங்கு கோடையோ, மூன்று மாதங்கள்தான். அப்பொழுதுங்கூடத் தொடர்ச்சியாக வெப்பநிலை 25, 30 டிகிரிகளைக் கூட எட்டாது. கிரேக்க நாட்டின் ஏதன்சு நகரத்தில் ஒரே கூரையில் பல வீடுகளுக்கான சோலார் வாட்டர் ஹீட்டர்கள் இருப்பதைக் காண முடிகிறது.
ஆனால், நம் இந்திய நாடு வெப்ப மண்டல நாடு! ஆண்டின் அதிக நாட்களில் 30 டிகிரியைத் தாண்டியே வெப்பம் பதிவாகிறது. நமது நாட்டு மழைக்காலம், இப்பொழுது குறுகிக் கொண்டே வருகிறது. 60ஸ் கிட்ஸ்களாகிய நாங்கள், எங்கள் இளமைக் கால மழைக்காலத்தில் ‘சூரியன் எப்போது தன் தலையைக் காட்டுமென்று எதிர்பார்த்து நாட் கணக்கில், வாரக் கணக்கில் காத்திருந்த காலமெல்லாம் இப்பொழுது போய் விட்டது.
’நவம்பர், டிசம்பர் மாதங்களில் நான்கைந்து நாள் மழை என்பது மெல்ல வாடிக்கையாகி வருகிறது. பெரும்பாலான மாதங்களில் ஆதவனின் அரசாட்சியே அகில இந்தியாவிலும் தொடர்கிறது. அப்படியிருக்கையில், எல்லா வீட்டுக் கூரைகளும் பேனல்களைச் சுமந்திருந்தால், நமது தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்திருக்கக் கூடும்.
எதார்த்தம் இவ்வாறிருக்க, நமது நாட்டுக் கூரைகளில் சோலார் பேனல்களை, மிக அரிதாகவே காண முடிகிறது. கடந்த ஆண்டே அரசு அறிவிப்புகள் சிறகடித்தன. ஆனாலும், கூரைகள் இன்னமும் பேனலுக்காகக் காத்தே கிடக்கின்றன. சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகும் திட்டம் சூடு பிடிக்கவில்லை. எதெதற்கோ வல்லுனர் குழுக்களை நியமனம் செய்பவர்கள், இத்திட்டம் வேகம் பெறாததற்கான காரணங்களை ஆராயக் குழு அமைத்து, குறைகள் ஏதும் சுட்டிக் காட்டப்படுமாயின் அவற்றை உடனடியாகக் களைய உத்தரவிட வேண்டும். நமது சிந்தனையில் தோன்றும் சிலவற்றைப் பரிந்துரைப்பது நமது கடமையாகிறது.
இனிஷியல் முதலீடு அதிகம் என்றால் அதனைக் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல்;
கல் கட்டட மேல் தளத்தில் மட்டுமல்லாது, கூரை வீடுகளிலும் சிறிய அளவு பேனல்களை அமைக்க முடியுமானால், எளியோரும் தங்கள் கூரைகளில் அமைத்திட வழி ஏற்படும்;
கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி போன்ற ஊராட்சி அமைப்புகள், பொதுவிடங்களில், தங்கள் பகுதிகளின் தேவைக்கேற்ப பேனல்களை அமைத்துக் கொள்ள வழி வகைகள் செய்தல்;
மால்கள் அமைக்கும் போதே, அவர்கள் தேவையின் ஒரு பகுதியையாவது சோலார் பேனல்கள் மூலமே பெற வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்குதல்;
பேனல்களின் தரத்தை அதிகரிப்பதுடன், தொல்லைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாகத் தீர்வு காண உத்தரவாதம் அளிப்பதுடன், நடமாடும் சீரமைப்புக் குழுக்களை (Mobile Repairing Units) அமைத்துப் பயனாளிகளின் நம்பிக்கையைப் பெறுதல்;
அரசு நிவாரணம் மற்றும் வங்கிக் கடன் பெற்று கட்டப்படும் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவ வலியுறுத்தல்;
பேனல்கள் அமைப்போருக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் அதிக உற்பத்தி மின்சாரத்தை வாங்கிக் கொண்டு, முறையான கணக்குகளைப் பராமரிக்க மின்துறை முன் வருதல்.
போன்ற நடவடிக்கைகளில் அரசும் அதிகாரிகளும் அதிக அக்கறை செலுத்தினால், ஊரெங்கும் சோலார் பேனல்கள் தக தகக்கும்! ஒளி வெள்ளம் இருளைப் பகலாக்கும்! மின்சார எரிபொருள் பற்றாக்குறை இல்லாதே போகும்.
எப்படி கொரோனா காலத்தில் உலகப் பொருளாதாரம் நொண்டிக் கோடடித்து நொடித்து நின்ற போதும், இந்தியப் பொருளாதாரம் எதற்கும் அஞ்சாமல் நிமிர்ந்து நின்றதோ அதைப்போல் எரிபொருள் பற்றாக்குறை எல்லை மீறிப்போனாலும், கதிரவனின் கருணையினால் நாம் காலூன்றி நின்றிடலாம்!
அரசுடனும் அதிகாரிகளுடனும் சேர்ந்து, பயனாளிகளான நாம் பங்கேற்க வேண்டும்.
வீட்டு நலனுடன் நாட்டு நலனிலும் நாட்டம் கொள்ளவேண்டும். நாளைய சமுதாயம் நன்றாக மிளிர வேண்டுமானால் இன்றைய சமுதாயத்திலுள்ள நாம் இனிதான உழைப்பை நல்க வேண்டும்!நம் வீட்டுக் கூரைகள் சோலார் பேனல்களால் சொகுசாக்கப்பட வேண்டும்... ஆக்குவோம்!