

“எதுக்கு? எதுக்குன்னு கேக்கறேன்?” என்று ஆக்ரோஷமா உறுமியது விருத்தாம்பா.
செப்புக்குடத்து மேல சின்ன சொம்பு வெச்சா மாதிரி பெருத்த உடம்பும் சிறுத்த தலையும், இல்லாத கழுத்துல அம்புட்டு நகையும் சீறி துடிக்க ‘ஒன்னை பெத்து வெச்சிட்டு என் தலை மேல ஏறி உக்காரவா’ன்னு அதட்டியது.
மருத்துவச்சி எழுந்து பின்னாலபோய் கிணத்தை ஒட்டி மண்டிக்கிடந்த எருக்கஞ்செடியிலருந்து, பச்சையா கெட்டியா கொஞ்சம் நீளமா வெள்ளை வெளேருன்னு பிசுபிசுப்பான பாலோடு ரெண்டு குச்சியை ஓடிச்சிட்டு வந்து பத்தாய ரூம்புக்குள்ள போக பாக்கியத்தின் அழுகுரல் ஆளை உலுப்பியது.
“யக்கோ, எழுந்து ஒரு வாய் சுடுகஞ்சி குடிச்சிட்டுப் படுன்னு” அம்மா கெஞ்சிட்டு இருந்தது. “தண்ணி வேணும்”னு ஜாடை காட்டிச்சி பாக்கியம்மா. ஓடிப்போய் சொம்புல தண்ணி மோந்துட்டு வந்து குடுத்தேன். என்னன்னு இப்பவும் புரியலைன்னாலும் பாவம் பாக்கியம்மான்னு நெனச்சி அழுகையா வருது.