
அவர் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர் அல்லர். என்னைப்போல் உதவியாளராக இருந்து அதிகாரி ஆனவர்தான். அப்படியொரு அதிகார போதையில் திளைத்துக் கிடந்தார் மனிதர். பலமுறை எனக்கு அது நிகழ்ந்திருக்கிறது. காலை பத்தரை மணிக்கு அவரிடம் கையொப்பம் பெற அவரது அறைக்குச் செல்வேன். கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டு அவரது அறையை விட்டு வெளியில் வரும்பொழுது நேரம் சமயங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும்; அவ்வளவு பேசுவார் - அலுவலக விவகாரங்கள் கால்வாசியும் அவரது சுயதம்பட்டம் முக்கால்வாசியுமாக.
அவரது இருக்கைக்கு எதிரே மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். நாற்காலியில் என்னை அமரும்படி அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். நானும் அவரது அனுமதி இன்றி நாற்காலி எதிலும் அமர்வதில்லை. அவருக்கு கைபேசியிலும் அலுவலகத் தொலைபேசியிலும் அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். நான் ஒருவன் நிற்கிறேனே, என்னை எனது இருக்கைக்கு அனுப்பி வைத்துவிட்டுப் பேசுவோமே என்று நினைக்க மாட்டார். என்னை நிற்க வைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார். தொலைபேசியோ அலைபேசியோ வராத நேரத்தில் என்னிடம் கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பேசுவார். யாரையும் நம்பமாட்டார். என்னையும் நம்பமாட்டார். அலுவலக இரகசியங்கள் ஒன்றிரண்டை என்னிடம் சொல்லிவிட்டு, அந்த விஷயம் என்மூலம் வெளியில் கசிகிறதா என்று கவனிப்பார். இவர் இப்படியெல்லாம் செய்யக்கூடியவர் என்பது எனக்குத் தெரியும் ஆகையால் நான் உஷாராக இருந்துகொள்வேன்.
அந்த வருவாய்க் கோட்டத்தின் கோட்டாட்சியர் என்ற ஹோதாவில் அவரது எல்கைக்குட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு அவர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இருந்தார். அந்த சட்டமன்றத் தொகுதிக்கு இன்னும் சிறிது நாட்களில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்தது. வாக்குச் சாவடிகள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய அவர் அன்று புறப்பட்டுக்கொண்டிருந்தார். எனது துரதிர்ஷ்டம், அந்த நேரத்தில் அவரது கண்ணில் நான் பட்டுவிட்டேன். என்னையும் அந்த பொலிரொ வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டார்.
“இந்த தாலுகாவில நீ வேலை பார்த்திருக்கையிலப்பா. உனக்குத் தெரியுமில்ல எந்தெந்த போலிங் ஸ்டேஷன் எங்கெங்க இருக்குன்னு?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். எனக்குப் பல வாக்குச் சாவடிகள் எங்கிருக்கின்றன என்பது தெரியும். ஒருசில வாக்குச் சாவடிகளை நான் பார்த்ததில்லை. எப்படியும் ஒவ்வொரு ஊரிலும் களப்பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களை வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்ற அசட்டுத் தைரியத்தில்,
“தெரியும் சார்” என்று சொல்லிவிட்டேன்.
இருப்பினும் உள்ளுக்குள் உதறத்தான் செய்தது.
பத்து இருபது வாக்குச் சாவடிகளை ஒருவழியாகக் காண்பித்துவிட்டேன். அடுத்து இருப்பது பெரிய கிராமம். அங்கு ஐந்து வாக்குச் சாவடிகள் இருப்பதாகப் பதிவேடு சொன்னது. வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளியின் பெயரும் கைவசம் உள்ளது. நான் அந்த ஊருக்கு இதற்கு முன்பு போனதில்லை. பள்ளியின் இருப்பிடம் எனக்குத் தெரியாது. சாதாரணமாக அதுவொன்றும் பிரச்சினை இல்லை. ஊரில் சென்று யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். ஆனால் அப்படிக் கேட்பதைக் கௌரவக் குறைச்சலாக எடுத்துக்கொள்வார் இந்த அதிகாரி. எனக்குத்தான் எல்லா வாக்குச் சாவடிகளும் தெரியும் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா! அவர் அதைப் பிடித்துக்கொள்வாரே! என்ன செய்வது என்று யோசித்த நான் அப்பொழுது நாங்கள் நின்றுகொண்டிருந்த ஊரின் கிராம உதவியாளரிடம் கேட்டேன்,
“ஏப்பா பழனி! பக்கத்து ஊர்ல இருக்குற போலிங் ஸ்டேஷன்ஸ் ஒனக்குத் தெரியுமா?” என்று. அதற்கு அவர், “நல்லாத் தெரியுங்க, ஐயா!” என்றார்.
அந்த பொலிரோ வண்டியில் முன் இருக்கையில் ஓட்டுநரும் அதிகாரியும் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்புறத்தில் உள்ள மூன்று பேர்கள் அமரக் கூடிய இருக்கையில் நானும் அதிகாரியின் அலுவலக உதவியாளரும் ஏறிக்கொண்டோம். எங்களுக்குப் பின்னால் எதிரெதிரே இரண்டு இருக்கைககள் இருந்தன. அதில் பழனியை ஏறி உட்காரச் சொல்லிவிட்டேன். வண்டி ஊரைத் தாண்டியதும் ஓரிடத்தில் சாலை இரண்டாகப் பிரிந்தது. ஓட்டுநர் என்னிடம் கேட்டார், “சிவகுமார் சார்! ரைட்டா லெஃப்டா?” என்று. நான் பழனியைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டுவிட்டேன். அவ்வளவுதான்!
“யார் பழனி? எனக்குத் தெரியாம வண்டியில யார் ஏறுனது? வண்டியை நிறுத்து!” என்று அலறினார் அதிகாரி.
“பக்கத்து ஊர் தலையாரி (கிராம உதவியாளர்) சார்” என்றேன்.
“யாரக் கேட்டு தலையாரிய வண்டியில் ஏத்துன? கண்ட கண்ட நாய்களையெல்லாம் ஏத்திக்குப் போறதுக்குத்தான் எனக்கு அரசாங்கம் வண்டி குடுத்திருக்குதா?” என்று தொடங்கி ஒரு ஐந்து நிமிடம் என்னைக் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சினார். அத்தோடு விடவில்லை அவர். பழனியைப் பார்த்து,
“ஏண்டா தலையாரி நாயே! என்ன திமிர் இருந்தா என் வண்டியில ஏறியிருப்ப? எறங்குடா! எறங்கி நடந்து போடா” என்று கத்திவிட்டு, என்னைப் பார்த்து,
“தாசில்தாருக்குப் ஃபோன் பண்ணி இவன சஸ்பெண்ட் பண்ணச் சொல்லுப்பா” என்று சொன்னார். அத்துடன் வாக்குச் சாவடிகளை ஆய்வுசெய்யும் வேலையை நிறுத்திக்கொண்டு வண்டியை அலுவலகத்திற்குத் திருப்பச் சொல்லிவிட்டார்.
அலுவலகம் வந்தபின்பு என்னிடம் கொஞ்சம் அமைதியாகவும் அதே சமயம் கோபத்தோடும் விசாரித்தார்.
“எதுக்குப்பா தலையாரிய வண்டியில ஏத்துன? நாளைக்கு அவன் நம்மலப் பாத்தா பயப்படுவானா? அவனயெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டாமா?”
“இல்லைங்க, சார். அந்த ஊரில் போலிங் ஸ்டேஷன்ஸ் எங்க இருகுன்னு எனக்குத் தெரியாதுங்க, சார். அத காட்டுறதுக்குத்தான் அந்த தலையாரியைக் கூட்டிட்டு வந்தேங்க, சார்” என்றேன் நான்.
“எல்லாம் தெரியும்னு சொன்னியப்பா! உன்னை நம்பி நான்வேற இன்ஸ்பெக்ஷனுக்குக் கெளம்பிட்டேன்! என்னச் சொல்லணும்,” என்று அவர்கடிந்து கொண்டிருக்கும் போதே அவரது அலைபேசி அழைத்தது. அதைப் பார்த்த அவர்,
“கலெக்டர்” என்று சொல்லிக்கொண்டே அழைப்பை ஏற்றார்.
மறுமுனையில் மாவட்ட ஆட்சியர் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்டது.
“வணக்கம், சார்!” இவர்.
“வணக்கம், வணக்கம்!” என்று சலித்துக்கொண்டே கலெக்டர் பேச எங்களது அதிகாரியின் முகம் சுண்டிவிட்டது. நேற்றுத்தான் இரண்டு முக்கியமான அறிக்கைககளை கலெக்டருக்கு அனுப்பியிருந்தோம் எங்களது அலுவலகத்திலிருந்து. மற்ற வருவாய்க் கோட்டங்களிலிருந்து அந்த அவசர அறிக்கைகள் இதுவரை அனுப்பப்படாமல் இருந்தன. எனவே தனக்கு கலெக்டரிடமிருந்து எந்த நேரத்திலும் பாராட்டுக் கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எங்களது அதிகாரி. ஆனால் எடுத்த எடுப்பில் கலெக்டர் சலிப்பாகப் பேசியதில் அவரது முகம் வாடிவிட்டது.
“பாப்பாபட்டிக் கோயில் பிரச்சினையை என்ன பண்ணிவச்சிருக்கீங்க, சோமசுந்தரம்?” கலெக்டர்.
“சார், ரெண்டுதடவ பீஸ் கமிட்டி நடத்தினேன், சார்! ஆனா…”
“நடத்தி என்னத்தக் கிழிச்சீங்க! ஒரு குரூப்பு சனங்களத் தெரட்டிக் கொண்டந்து என் வாசல்ல நிறுத்தி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்கான். இன்னொரு குரூப்பு ஹைக்கோர்ட்டுல போய் கேசப் போட்டிருக்கான். நாளைக்கு உங்களையும் தாசில்தாரையும் நேரில் ஆஜராகி விளக்கம் சொல்லணும்னு ஹைக்கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. ரொம்ப சுலபமா முடிக்க வேண்டிய விசயத்த இப்படிப் பெருசாக விட்டிருக்கீங்க நீங்களும் ஒங்க தாசில்தாரும்…”
கலெக்டரின் பேச்சு நீண்டுகொண்டே போனது. எங்களது அதிகாரி அந்நேரத்தில் நான் அங்கிருப்பதை விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும். கலெக்டரிடம் திட்டு வாங்குவதைவிட எனது முன்னிலையில் அது நிகழ்கிறதே என்பதைத்தான் அவரால் சகித்துக்கொள்ள முடியாது. நானும் என்ன செய்வேன்! அதிகாரி விடைகொடுக்காமல் அவரது அறையைவிட்டு வெளியில் செல்லமுடியாதே! அப்படித்தானே நான் பழக்கப்பட்டிருக்கிறேன்.
நான் என்ன செய்வதென்று தெரியாமல் தர்ம சங்கடமான சூழ்நிலையில் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். கலெக்டர் தொடர்ந்தார்,
“நீங்களும் தாசில்தாரும் அந்தக் கோயில் பிரச்னைய புரிஞ்சிக்கவே இல்ல. ஏதோ பேருக்கு ரெண்டு நடவடிக்க எடுத்திருக்கீங்களே தவிர அந்தப் பிரச்னையப் புரிஞ்சிக்கவோ அல்லது தீர்த்து வைக்கவோ எந்த முயற்சியும் எடுத்ததாத் தெரியல. மேட்டர் சீஃப் செக்கரெட்டரி வரைக்கும் போயிருச்சு. இங்க என்னாடான்னா மணல் லாரிகளப் பிடிச்சு காசு சம்பாதிக்கிறதுல உங்களுக்கும் தாசில்தாருக்கும் போட்டா போட்டி நடந்துக்கிட்டிருக்கு……”
இனியும் அவ்விடத்தில் நிற்பது அநாகரிகம் எனக் கருதி அதிகாரிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.
வெளியில் மன்னிப்புக் கேட்பதற்காக பழனி நின்றுகொண்டிருந்தார். மன்னிப்புக் கேட்பதற்கு இது தக்க தருணமல்ல என்பதைத் தெரிவித்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.