சிறுகதை: நான் மாதவன் இல்லை..!

உணவகத்தில் நண்பன் என்று நினைத்து பணம் கேட்ட நபர் அடைந்த அதிர்ச்சி மற்றும் எதிர்பாராத திருப்பம் நிறைந்த கதை
தமிழ் கதை | A man is speaking to another man who is eating
தமிழ் கதை | A man is speaking to another man who is eatingAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

“டேய் மாதவ! என்ன, உன்னை பார்க்கவே முடியலே?”

உணவகத்தில் தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்கவன், கூப்பிட்டவனை நிமிர்ந்து பார்த்தார். எதுவும் பேசாமல் தோசை சாப்பிடுவதைத் தொடர்ந்தார்.

அந்த உணவகத்தில் காலை எட்டு மணிக்கு அவ்வளவு கூட்டமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“அவசரமென்று காசு கேட்டே கொடுத்தேன். நானும் பல முறை கேட்டுவிட்டேன். ஒன்றும் சொல்ல மாட்டேன்றியே. எப்போது திருப்பி கொடுப்பாய் என்றாவது சொல்லுடா.”

அதற்கும் அவனிடம் ஒரு பதிலும் இல்லை.

என்ன வேண்டும் என்று கேட்ட சர்வரிடம் “ஒண்ணும் வேண்டாம் பா“ என்றுவிட்டு, “டேய் உன்னிடம் தான் கேட்கிறேன். ஏதாவது சொல்லு. போன வாரம் உன் ஆபீசுக்கு வந்திருந்தேன். சொன்னாங்களா? நீ லீவுன்னாங்க. எனக்குக் கொஞ்சம் அவசரம். அது தான் வந்தேன்."

அவனிடம் எந்தச் சலனமும் இல்லை பதிலும் இல்லை. சாப்பிடுவது ஒன்றே நோக்கமாய் இயங்கிக் கொண்டிருந்தான்.

கேட்டவன் சற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

தமிழ் கதை | A man is speaking to another man who is eating
தமிழ் கதை | A man is speaking to another man who is eatingAI Image

“என்னடா நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஒண்ணும் பேச மாட்டேன்கிற. டைம் வேணும்னா கேளு. அந்த அவசரத் தேவையை சமாளித்துவிட்டேன். அடுத்த வாரம் கூட கொடு.”

அதற்கும் அவனிடம் பதிலில்லை. பக்கத்தில் வைத்திருந்த மூன்று கிண்ணத்திலிருந்து சட்னியும் சாம்பாரும் தட்டில் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தான். கேட்டவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உல்லாசப் பயணம்!
தமிழ் கதை | A man is speaking to another man who is eating

கேட்டவனுக்கு அவமானமாக ஆகிவிட்டது. பக்கத்தில் மேஜையில் சாப்பிடுபவரைப் பார்த்தான். அவர் இவர்களது சம்பாஷனையைக் கேட்ட மாதிரியும் இருந்தது. கேட்காத மாதிரியும் இருந்தது. போனை நோண்டிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

“டேய் மாதவா நீ செய்றது சரியில்லை. ஏற்கனவே இரண்டொரு முறை கேட்டுவிட்டேன். நீ அவசரமென்று கேட்டதாலே தான் அட்ஜஸ்ட் செய்து கொடுத்தேன். இப்போ கம்முணு இருந்தா எப்படி.”

அதற்கும் அவனிடம் பதிலில்லை. இவனை அவன் நிமிர்ந்து கூட பார்க்காதது இவனை மேலும் அவமானப் படுத்தியது.

சற்று குரலை உயர்த்தி “என்னடா நான் பேசிட்டே இருக்கேன்... ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றே. என்னைப் பார்த்து பேசுடா,” என்றான்

அப்போது தாண்டிச் சென்ற சர்வரும், போன் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து மேஜை நபரும் இவனைத் திரும்பிப் பார்த்தனர். அதையும் அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரெட்டைக் காதல்..!
தமிழ் கதை | A man is speaking to another man who is eating

இவனுக்குக் கோபமும் அவமானமும் சேர்ந்துக் கொண்டது.

“நான் கொடுத்த அந்த ஐயாயிரம் தானேடா கேட்டேன். இப்படி அவமானப்படுத்திரியே. நீ நல்ல இருப்பியாடா . உனக்கு எல்லாம் உதவி செஞ்சேன் பாரு என்னை...“ என்று கோபமாகக் கத்தினான். இப்போது அந்த உணவகம் முழுவதும் இவர்களைப் பார்த்தது.

மெதுவாக நாற்காலியை நகர்த்திக்கொண்டு எழுந்த அவன், கீழேயே பார்த்தபடி “நான் மாதவன் இல்லை...” என்று சொல்லிவிட்டு கையலம்பப் போனான்.

அவனையே வெறித்துப் பார்த்தபடி என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருந்தான் இவன்.

logo
Kalki Online
kalkionline.com