

அன்று வழக்கத்தைவிட சுறுசுறுப்பாக இருந்தாள் கமலி. மகன் சந்திரன், மருமகள் ராதா, இருவரும் காலை 8 மணிக்கே ஆபீஸ் கிளம்பியதும், பேரக்குழந்தைகளுக்குத் தேவையானவற்றை தயார்செய்து, அவர்களை பள்ளி வேனில் ஏற்றிவிட்டு, ஹாலில் வந்தமர்ந்தாள். மருமகள் ராதா காலை கிளம்பும்வரை காலை, மதிய உணவுகளை முடித்துவிட்டு, சந்திரனின் ஒத்துழைப்புடன் முடிந்தவரை குழந்தைகளையும் பள்ளிக்குத் தயார் செய்துவிடுவாள். அதற்குப்பிறகு பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிடுவாள் கமலி.
இன்று திங்கட்கிழமை. பள்ளியிலிருந்து குழந்தைகள் ரேகா, சுதா இருவரும் நேராக டென்னிஸ் பயிற்சி வகுப்பிற்கும், நடன பயிற்சி வகுப்பிற்கும் சென்றுவிடுவர். இப்படி வாரத்தில் 2 நாட்கள் செல்வர். இது தவிர சில நாட்களில் கணிதம், வேறு மொழி வகுப்புகள் என்ற 'ஆன்லைன்' வகுப்புகளும் உண்டு. சனி ஞாயிறுகளில் மாதம் இருமுறை நீச்சல் பயிற்சி வகுப்பு என்றால் விடுமுறைகளில் 'வெகேஷன் கேம்ப்'. கால மாற்றத்திற்குத் தேவையான வாழ்க்கைமுறை தற்போதைய குழந்தைகளுக்கு அவசியமாகிவிட்டது. 'கல்வியோடுகூட மற்ற திறமைகளையும் வளர்த்துவிட்டால் எதிர்காலத்துல அவங்க தகுதிக்கு ஏற்றவாறு அவங்க 'ஷைன் ஆவாங்க' என்பது தற்போதைய பெற்றோர்களின் யதார்த்தமான எண்ணம்.