சிறுகதை: கபடானந்தா!

கபடானந்தா
கபடானந்தாImg credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

ஓய்வு பெற்ற ஆசிரியர், குப்புசாமி தன் மனைவி கமலாவிடம் கேட்டார். "ஏன் கமலா.. சுவாமி பூஜ்ய ஸ்ரீ நித்ய கபடானந்தா வருகைன்னு போட்டு நன்கொடை கட்டணம் ₹200 போட்டிருக்கே.. நோட்டீஸில்.. போகலாமா அவர் பேச்சைக் கேட்க..?"

கமலா கேட்டாள், "நோட்டீஸில் சாமியார் முகத்தைப் பார்த்தீங்களா.."

"பார்த்தேனே அருள் பாலிக்கும் முகம்.. கண்ணில் என்ன ஒரு பிரகாசம்.."

"ஐயே.. அந்த ஆளு என் சினேகிதி மாலாவோட புருஷன் மாசிலாமணி. தூரத்து சொந்தம்ன்னு கட்டி வச்சாங்க. கம்ப்யூட்டர் படிச்சவன். வேலை வெட்டி இல்லாமல் மாலா சம்பாத்தியத்தில் காலம் தள்ளிக்கிட்டு இருந்தான். ஏதோ கம்ப்யூட்டர் சென்ட்டர் வச்சிருந்தான். செல் போன் ரிப்பேர் பார்த்தான். இயற்கை மருத்துவம் பார்க்கறேன்னு ஒரு போர்டு வச்சிக்கிட்டு பச்சிலைகள் வித்தான்.

எதையும் ஒழுங்கா பார்க்காமல் மாலா போட்ட முதலீடுகள் அத்தனையும் நஷ்டத்தில் முடிஞ்சுது. புலம்புவாள் என்னிடம் போனில். கொஞ்ச நாள் ஆள் காணவில்லை. வடக்கே பீகார் பக்கம் போயிட்டான். இவளும் நிம்மதியா இருந்தாள். ஆன்மீகத் துறவி இப்போ.. கொஞ்சம் சிஷ்ய கேடிகளுடன் வந்து இங்கே முகாம். சிஷ்யைகளும் இருக்காளுங்க.. மாலா சொன்னாள். பெங்களூர் பக்கம் 100 கி.மீ தள்ளி கிராமத்தில் ஒரு மடம் கட்டிக்கிட்டு இருக்கானாம்"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: திண்ணையைக் காணோம்!
கபடானந்தா

"ஹும்.. யாரை நம்பறது."

அன்று மாலை நண்பர்களிடம் நோட்டீஸைக் காட்டி விஷயத்தைச் சொன்னார். நண்பர் ரிடையர்டு பிரெஞ்ச் ஆர்மி கர்னல் கந்தசாமி கேட்டார் "ஏன் சார் பூஜ்யஸ்ரீ ன்னு பட்டம் போட்டிருக்கே. அது நல்ல பட்டமா.. கெட்ட பட்டமா.." ரிடையர்டு ஆர்க்கியாலஜிஸ்ட் நாக முத்து சாமி சொன்னார் "அது வணக்கத்திற்குரிய, பூஜைக்குரிய" ன்னு அர்த்தம்.

"ஓஹோ. .பூஜ்யம்ன்னதும் சூன்யம்.. ஞான சூன்யம்-ன்னு நினைச்சேன்..." என்றார் கந்தசாமி.

கபடானந்தா அருளுரை வழங்கும் மண்டபம் பார்க் வாசலுக்கு எதிரில் தான். இவர்கள் மூவரும் வெளியே வந்த போது இரண்டு சீடர்கள் "சார் உள்ளே வாங்க.. சுவாமிஜி பேசப் போறார்.."

"வேண்டாம்.. டிக்கெட் வாங்க பணம் எடுத்து வரலே..."

"அது டிக்கெட் இல்லே.. நன்கொடைதான்.. இஷ்டப்பட்டு நீங்க தர்றது.. வாங்க பேச்சைக் கேளுங்க."

சரி என்று மூவரும் உள்ளே போனார்கள்.

சாமியார் இன்னும் வரவில்லை. கூட்டம் என்று எதுவும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக முப்பது பேர் இருப்பார்கள்.

ஒரு சீடர் ஒரு ட்ரேயில் கூல் டிரிங்க்ஸ் எல்லோருக்கும் தந்தார். மற்றவர் கொஞ்சம் அல்வா தந்த படி வந்தார். "ஓ..பிரசாதம்.!"

பின்னாலேயே ஒரு சீடர் பில் புத்தகம் போல் ஒரு புத்தகத்துடன் நன்கொடை வசூலித்து வந்தார். ஒருவர் வந்தவர்கள் பெயர், விலாசம், பிறந்த தேதி, நட்சத்திரம், செல் நம்பர் எழுதச் சொன்னார் ஒரு நோட்டில். இப்போது கூட்டம் ஓரளவு கூடிவிட்டது.

சுவாமி வந்தார். பேச்சை ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:
தாம்பாளத்தில் தாளம் போட்டு தமிழ் வளர்த்த மேதை!
கபடானந்தா

"அன்பர்களே.. போஸ்ட்டரில், நோட்டீஸில் என் பெயர் கபடானந்தா என்று இருப்பதை வைத்து என்னை ஒரு ஏமாற்றுக்காரன் என எண்ணாதீர்கள். எழுத்துப் பிழை. புள்ளி இல்லை. உண்மையில் அது கப்டா னந்தா. கப்டா என்றால் துணி வட மொழியில்... இந்த உடல் இருக்கே அது ஆத்மாவுக்கு ஒரு உறை, சட்டை. கப்டா துணி, துணி நாளாக நாளாக துவைத்தால் நைந்து கிழியும். இந்த உடலும் அப்படியே வயதாக வயதாக தேயும். தினம் குளிக்க குளிக்க சோப்பு மட்டும் கரையாது. உங்கள் வாழ் நாளின் எண்ணிக்கையும் தான். வயதானால் எலும்பு சதை பலவீனமாகும். சர்க்கரை, உப்பு, கொழுப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் சேர்ந்து நைந்து ஆத்மா இந்த சட்டையை நீக்கி புது கப்டா தேடிப் போய் விடும்."

குப்புசாமிக்கு, "இது ஜெயகாந்தன் அவர்களின் சட்டை எனும் கதை ஆச்சே. பிளஸ் 2 ல் பசங்க பாடபுத்தகத்தில் வந்தது அல்லவா..." எனத் தோன்றியது.

"அட சாமி தத்துவமாதான் பேசறார்..", என நண்பர்கள் மூவரும் பேசிக் கொண்டார்கள்.

பழைய கண்ணதாசன் சினிமா பாடல் வரிகளை தத்துவம் போல விளக்கிப் பேசினார் சாமி. அர்ஜுனன் யுத்த களத்தில் திகைத்து நின்றான். மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா. மரணத்தின் தன்மை சொல்வேன் எனப் பாடினார். நல்ல குரல் வளம். சீர்காழி நேரில் வந்து பாடினாற் போல் இருந்தது. ஒரு நாள் ஒரு பொழுதாகினும் சிவன் நாமம் உச்சரிக்க வேணும். ஜென்மம் கடைத் தேற எனப் பாடினார் எம். கே. தியாகராஜபாகவதர் குரலில்.

அரை மணி நேரம் பேசி விட்டு எல்லோருக்கும் விபூதி தந்தார். வணங்கி பெற்றுக்கொண்டார்கள். பெண்கள் ஆடியன்ஸ் நிறைய. காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்தப் பட்டுப் புடவை கட்டிய பெண்களும் டை கட்டி கோட் சூட் போட்ட ஆண்களும் சுவாமியின் சிஷ்யர்களே என அப்புறம் தான் தெரிந்தது. எல்லோரும் லேப் டாப் வைத்து இருந்தார்கள் சுவாமி உட்பட. டெக்னாலஜி ஆன்மீகத்திலும் வந்து விட்டது.

"அன்பர்களே.. எல்லோரும் தங்கள் கை பேசியில் ஒரு ஓ. டி. பி வரும். அதை சொல்லிச் செல்லுங்கள். ஆசிரமத்தின் புத்தகங்கள், ஸ்படிக மணி மாலை, இலவசமாக அனுப்ப இணையத்துக்கு அது தேவை."

குப்புசாமி, கர்னல், நாகமுத்துசாமி மூவரும் கொஞ்சம் தயங்கினார்கள். "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது சார் கொடுங்க" என்றார் பக்கத்தில் உட்கார்ந்த கோட் சூட் அணிந்தவர்.

இதையும் படியுங்கள்:
வேட்புமனுத் தாக்கலின் பண்பாடும் வாகன முகப்பு விளக்குகளும்...
கபடானந்தா

"கூல் டிரிங்க்ஸ் முப்பது, அல்வா ஐம்பது இப்படி பார்த்தால் ஒருத்தருக்கு என்பது ரூ செலவு சுவாமிக்கு" கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போவதற்குள் ஒவ்வொருவர் பென்ஷன் பேங்க் கணக்கில் பத்தாயிரம் உருவப்பட்டிருந்தது. மூவரும் போலீசில் புகார் அளிக்கப் போனால் அங்கே பெரும் கூட்டம்.

கப்டானந்தா உண்மையில் ஒரு கபட ஆனந்தா.

ஓ. டி. பி வைத்து ஒவ்வொருவர் கணக்கிலும் வரும் எஸ். எம். எஸ் செய்தியும் தனக்கு ஃபார்வார்டு ஆகும்படி சிம் ஸ்வாப் செய்து பணம் எடுத்து விட்டான்.

பெங்களூர் போலீஸ் விரைந்தது. கிராமத்து ஆசிரமத்திற்கு போனால் அங்கு வயதான ஒரு சாமி படுத்து இருந்தார். அவரே நிஜ கப்டா ஆனந்தா என அறிந்தார்கள்.

அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத வயோதிக நிலை. 110 வயசு அவருக்கு. கமலா மாலாவுக்கு போன் செய்தாள்.

மாலா சொன்னாள் "என் புருஷன் தான். அவன் ஃப்ராடு. வெளி நாடு போறதுக்குள் பெங்களூரு விமான நிலையத்தில் பிடிச்சிட்டுது கிரைம் பிராஞ்ச் போலீஸ். சட்டை இல்லாமல் ஸ்டேஷனில் உட்கார்ந்திருக்கான்; அவன் கோஷ்டியோட பணம் வந்திடும் கவலைப் படாதே. மூணு கோடி கேஷா பிடி பட்டு இருக்கு."

"ஓ.. அப்போ நம்ம கப்டா ஆனந்தா... மாசிலாமணி "கப்டா லெஸ் " ஆனந்தா ஆயிட்டாரா!" என்றார் கர்னல் கந்தசாமி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com