

விதி பிரித்த வாழ்க்கைகளை அன்பும் நம்பிக்கையும் ஒன்றாக இணைக்கும் திருமண நிகழ்வு.
வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல சாரதா பூஜைத் தட்டுகளையும் பிரசாதங்களையும் எடுத்துவைத்து கொண்டு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு சென்று, போன வாரம்தான் இந்தியா திரும்பியிருந்தார். வாரம் தவறாமல் அம்பாளை தரிசித்து விடுபவர் சாரதா. ஆனால் இந்த முறை, ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கோவிலுக்கு செல்கிறாள்.
கோவிலுக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் ஒரு வீட்டின் முன் டிரைவர் காரை நிறுத்தியதும், இறங்கிய சாரதாவிற்கு வியப்பாக இருந்தது.
அந்த வீடு ஒரு பழமையான திண்ணை வீடு. திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து பூக்களை கட்டி விற்பாள் கெளரி. அவளது கணவர் தள்ளுவண்டியில் பொருட்கள் விற்பவர். அவர்களது மகள் ராதாவும் அவ்வப்போது அம்மாவுடன் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருப்பாள்.
கெளரியை சாரதாவிற்கு கடந்த பத்து ஆண்டுகளாகப் பழக்கம். கோவிலுக்கு அருகில் பெரிய கடைகள் நிறைய இருந்தாலும், சாரதா பூவும் மாலையும் கெளரியிடம்தான் வாங்குவார்.
கார் வந்து நின்றதும், “வாங்கம்மா…” என்று முகம் மலர்ந்து ஓடி வருவாள் கெளரி. சாரதா வழக்கமாக வாங்கும் பூக்களையும் மாலைகளையும் அழகாக வாழையிலையில் கட்டித் தருவாள்.
சாரதா எப்போதும் அம்பாளுக்கு பிரசாதம் செய்து கொண்டு வருவார். கெளரிக்கென்று தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டு வருவது வழக்கம்.
“இந்தாம்மா கெளரி… ராதாவுக்கும் உனக்கும்…” என்பார்.
“என்னம்மா இது… அம்பாளுக்கு பூஜை செய்துட்டு கொடுங்க…” என்பாள் கெளரி தயக்கத்துடன்.
“அட பிடி… ராதா சின்னப் பொண்ணு… அம்பாள் மாதிரிதான்…” என்று சிரித்துக்கொண்டே பணத்தையும் கொடுத்து கோவிலுக்குள் செல்வாள் சாரதா.
ஆனால், இன்று கெளரியின் முகத்தில் அந்த வழக்கமான சிரிப்பு இல்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி பூ கட்டிக்கொண்டிருந்தாள்.
சாரதா அருகில் சென்று,
“என்னாச்சு கெளரி? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.
திரும்பிப் பார்த்த கெளரியின் கண்கள் கலங்கின.
“வாங்கம்மா…” என்றவள் குரலில் சோர்வு தெரிந்தது.
“ஏன் கெளரி? என்ன விஷயம்? ராதா எங்கே? காலேஜ் போய்ட்டாளா?”
அதைக் கேட்டவுடன் கெளரி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“அம்மா… நீங்க அமெரிக்கா போயிருந்த நேரத்துல… எங்க வாழ்க்கையே மாறிடுச்சும்மா…”
சாரதா பதறி அவள் அருகில் அமர்ந்தாள்.
“ராதாவுக்கு நல்ல வரன் வந்துச்சு. அவசரமா கல்யாணம் பண்ணி வைச்சோம். ஆனா… அந்த சந்தோஷம் ஒரு மாதம்கூட நீடிக்கலம்மா…”
குரல் உடைந்து நின்றது.
“கல்யாணம் ஆன பதினைந்து நாள்லேயே மாப்பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக்… உயிரே போயிடுச்சு…”
சாரதாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“அதுக்கப்புறம் ராதா வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேங்குது. நாங்க ரெண்டு பேரும் அவளுக்காகத்தான் உயிரோட இருக்கோம். மனசே உடைஞ்சு போய்டுச்சு அம்மா… இப்பதான் இந்த மாதம் முதல் மீண்டும் பூ கட்ட ஆரம்பிச்சிருக்கோம்…”
கெளரியின் அழுகை நிற்கவே இல்லை.
அன்று முழுவதும் சாரதாவிற்கு ராதாவின் முகமே நினைவில் இருந்தது.
“ஒரு பெண்ணின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்து போக வேண்டுமா?” என்ற கேள்வி அவளது மனதை விட்டு அகலவில்லை.
சில வாரங்கள் கழித்து…
திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.
மேடையில், சாரதாவின் மகன் சங்கர் மணமகன் கோலத்தில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ராதா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மண்டபம் முழுவதும் கிசுகிசு.
“இவங்க அந்தஸ்துக்கு பூக்காரியை மருமகளா ஆக்கிருக்காங்க பாரு…”
“என்ன காரணமோ…”
“பணக்கார வீட்டு பையனுக்கு பெண் கிடைக்கலையா?”
என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.
திருமணம் முடிந்ததும் மேடைக்கு வந்த சாரதா மைக்கை எடுத்தாள்.
அங்கு அமைதி நிலவியது.
“இவங்க என் சம்பந்தி வீட்டார்… ராதாவோட அப்பா அம்மா…” என்று கெளரியையும் அவள் கணவரையும் அருகில் நிறுத்திக்கொண்டாள்.
“என் மகன் சங்கருக்கு பணமும் அந்தஸ்தும் இருக்கிறது. ஆனாலும் கல்யாண சந்தையில் அவன் மனசை யாரும் பார்க்கலை.
இதோ ராதா… வாழ்க்கையின் முதல் படியிலேயே விதியால் கடுமையாக சோதிக்கப்பட்டாள்.
வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால் பணமே பிரதானம் என்றும், கல்வியில் சிறந்து இருந்தால் மட்டுமே உலகில் வாழ முடியும் என்றும் சமூகம் உருவாக்கிய ஒரு பொய்யான மாயை இருக்கிறது.
அந்த மாயைக்கு மாறாகத்தான் இன்று இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது அவர்களின் பணமோ படிப்போ அல்ல… நல்ல மனசும் மனிதத்துவம்தான்.
அதை நம்பித்தான் இந்த இரண்டு பேரையும் நான் இணைத்திருக்கிறேன்.
இது நான் போட்ட முடிச்சு இல்லை… கடவுள் போட்ட முடிச்சு.” என்று சொல்லி ராதாவின் கையை பிடித்து சங்கரின் கையில் வைத்தாள் சாரதா.
அந்த நொடியில், மேடையில் இருந்த பல கண்களில் கண்ணீர் மிளிர்ந்தது.