

"எல்லாம் சரி மச்சி! எனக்கு நூறு ரூபா குடுடா?"
உடனே இல்லை என்று சொன்னான் சூரி.
"டேய்.. ரொம்ப டிராமா போடாத? 100 ரூபாயை கொடுத்துவிடு. இல்லன்னா நம்ப பிரண்ட்ஷிப்பை இழக்க நேரிடும்" இப்படிக் கூறிய மதியை ஒரு அரை விட்டான் சூரி.
"இதோ பார்..! இதுதான் முதலும் கடைசியும், நான் இனிமேல் பணம் கொடுப்பதாக இல்லை" மேலும் தொடர்ந்தான்...
"இனிமேல் இதே மாதிரி யார் கிட்டயும் நீ கேட்பது தெரிந்தால் என் அப்பாவிடம் சொல்லி உன்னை இந்த கல்லூரியில் இருந்து நீக்கி விடுவேன். ஜாக்கிரதை!"
இதை சற்றும் எதிர்பாராத மதி, "டேய்.. உங்க அப்பா டி.எஸ்.பி. என்கிற நினைப்பில் என்னை மிரட்டுகிறாயா?"
இப்போது அடி அடுத்த கன்னத்தில் மிகவும் காட்டமாக விழுந்தது.
நிலைகுலைந்த மதி தட்டு தடுமாறி "மாமே..! என்னை மன்னிச்சுக்கோ? தெரியாமல் சொல்லிட்டேன். இனிமேல் நம்ம பிரண்ட்ஷிப்பே வேண்டாம். என்னை என் பாதையில் போகவிடு.
"டேய் லூசு! உன்னை தடுப்பதற்கு நான் யாரு. உன் முயற்சி படி உன் வாழ்க்கை அமையப் போகிறது. அதில் எனக்கு ஒன்றும் பொறாமை கிடையாது. நான் பெருமைப்படும் அளவிற்கு நீ வளர்ந்தால் அது எனக்கு சந்தோசம் தான்" இவ்வாறாக பேசிவிட்டு தன் வகுப்பிற்கு சென்றான் சூரி.
சுற்றியும் யாரும் இல்லாததால் சுகாரித்துக் கொண்டு வகுப்பறைக்கு பின் தொடர்ந்தான் மதி.
ஆசிரியர் மதியைப் பார்த்து, "என்ன ரொம்ப தீர்க்கதரிசனமா இன்னைக்கு வந்து இருக்கீங்க.." என்று கேட்டார்.
வகுப்பில் எல்லோரும் சிரித்தனர்.
"ஆமாம் சார்.. எனக்கு ஞானம் பிறந்து விட்டது என் வழி இனி தனி வழி கிடையாது!"
இனி எல்லோரிடமும் சேர்ந்து பயணித்து படித்து இந்த கல்லூரிக்கும், என் சக ஆசிரியர்களுக்கும், என் மாணவர்களுக்கும், என் குடும்பத்திற்கும், ஏன் என் நாட்டிற்கும் இன்று முதல் என்னை நான் மாற்றிக் கொண்டு விட்டேன்".
"அடே! பலே!! புத்தருக்கு போதி மரத்துல ஞானம் கிடைத்தது போல மதிக்கு இந்தக் கிளாஸ் ரூம்ல ஞானம் கிடைத்திருக்கு போல!'
மதி இவ்வாறு பேசியது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.
"பார்ப்போம்!!" என்று சொல்லி ஆசிரியர் தன் வகுப்பை தொடர்ந்து நடத்தினார்.
காலங்கள் உருண்டோடின...
கல்லூரியின் கடைசி நாள்..
எல்லோருக்கும் நல்ல மதிப்பெண்கள் இருந்ததால் தேர்ச்சி என்பது 100% சந்தேகமே கிடையாது. ஆனால் அவர்கள் மனதில் ஒரு பெரிய வெறுமை தெரிந்தது.
கடைசியாக மதி பேசினான்...
"நண்பர்களே!! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்! நான் குடித்தது மட்டும்தான் உங்களுக்கு தெரிந்தது. அதற்கான காரணம் சொல்லி நான் ஒரு நியாயம் கற்பிக்க விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன். தயவுசெய்து கேளுங்கள்! 'எனக்கு யாரும் இல்லை' என்று நினைத்தபோது எனக்காக கிடைத்த நண்பன் தான் சூரி. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை; அன்பு காட்ட அம்மா இல்லை; அப்பாவிற்கு குடிப்பதற்கு மட்டுமே நேரம் இருந்தது. இப்படியாக எல்லாம் இல்லாத போது, எனக்கு எல்லாமே இருப்பது போன்று கிடைத்தவன் தான் என் சூரி. என்னையும் ஒரு மனிதனாக மதித்து, எனக்கு பண உதவி செய்து, படிப்புக்கு வழிகாட்டி, என்னை உயர்த்துவதற்கு தன்னலம் பாராமல் உழைத்த என் நண்பனை நான் இன்று நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவன் எனக்கு செய்த மற்ற உதவிகளை விட நான் பெரும் பேராக கருதியது அவன் எனக்காக செலவிட்ட பல மணி நேரங்கள். தினமும் என்னிடம் குறைந்தது இரண்டு மணி நேரம் பேசுவான். பேச்சில் ஒரு அக்கறை இருக்கும்; ஒரு அன்பு இருக்கும்; ஒரு அரவணைப்பு இருக்கும்; நான் இருக்கிறேன் என்கிற ஒரு தன்னம்பிக்கை இருக்கும்!
ஒட்டு மொத்தமாக சொன்னால், என் அப்பா, அம்மா இருவருமாக இருந்து செயல்பட்ட சூரி என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெளிச்சம். இந்த வெளிச்சமானது என் உயிர் உள்ளவரை பிரகாசமாக எரிந்து, என் நாட்டிற்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பனுக்கும் எப்பொழுதும் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும்.
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நான் படிக்கும்போதே ஐ.எஃப்.எஸ் அதாவது இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ்-இல் பாஸ் பண்ணி விட்டேன். என்னுடைய இலக்கு இயற்கை பாதுகாத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, இதன் மூலம் மானுடம் செழிக்க என்னால் ஆன சிறிய உதவி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையின் அர்த்தத்தை என்னுடைய சூரி சொல்லாமல் செயலால் செய்து காண்பித்தான்.
நான் அறிவால் என் ஆணவத்தை ஒழித்து என்னை ஆளாக்கிய இந்த சமுதாயம் ஒரு நல்ல சமுதாயமாக மறுமலர்ச்சி அடைய இந்த பிரிவு உபசார விழாவில் உங்களிடம் ஒரு நிபந்தனையை விதிக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையை, ஒரு அர்த்தமுள்ள, அமைதியான, அழகான, வாழ்வியலை உண்டாக்க ஒழுக்கத்தை முதல் கல்வியாக கொண்டு செயல்பட வேண்டும்! என்பதே. இதுவே நம் குடிக்கின்ற பழக்கத்தை மறந்து நம் குடியை உயர்த்தும் ஒரு சாமானியனுடைய சாளரம். என்னுடைய சாளரம் எப்போதுமே திறந்திருக்கும். வாருங்கள்! சேர்ந்து பயணிப்போம் சமுதாயம் மேம்பட.. பல சூரிகள் நமக்கு கிடைத்திட..! நன்றி..!"
நண்பர்கள் பிரிந்தனர்; ஆனால், அவர்களுடைய இதயங்கள் இனி ஒன்று சேர்ந்து இயங்கும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வரப்போவது கிடையாது.