

அன்று அவசரமாய் ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்தது. பேருந்துப் பயணம் காலத்தை அறுதியிட்டுக் கூற முடியாததாக இருந்தது. நெடுஞ்சாலையின் வழியெங்கும் பாலங்கள் கட்டுமானப் பணியினால் இன்ன நேரத்திற்கு ஊருக்குப் போய்ச்சேர்வது என்பது நிச்சயமற்றதாய் இருந்தது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9.40 மணிக்கு பாண்டியன் புறப்படும். நிச்சயம் அதிகாலை 5.30 மணிக்குள் மதுரையை அடைந்துவிடலாம். நண்பர் ஒருவர் இரண்டு மணி நேரம் முன்னதாகச் சென்றால் முன்பதிவற்ற பெட்டியில் இடம் கிடைப்பது நிச்சயம் என்று சத்தியம் செய்தார். நானும் 7.40 மணிக்கே எக்மோர் சென்று சேர்ந்தேன். சோழனாக வந்த வண்டி பாண்டியனாகத் திரும்பும் முன் சற்று இளைப்பாறும் நேரமது. பெட்டியில் ஏறி அமர்ந்த முதல் முப்பது பேரில் நானும் ஒருவன். ஜன்னலோர தனி இருக்கை கிடைத்துவிட்டது.
இரவு 7.40 மணியிலிருந்து வண்டி புறப்பட்ட 9.41 வரை ஒவ்வொரு நிமிடத்திலும் புதிது புதிதாக ஆட்கள் ஏறிக்கொண்டே இருந்தனர். இருக்கைகள் நிரம்பி வழியத் தொடங்கின. ஒவ்வொருவர் உள் நுழையும் போதும் சிற்சில நா(வா)க்குவாதங்கள் கிளம்பி அடங்கின. உயரம் குறைவான மாற்றுத்திறனாளி ஒருவர் தன் அம்மாவுடன் வந்தார்.
வண்டியில் அவர்களுக்கான தனிப்பெட்டி இருப்பதைக் கூறியும் இந்தப் பெட்டியில் தான் அமர்வதற்கு இடம் கோரி அம்மாவும் பெண்ணுமாய் தங்களைப் பொருத்திக்கொண்டனர்.
இருக்கைகளுக்கே வராமல் ஒரு குடிமகன் பெட்டிக்குள் ஏறும் வாசலுக்கு நேராய் லோஹிப் ஜீன்ஸ் பேண்ட்டுடன் மல்லாக்கப் படுத்துவிட்டார். யாருக்கும் அவரை எழுப்பத் தைரியம் இல்லை.
ஒவ்வொரு நிமிடமும் இதற்குமேல் இந்தப் பெட்டியில் யாராலும் அமர முடியாது என்று நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும், யாராவது ஒருவர் உள்வருவதும் சுமைகளுக்கான பலகைகளை ஆக்கிரமிப்பதுமாய் நேரம் கடந்தது. மிகவும் வயதான ஒரு மூதாட்டியும் அவளது மகளும் பெரிய கட்டைப்பைகளுடன் உள்நுழைந்தனர்.
எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எப்படி இவர்களுக்கு இவ்வளவு நம்பிக்கை. இன்னுமா இந்தப் பெட்டியில் இடம் இருக்கிறது. உட்கார்வதற்கான வாய்ப்பே இல்லையே. கவலைப்பட்டுக்கொண்டிருந்தது நான்தான். எப்படி எப்படியோ இடங்களை உருவாக்கி தமக்கான பயணத்தை உறுதியாக்கிக்கொண்டனர். நான் முதலில் உள்நுழைந்தவன். எனக்கான இருக்கையைத் தக்கவைத்துக்கொண்டேன். தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காகக்கூட கீழே இறங்கவில்லை.
பாதையில் படுத்திருந்த குடிமகனுக்குச் சரிக்குசமமாய் நாலைந்து இளந்தாரிப் பையன்கள் வண்டிக்குள் ஏறினர். மல்லாக்கப் படுத்திருந்த குடிமகனை எழுப்பி சலம்பிக்கொண்டிருந்தனர். நானும்தான் தண்ணியடிச்சிருக்கேன்.
அதுக்காகப் போற வார பாதையிலயா படுப்பாக என்று தள்ளுமுள்ளு சண்டை. மதுரைக்குத்தானே வர்ற... அங்கே வந்து பார்த்துக்கலாம் என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டனர்.
மல்லாக்கப் படுத்து எழுந்திருந்து இடையூறாய் இருந்தவருக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர். எப்பொழுது சண்டை முற்றுமோ என்று பயமாய் இருந்தது. ஐந்து நிமிடத்திற்கொரு முறை இரு அணியினரும் சற்று ஓங்கிப் பேசுவதும் பின்னர் சத்தம் குறைவதுமாய் கடந்துப்போனது.
வண்டி புறப்பட்டு நகரத் தொடங்கியபோதும்கூட ஒரு இளைஞன் தூக்க இயலாத பை ஒன்றை முதுகில் தாங்கி உள்நுழைந்தான். உட்கார இடமில்லாத நிலையில் நின்றுகொண்டே முதுகுப்புறப் பையால் பலரையும் வதைத்துக்கொண்டிருந்தான். கட்டைப்பை அம்மாவுடன் வந்திருந்த பெண் நானாவது தரையில உக்காந்துக்கறேன்.
இந்த வயசான ஜீவனுக்கு ஒக்காரக் கொஞ்சம் இடங் கொடுங்க என்று அங்கலாய்த்து ஒரு இடத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார். மாற்றத்திறனாளிப் பெண் தன் அம்மாவுடன் டிபன்பாக்சில் கொண்டு வந்திருந்த இட்லியைத் தக்காளிச் சட்னியுடன் சாப்பிடத் தொடங்கினார்.
நேரம் செல்லச்செல்ல பெட்டியில் ஒருவருக்கொருவர் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.
"ஏய்! புள்ளத்தாச்சிப் பொண்ணு உன்னால இந்த நெரிசல்ல நிக்க முடியாது. நீ கொஞ்சம் நேரம் உட்காரு." ஒரு நடுத்தர வயதுப் பெண்மனி இடம் கொடுத்துவிட்டு இருக்கைக்குக் கீழே கால்களை நீட்டி தரையில் உட்கார்ந்துகொண்டார்.
"ஏம்பா தம்பி... அந்தப் பையைக் கீழே இறக்கி வைக்கலாம்ல. எவ்வளவு நேரம்தான் சுமந்துகிட்டிருப்ப?" சுமைக்கான மரப்பலகைகளில் உட்கார்ந்திருந்தவர் சற்று இடம் கொடுத்தார்.
மற்றுமொரு சுமைக்கான பலவையில் மேலே ஏறி உறங்கிக்கொண்டிருந்த ஒரு பையனை எழுப்ப, "வேண்டாம். அவனுக்குக் காய்ச்சல் அடிக்கிறது. சற்று ஓய்வெடுக்கட்டும்" என்று உடன் வந்தவர் கூற, யாரும் அதை எதிர்க்கவில்லை.
நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் குடிமகன்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சமரசமாகி மாமா, மச்சான் என்று பேசிக்கொண்டிருந்தனர். அந்தப் பெட்டியின் இருக்கைகள் மிகவும் நெகிழ்வானதாகத் தோன்றின. ஜனத்திரளின் வெக்கை பின்னிரவின் குளிர்காற்றைப் போல ஒருவருக்கொருவர் காட்டிய பரிவுப் பேச்சால் தணியத் தொடங்கியது. நான்தான் அந்தப் பெட்டியின் ஆன்மாவிற்குப் பொருந்தாத முகமாய் இறுக்கமாய் அமர்ந்திருந்தேன்.