

வீட்டைப் பூட்டிய முருகையா, இரண்டொரு முறை பூட்டை இழுத்துப் பார்த்து செக் செய்தார். சின்ன திருப்தி முகத்தில் இழையோட, மனைவி விஜயத்தின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு, மனைவியின் அருகிலேயே நடந்து ஆட்டோவில் ஏறினார்.
ஒவ்வொரு ஆண்டும் குல தெய்வக் கோயில் திருவிழாவிற்குச் செல்வதை அவர்கள் வாடிக்கையாக வைத்திருந்தனர். முருகையா ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி நிமித்தம் டவுனுக்கு வந்தவர்; அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்.
அவருக்கு ஏனோ இறைவன் புத்திர பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. அதனால்தானோ, அவர் தன் மாணவர்களைச் சொந்தப் பிள்ளைகளாகக் கருதிப் பாடங்களோடு சேர்த்துப் பண்பையும் கற்பித்தார். பல சமயம் அவர் நினைத்துக் கொள்வதுண்டு, தனக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கவும் அதுதான் காரணமோவென்று!
கடந்த 30, 40 ஆண்டுகளில் அவர் வசித்த பகுதி அலாதி புகழ் பெற்று விட்டது.
தனி வீடுகள் குறைந்து ப்ளாட்டுகள் முளைத்தன. ஐந்தாறு மாடிகள் கொண்ட வீடுகள் ஏகமாகப் பெருகி விட்டன. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக அவர் வாழ்ந்த வீட்டை ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் வாங்கி, விசாலமான ஐந்து மாடிகள் கொண்ட வீட்டைக் கட்டி, கீழே ஒரு வீட்டை அவருக்குக் கொடுத்து விட்டு, மீதியை விற்று விட்டார்கள்.
அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமாக அவ்வீடுகளில் குடியேறி விட்டார்கள். நேர்மையிலும், எளிமையிலும் வளர்ந்து வாழ்ந்த அவருக்கு, அவர்களின் படாடோபங்கள் அந்நியமாகத் தோன்றின. மனதுக்குள் புழுங்குவதைத் தவிர அவரால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அந்தப் பகுதி வளர்ந்த அளவுக்கு அதிகமாகவே திருட்டும், நேர்மையின்மையும்கூட வளர்ந்து விட்டன.
பணி ஓய்வுக்குப் பிறகு, திருவிழாவிற்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு வாரமாவது ஊரில் தங்கி அனைவரையும் பார்த்து விட்டே முருகையா தம்பதி திரும்புவர். ஆனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அவர்கள் பகுதியில் அதிகமாகத் திருட்டு போவதால், ஊரில் நிம்மதியாகத் தங்க முடிவதில்லை. இம்முறை, புறப்படும் முன் அவர் ஓர் உபாயம் செய்தார்! ஹாலில் உள்ள டேபிளில், கண்ணில் உடனடியாகப் படும் விதமாக, ஒரு கடிதத்தை எழுதி வைத்தார்!
“திருட வந்திருக்கும் முகந்தெரியாத நண்பரே! பலத்த சிரமப்பட்டே உள்ளே வந்திருப்பீர்கள். நானோ பணி ஓய்வு பெற்ற ஏழை வாத்தியார். என்னிடம் பணமோ, நகைகளோ இல்லை. இருந்தாலும் வீட்டிற்கு வந்த உங்களை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாததால் இத்துடன் ரூ 2000/- வைத்துள்ளேன். எடுத்துக் கொள்ளுங்கள்.
பீரோ, கதவுகளைச் சிரமப்பட்டு உடைக்க வேண்டாம். அது நம் இருவருக்குமே சிரமம் தரும் விஷயம். உங்களுக்கு வேண்டுமானால் ஓர் ஐடியா கொடுக்கிறேன். மூன்றாவது ப்ளோரில் அரசியல்வாதி ஒருவர் குறுக்கு வழியில் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். ஐந்தாவது மாடியில் உள்ள அதிகாரி, லஞ்சத்தில் லட்சக் கணக்கில் கொழிக்கிறார். அங்கெல்லாம் நீங்கள் எவ்வளவு அடித்தாலும், அவர்கள் வெளியில் கூட சொல்ல மாட்டார்கள். அவ்வளவும் கள்ள வழிகளில் வந்த பணம். உங்களுக்கும் ரிஸ்க் குறைவு.”
ஐந்தாறு நாட்களில் ஊர் திரும்பிய முருகையா, பயத்துடனே கதவைத் திறக்க முற்பட, அது திறக்கப்பட்டு, பூட்டாமல் மூடப் பட்டிருந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று, டேபிளைப் பார்த்தார். ஒரு பேப்பரும், பக்கத்தில் சிறிய பையும் இருக்க, பேப்பரை எடுத்தார்.
அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது...
“ஆசானே! உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. உங்களை நான் மானசீகக் குருவாகவே கருதுகிறேன். பணியில் இல்லாதபோதும், நீங்கள் நல்ல வழிகாட்டி என்பதை நிரூபித்து விட்டீர்கள். பையில் 5 லட்சம் வைத்துள்ளேன். எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி குருவே!”
மனைவி விஜயத்திடம் மகிழ்ச்சியுடன் கூறினார் வாத்தியார்! ”விஜி! இந்தத் தொழில்ல போதுமான வருமானம் இல்லன்னியே!இப்ப பாரு! ஓய்வுக்குப் பிறகும் லட்சமா கொட்டியிருக்கு!”
சொன்னவர் ஊரிலுள்ள உறவினரை செல்லில் அழைத்து, ”உன் பையனை அந்தக் கல்லூரியிலேயே சேர்த்திடலாம். அவனை ரெடியாகச் சொல்லு! பணத்தை நான் அனுப்பறேன்!” என்றார்.
****************************
அந்தப் பெரிய விமானம் இறக்கைகளை அடிக்காமலேயே மேல் நோக்கிப் பறந்தது.
வழியனுப்ப வந்த கந்தசாமி குடும்பத்தார் காருக்குத் திரும்ப, கந்தசாமி மனதோ பின்னோக்கிப் பறந்தது!
கல்லூரிக் காலத்தில் கதை படிப்பதுதான் அவரின் முக்கியப் பொழுது போக்கு.
நிமிடக் கதையோ, நீள் கதையோ, ஏதாவது ஒன்றைப் படித்தால்தான் மனது திருப்திப்படும். பள்ளிக் காலத்திலிருந்தே தொற்றிக் கொண்ட அந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டே வந்தது. அதற்காக, அவர் ஒன்றும் படிப்பில் சளைத்தவரல்ல.
எப்பொழுதும் முதல் ரேங்க்தான்! தேர்வு நேரங்களில் கூட நன்றாகப் படித்து முடித்த பின்னர், தேர்வு எழுதும் அறைக்குச் செல்வதற்கு முன்னால், படித்ததை எண்ணி மனம் அலைபாயாமல் அமைதிப்பட, ஒரு கதையைப் படித்து விட்டுத் தான் தேர்வு எழுதச் செல்வார்.
அதனால்தானோ என்னவோ பள்ளிப் பருவத்திலிருந்தே மனதுக்குள் வந்தியத் தேவனும், அரவிந்தனும் மாறி மாறி வந்து போய்க்கொண்டிருந்தார்கள். முன்னவர் வீரத்திற்கு என்றால் பின்னவர் தியாகத்திற்கென்று மனம் கணக்குப் போடும். அவர்களைப் போல் வாழ்ந்து காட்ட வேண்டுமென்று உள்ளம் சொல்லும்! வீரமும், தியாகமும் சேர்ந்தவர்கள்தான் வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் என்ற உணர்வு மேலோங்கும். அவர்களின் புனிதமான காதலும் உயர்வாகத் தோன்றியது. கூடுமானவரை அவர்களைப் பின்பற்றியே வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
படிப்பை முடித்து, வேலையில் அமர்ந்ததும், எல்லாப் பெற்றோர்களைப் போல அவனின் குடும்பத்தாரும் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆளாக்கி விட்ட அவர்கள் ஆசைக்கு, அவன் அணை போட விரும்பவில்லை. திருமணம் முடிந்தது. மனைவி முழுகாமல் இருக்கிறாள் என்ற ஆனந்தச் செய்தி அவன் காதுகளை எட்டியதும், அவன் மனதில் எல்லாவற்றையும் தாண்டி எதிரொலித்தவை இரண்டு பெயர்கள்தான்.
அரவிந்தன் - பூரணி தான் அவை. ஆண் பிறந்தால் அரவிந்தன் என்றும், பெண் பிறந்தால் பூரணி என்றும் பெயர் வைக்கலாமாவென்று மனைவியிடம் கருத்து கேட்டபோது, அவளும் சந்தோஷமாகச் சம்மதித்தாள்! ஆண்குழந்தை பிறக்க, அரவிந்தன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
அந்த அரவிந்தன்தான் இப்பொழுது தன் மனைவியுடன் வெளி நாட்டுப் பணிக்குச் செல்கிறான். எதை எதிர்பார்த்து அந்தப் பெயரைச் சூட்டினானோ, அதற்குத் தகுந்தவனாகவே அரவிந்தனும் நடந்து கொண்டான். நண்பர்களுக்கோ, அவர்கள் உறவினர்களுக்கோ ஏதாவது ஆபத்து என்றால், அவன்தான் முதலில் நிற்பான்.
பலமுறை ரத்த தானம் செய்து, அறிமுகமில்லாதவர்களைக் கூட ஆபத்திலிருந்து காப்பாற்றி அவர்கள் உயிர் வாழ உதவியிருக்கிறான்.
அவனுக்கு மணவயது வந்ததும், தக்க துணையைத் தேர்ந்தெடுக்கக் கந்தசாமியும் அவர் துணைவியும் பல வரன்களைப் பார்த்தும், எதுவும் திருப்தியாக அமையவில்லை.
ஒன்று சரியாக இருந்தால் மற்றொன்று ஒத்து வரவில்லை. அதுவே அவரைக் கலவரப்படுத்தியது. அந்தக் கலவர எண்ணமே அவர் ஆரோக்கியத்திற்கு உலை வைக்க ஆரம்பித்தது. உடல் மெலிய ஆரம்பித்தது. மனதில் வலி முகாமிட்டது.
அந்தச் சமயத்தில்தான் ஒரு நண்பர் மூலம் அந்தப் பெண்ணின் சாதகம் அவரைத் தேடி வந்தது. பெண்ணின் பெயரைப் பார்த்ததும் அவர் வலியெல்லாம் பறந்தோடிவிட்டது! அந்தச் சாதகம் பொருந்துமென்று உள்மனது அடித்துச் சொல்ல, மனது லேசாகியது. அவசரமாகத் தொடர்பு கொண்டு பேச, எல்லாம் ஒத்துப் போனது.
திருமணமும் இனிதே முடிந்து, மணமானவர்கள், மகிழ்வுடன் பணியாற்ற வெளிநாடு கிளம்பி விட்டனர்!
வீட்டிற்கு வந்து, ஈசிச் சேரில் சாய்ந்து நிம்மதியாகக் கண்ணை மூடியபோது, கந்தசாமியின் கண்களில் அந்தக் காட்சி மீண்டும் விரிந்தது. நண்பர் கொடுத்த சாதகத்தில் இருந்த செல் நம்பர்தான் அது. அதனைக் கூப்பிட்டார். அந்தப் பக்கம் பேசியது பெண்ணின் குரல். கணவர் வெளியில் சென்றிருப்பதாகக் கூறி அந்த அம்மா பேசினார்கள்.
பெண்ணின் பெயரைச் சொன்ன அவர்கள், ’தான் குறிஞ்சி மலர் நாவல் படித்தபோது கர்ப்பமாக இருந்ததாகவும், அந்த நாயகனும், நாயகியும் மனதை ஆழமாகப் பாதிக்க, ஆண் பிறந்தால் நாயகன் பெயரையும், பெண் பிறந்தால் நாயகி நாமத்தையும் சூட்டுவதாக மனதில் உறுதி செய்து கொண்டு, அதனைக் கணவனிடம் கூற, அவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள, பூரணி பிறந்தாள்!’ என்று முடிக்க, ஆனந்தத்தில் திளைத்துப் போனார் கந்தசாமி. தன்னைப் போலவே அவர்களும் குறிஞ்சி மலர் படித்து முடிவுக்கு வந்ததைக் கேட்டு வியப்பும், மகிழ்ச்சியும் கொண்டார்.
நல்ல எழுத்தாளர்கள் இந்தச் சமுதாயத்தில் என்றும் வாழ்கிறார்கள். அவர்களின் இறவா நாயகர்கள் பல தலைமுறைகளை வழி நடத்துகிறார்கள். பல சிக்கலான நேரங்களில், எளிதான தீர்வுக்கு வழி வகுக்கிறார்கள். வந்தியத் தேவனும்-குந்தவையும், அரவிந்தனும்-பூரணியும் இவ்வுலகில் வாழ்வதைப்போல, அவர்களை நம்மிடையே நடமாட விட்ட கல்கியும், நாபாவும் என்றும் வாழ்கிறார்கள். பூவுலகம் வாழும் வரை அவர்கள் புகழுடம்பும் வாழும்!