

குவாண்டம் கம்ப்யூட்டர் மிகவும் பிரபலமாகி தி. நகரில் தெரு ஜோஸ்யம் வரை வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
“குவாண்டம் கணினி ஜோதிட நிலையம்” போர்டைப் பார்த்து ஒரு கணம் கணேஷ் உள்ளே போகலாமா என யோசித்தான்.
சென்னைக்கு வேலை தேடி வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகி விட்டது.. ஒண்ணும் அமைந்த பாடில்லை. அப்பாவிடம் பத்தாயிரம் அனுப்புங்கன்னு சொன்னதுக்கு கிராமத்தில் அறுவடை முடியட்டும் நெல் போட்டு மூவாயிரம் அனுப்பறேன்னு மெஸேஜ் போட்டிருந்தார்.
ஜோசியம் பார்ப்பதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. என்னமோ குவாண்ட்டம் கம்ப்யூட்டர்ன்னு சொல்றானே போய் தான் பார்ப்போம்ன்னு உள்ளே போனான்.
உள்ளே ஒரு இருபது வயது காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஒரு பெண் இருந்தாள். “நூறு ரூபா சார் ஃபீஸ்”, என்றாள். கொடுத்ததும் இவன் கை ரேகை ஸ்கேன் செய்து பிறந்த தேதி, ஊர், பிறந்த நேரம் இதெல்லாம் கேட்டு கம்ப்யூட்டருக்குள் அனுப்பினாள். முகத்தை பளிச் என ஒரு கேமிரா படம் பிடித்துக் கொண்டது.
பத்து நிமிஷம் கட கட … விர்.. விஷ்க்.. பீப் பீப் முடிந்து, ரிசல்ட் பிரிண்ட் அவுட் போட்டு வந்தது.. ஒரு கவரில் மடித்து வைத்து தந்தாள்.. ரூமுக்குப் போய் பார்க்கலாம் என பையில் வைத்துக்கொண்டு சேப்பாக்கம் மேன்ஷனுக்குப் போய்விட்டான் கணேஷ்.
அவன் போனதும் இன்னொரு காப்பி எடுத்துப் பார்த்தாள் தேவி.. ஜோதிட நிலையத்து கம்ப்யூட்டர் ஆபரேட்டர். ரிசல்ட் பார்த்து அதிர்ந்து போனாள்..
இவ்வாறாக இருந்தது
ஜாதகர் கணேஷுக்கு இன்னும் பத்து நாளில் எம்.ஜி.ஆர் மூலமாக முன்னேற்றம் வருமானம் வரும் என இருந்தது. அது மட்டுமல்ல தேவி என ஒரு பெண் தான் இவருக்கு மனைவி. அவள் கம்ப்யூட்டர் படித்தவர்.
தேவி ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவள். இந்த ஜோதிட நிலையத்துக்கு வந்து மூன்று வருஷம் ஆவுது. சம்பளம் என்று இல்லை.. கமிஷன் போல.. எத்தனை ஜாதகம் பார்க்கிறாளோ அதில் பாதி இவளுக்கு.. பாதி ஓனருக்கு.
ஏதோ பிழைப்பு ஓடியது.
கணேஷ் ஜாதகத்தைப் பார்த்த தேவி உடனே தன் ஜாதகம் ரேகை தந்து போட்டோவும் அனுப்பினாள் மெஷின் ஓடியது.. பத்து நிமிஷம் கழித்து ரிசல்ட் வந்தது.
அதில் இவ்வாறாக இருந்தது. “ ஜாதகர் தேவிக்கு சரோஜா தேவியால் முன்னேற்றம்.. வருமானம் வரும். கணேஷ் என்ற ஜாதகரை மணம் செய்வார்..”
ஆச்சரியமாக இருந்தாலும் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்திடுச்சா என ஒரு சந்தேகம் வந்தது. சரோஜா தேவிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என நினைத்தபடி நடிகை சரோஜா தேவி படத்தை டவுன் லோடு செய்து பார்த்தாள்.. என்ன ஆச்சரியம் சிறு வயது சரோஜா தேவி நடிகை சாயலில் தேவி அச்சு அசலாக இருந்தாள்.
கணேஷ் இரவு ஏழு மணி வாக்கில் ஜாதகம் என்ன சொல்லுது என கவரைப் பிரித்தான்.. அதில் எம். ஜி. ஆரால் எதிர்காலம்.. தேவி என்பவர் மனைவியாக வருவார் என இருந்த விஷயத்தைப் படித்தான். ரூ 100 வேஸ்ட்.
எம் ஜி ஆரா.. அவரைப் பார்த்தது கூட இல்லை.. அவர் 1987ல் மறைந்து அடுத்த வருஷம் தான் பிறந்ததே.. என்னவோ கம்ப்யூட்டர் கோளாறு.. குவாண்டம் கணினி ரிசல்ட்டுகளில் சிறு தவறுகள் இருக்கலாம் என அடிக்குறிப்பு இருந்தது..
ஓ.. மிஸ்டேக் போல என கண்ணாடியில் தன் முகத்தை ஒரு தரம் பார்த்தான்..
எம் ஜி ஆர் முகம் போலவா இருக்கு என் முகம். டிவியில் எம் ஜி ஆர் பாட்டு ஓடியது.. என்ன ஆச்சரியம் அவர் முக சாயல் இருக்கு. பாட்டில் நடித்த அவரைப் போல் பின் புறம் கை கட்டி ஆடி ஒரு நடை நடந்து பார்த்தான்.
பின் கணேஷ் சாப்பிட மெஸ்ஸுக்குப் போனான். அங்கு கல்லா அருகில் ஒருத்தர் இவனைப் பார்த்தார். பிறகு பார்த்துக் கொண்டே இருந்தார்.. உற்றுப் பார்த்தார். அவன் நடை பாவனைகளைக் கவனித்தார். என்ன காரட் கலர்.. சுருள் முடி.. மெஸ் ஓனர் காதில் மெல்ல ஏதோ சொன்னார்.. “தெரியும் இங்கே தான் மேன்ஷனில் இருக்கார். ஊர் விருத்தாசலம்.. வேலை தேடி வந்திருக்கார். பெயர் கணேஷ்.”
கை கழுவி விட்டு கல்லாவில் தன் பெயரில் உள்ள அக்கவுண்ட்டில் தேதி போட்டு விட்டு நகர்ந்த போது ஓனர் நண்பர் கூப்பிட்டார்.
“தம்பி இங்கே வாங்க..” என உள்ளே அழைத்துப் போனார்.
“வந்து உங்களைப் பார்க்க ஒரு சாயல் எம் ஜி ஆர் போல இருக்கீங்க.. நாங்க ஒரு ட்ரூப் வச்சிருக்கோம்.. திருமண வரவேற்பில் நடிகர்கள் போல மேக்கப்பில் போய் நிற்போம் கும்பிடுவோம்.. ஒரு அட்ராக் ஷன்.. எம் ஜி ஆர் போல நீங்க வந்து கும்பிட்டா போதும் ஒரு ஈவினிங் இரண்டு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூ தர்றேன்”
கணேஷ் யோசித்தான்.. “ஓ.கே”
அடுத்த வாரத்தில் ஒரு நாள் கணேஷ் எம் ஜி ஆர் கணேஷ் ஆக மாறினான்.. அவர் சொல்லித் தந்தார்.. எப்படி நடக்கணும் எப்படி கை குலுக்கணும் எப்படி பார்க்கணும் என்று. ஒரு வருஷம் கழிந்தது.
எங்க வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களைத் திரும்பத் திரும்பப்பார்த்து எம் ஜி ஆர் நடை பாவனை சிரிப்பு கை அசைப்பு எல்லாம் பழகிக்கொண்டான்.
அதற்குப் பின் ஒரு கலைக் குழுவில் சேர்ந்து எம் ஜி ஆர் போல அவர் பாடல்களுக்கு டான்ஸ் மூவ் மெண்ட் செய்தான்.. மக்கள் மிகவும் ரசித்தார்கள்.
சாதா கணேஷ் எம் ஜி ஆர் கணேஷாக மாறினான். இரண்டு வருஷம் இருக்கும். எம் ஜி ஆர் வரணுமா.. எம் ஜி ஆர் கணேஷ் தான்.. என பிரபலமானான்.
ஒரு கோவில் திருவிழா மேடையில் அவனுடன் ஒரு டூயட்டுக்கு துணையாக ஒரு பெண் வந்து ஆடினாள். பார்க்க சரோஜா தேவி போல் இருக்க “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” அன்பே வா படப்பாடல் காட்சி சாரட் வண்டியில் பொம்மைக் குதிரை ஓட்டி நடித்தார்கள்… மக்கள் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
பிறகு தான் தெரிந்தது.. அந்தப் பெண் தி நகர் ஜோதிட நிலைய தேவி என்று. கம்ப்யூட்டர் ஜோதிட நிலையம் இப்போ இல்லையாம்.. பல கடைகள், துணிக்கடைஷோ ரூம் களில் வேலை பார்த்து இப்போ ஒரு கம்ப்யூட்டர் ஜாப் செண்ட்டரில் வேலை பார்க்கிறாள். அந்த ஓனர் தான் இந்தக் கலைக் குழு நடத்துறார்.. ஒரு ஃபங்ஷனுக்கு ஆயிரம் தர்றார்.. இது தான் தேவி சரோஜா தேவியான வரலாறு என அறிந்தான் கணேஷ்.
இந்த ஜோடி பல மேடைகளில் ஆடினார்கள்.. டூயட்களுக்கு வாயசைத்து மகிழ்வித்தார்கள்.. ஒரு சினிமா டைரக்டர் கண்ணில் இந்த ஜோடி பட அவரும் ஒரு ஐடியா செய்தார்.
ஒரு விண்ட்டேஜ் படம் போல இருவரையும் வைத்து ஒரு பழைய பட பாணியில் படம் எடுத்தார். கிராபிக்ஸ் ஏ ஐ, மூலம் அதில் நாகேஷ், எம் ஆர் ராதா அசோகன் நம்பியார் எல்லோரையும் உருவாக்கினார். சில மென்பொருட்களைப் பயன்படுத்தி டயலாக் டோன் கூட அப்படியே இருந்தது.
விளம்பர ட்ரெய்லர் அட்டகாசமாக வந்தது.. எம் ஜி ஆர் சரோஜா தேவி டூயட்… நம்பியாருடன் சண்டை.. நாகேஷ் காமெடி.. ட்ரெய்லரே ஒரு கோடி பார்வைக ஒரே நாளில்.. எம் ஜி ஆர் கணேஷ், தேவி நடிக்கும் “காதல்காரன்” படம்.
அப்படியே ஒரு எம் ஜி ஆர் பட பார்முலாவில் வெளிவந்து சக்கைப் போடு போட்டது வசூலில்.
வசூல் மன்னன் அல்லவா எம் ஜி ஆர்.
அப்புறம் கணேஷும் தேவியும் இப்போது மேடைகளில் ஆடுவதில்லை.. வெப் சீரீஸ், சினிமாக்கள் தான். இது வரை முப்பது படங்கள் ஜோடியாக நடித்து விட்டார்கள். ஜனங்களுக்கு அலுக்கவில்லை. இப்போது தலா பத்து கோடி சம்பளம் என கிசு கிசு இருக்கு.
ஐந்து வருஷங்கள் கழித்து அவர்கள் திருமணமும் நடந்தது.. குவாண்ட்டம் கணினி சொன்னது பலித்தது.