

அனன்யாவுக்கும் ஆதித்யாவுக்கும் இடையிலான பாசம் சிறு வயதிலிருந்தே பிரிக்க முடியாதது. அக்கா என்றால் ஆதித்யாவுக்கு உயிர். தம்பி என்றால் அனன்யாவுக்கு செல்லக்குழந்தை.
பள்ளிக்குச் செல்லும் முன் அவனது தலைமுடியைச் சீவி விடுவதும், அவனுக்குப் பிடித்த உணவைச் செய்து கொடுப்பதும் அனன்யாவின் வழக்கம். ஆதித்யாவும் அக்கா இல்லாமல் ஒரு நாளைக்கூட இருக்க விரும்ப மாட்டான்.
ஆனால், அனன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டபோது வீட்டில் புயல் வீசியது. பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக நடந்த திருமணத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனன்யா கணவருடன் வேறு வீட்டுக்குச் சென்றாள்.
அந்தப் பிரிவு ஆதித்யாவின் மனதை மிகவும் பாதித்தது. அக்காவிடம் பேச வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும், வீட்டில் நிலவிய கோபத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆண்டுகள் கடந்தன. அனன்யாவும் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும், தம்பியின் நினைவு அவளை விட்டு அகலவில்லை. ஒவ்வொரு ரக்ஷா பந்தன் நாளிலும் ஆதித்யாவின் கையில் ராக்கி கட்டிய நாட்களை நினைத்து அவள் கண்கள் கலங்கும்.
ஆதித்யாவும் அந்த நாளில் அக்கா தன்னுடன் இல்லாததை நினைத்து அமைதியாகி விடுவான். ரக்ஷா பந்தன் சகோதர சகோதரிகளின் அன்பையும் பாசத்தையும் நினைவூட்டும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த ஆண்டு ரக்ஷா பந்தன் அன்று, அனன்யாவின் குழந்தை அதிதி தன் அம்மாவிடம், “அம்மா, மாமாவுக்கு நீங்கள் ராக்கி கட்ட மாட்டீர்களா?” என்று கேட்டாள்.
அந்த ஒரு கேள்வி அனன்யாவின் மனதை உருக்கியது.
அனன்யாவின் மகள் அதிதியிடம் மாமா ஆதித்யாவைப் பற்றி அம்மா சொல்லிய கதைகள் ஏராளம்.. சிறுவயதில் தன் தம்பியை பள்ளிக்கு சைக்கிளில் அழைத்துச் சென்று, பிறந்த நாளுக்கு அவள் தன் தம்பிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்தது என ஒவ்வொரு நினைவையும் கேட்டு வளர்ந்திருந்தாள் அதிதி. ஒரு முறை அதிதி, "அம்மா நீங்களும் மாமாவும் ரொம்ப அட்டாச்டா?" என்று கேட்ட போது அனன்யா கண்களில் கண்ணீருடன், "ஆம்.. நான் அவன் மீது வைத்திருந்த பாசத்தை விட அவன் என் மீது வைத்திருந்த பாசம் அதிகம்" என்று சொல்லி இருந்தாள்..
ஆதித்யாவிற்கு அனன்யா ஒரு அக்கா மட்டும் அல்ல... அவனுடைய முதல் தோழியும், அவனது சிறிய உலகமும் அவள் தான்.. அவன் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தால் முதலில் ஓடிச் சென்று அக்காவிடம் தான் சொல்வான்..
அவனுக்கு உடம்பு சரியில்லை என்றால் அக்கா அனன்யா இரவு முழுவதும் அவன் அருகில் அமர்ந்திருப்பாள்.. திருமணத்திற்கு பிறகு பிரிந்திருந்த ஆண்டுகளில் ஆதித்யா ஒவ்வொரு ரக்ஷா பந்தன் நாளிலும் வாசலைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.. அக்கா அனன்யா இன்றாவது வர மாட்டாளா என்று..
அனன்யாவும் தம்பியின் பிறந்த நாளில் தனியே அழுது அவனுக்கு பிடித்த இனிப்பைச் செய்து இறைவனிடம் அவன் நலனுக்காக பிரார்த்தனை செய்வாள்.. தான் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்து கொண்டு விட்டாலும் இனி எப்படி அவர்களுடன் இணைவது என்று எப்போதும் மனதின் ஒரு ஓரத்தில் நினைத்து கொண்டு தான் இருந்தாள் அனன்யா..
இதைப் புரிந்து கொண்ட அதிதி, இந்த ரக்ஷா பந்தன் அன்று மாமாவைப் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதமாக இருந்தாள்...
அதிதி தன் கையில் இருந்த அழகான ராக்கியை எடுத்துக் கொண்டு, “நாம் மாமா வீட்டுக்குப் போகலாம். குடும்பம் என்றால் எல்லோரும் ஒன்றாக இருப்பதுதானே?” என்றாள்...
அனன்யா தயக்கத்துடன் கணவரைப் பார்த்தாள். அவரும் சிரித்தபடி சம்மதித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அனன்யா தன் பிறந்த வீட்டின் வாசலில் நின்றாள். கதவைத் திறந்த ஆதித்யா, அக்காவைப் பார்த்ததும் சில நொடிகள் பேசாமல் நின்றான். இருவரின் கண்களிலும் கண்ணீர்.
“அக்கா…” என்ற ஒரே வார்த்தையுடன் ஆதித்யா அவளை அணைத்துக் கொண்டான்.
“என்னை மன்னிச்சிடு” என்று அனன்யா அழுதாள். அவள் பெற்றோருக்கும் தங்கள் பேத்தியை பார்த்ததும் அவர்கள் மீது இருந்த கோபம் குறைந்து பாசம் பெருகியது.. "அம்மா அப்பா எங்களை மன்னிச்சிடுங்க" என்று காலில் விழுந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஆதரவுடன் அணைத்தனர் அனன்யாவின் பெற்றோர்.
“நீ என்னை விட்டுப் போனதாக நான் நினைக்கவில்லை அக்கா. நாம்தான் பேசாமல் இருந்தோம்,” என்றான் ஆதித்யா.
அந்த நேரத்தில் அனன்யாவின் மகள் அதிதி இருவரிடமும் ராக்கியை நீட்டினாள்.
மாமா என்று கட்டிப் பிடித்தாள் அதிதி.. "அக்கா உன் மகள் என்னிடம் இவ்வளவு பாசமாக இருக்கும் போது நீ இத்தனை வருடங்கள் பார்க்காமல் பேசாமல் இருந்து விட்டாயே?" என்ற தம்பியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றாள் அக்கா அனன்யா..
அதிதி பாட்டி தாத்தா என்று கட்டி அணைத்து அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து, "இனி நீங்கள் யாரும் சண்டை போடக்கூடாது.." என்ற அதிதியின் வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்தது.. பெற்றோர்களும் தங்கள் பிடிவாதத்தை விட்டனர்..
அனன்யா ஆதித்யாவின் கையில் ராக்கியைக் கட்டினாள். ஆதித்யாவும் அக்காவின் கையில் இன்னொரு ராக்கியைக் கட்டி, “இனி இந்தக் குடும்பத்தில் பிரிவு வேண்டாம்,” என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட பெற்றோரின் மனமும் உருகியது. அவர்கள் அனன்யாவையும் அவளது கணவரையும் குழந்தையையும் வீட்டுக்குள் அழைத்தனர்.
பல வருடங்களாக மூடியிருந்த உறவின் கதவு அன்று மீண்டும் திறந்தது..
அந்த வீட்டில் அன்று மீண்டும் சிரிப்பு ஒலித்தது. அம்மா அனன்யாவுக்குப் பிடித்த இனிப்பை எடுத்துக் கொண்டு வந்தார். அப்பா ஆதித்யாவின் தோளில் கை வைத்து, “உறவுகளுக்கு முன் கோபம் பெரிதாக இருக்கக் கூடாது,” என்றார்.
ஆதித்யா தனது சிறுவயது புகைப்படங்களை எடுத்துக் காட்டி பழைய நினைவுகளைப் பகிர்ந்தான். அனன்யாவும் அவன் குழந்தைப் பருவக் குறும்புகளைச் சொல்லி சிரித்தாள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த வீடு மாறியது. ராக்கியின் நூல் சிறியதாக இருந்தாலும், அதில் பின்னப்பட்ட அன்பு மிகவும் பெரியதாக இருந்தது.
அன்று ஒரு சிறிய குழந்தையின் அன்பு, பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த இரண்டு குடும்பங்களை மீண்டும் ஒன்றாக்கியது. அன்பு உண்மையாக இருந்தால், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உறவுகளை மீண்டும் இணைக்க முடியும் என்பதையே அந்த ரக்ஷா பந்தன் அனைவருக்கும் உணர்த்தியது.