

கலைச்சிங்கம் வேணுவின் தகப்பனார் கந்தசாமி, எம் கே தியாகராஜபாகவதர், பி யூ சின்னப்பா படங்களை வாங்கி ரிலீஸ் செய்து நல்ல லாபம் ஈட்டியவர்.
ஆரம்பத்தில் சினிமா தொழிலில் அவ்வளவு நாட்டமில்லை அவருக்கு. ஒரு ரைஸ்மில் ஆவணியாபுரத்தில் வைத்து இருந்தார்.
மதுரை எல்லையில் ஒரு தோப்பில் டென்ட் கொட்டகை அமைத்து சினிமா ஓட்டினார். நல்ல வருமானம் வந்தது. பின் சொந்தமாக மதுரையில் நகரில் ஒரு தியேட்டர் கட்டி அதில் படங்கள் வெளியாகின.
ரீல் முடிந்து அடுத்த ஸ்பூல் மாட்டும் வரை படம் ஓடாது. லைட் எரியும் ஹாலில், முறுக்கு, கடலை மிட்டாய், கோலி சோடா, கலர், கிரஷ் பையன்கள் விற்பார்கள்.
பின் இரண்டு ப்ரொஜெக்டர்கள் வைத்து இடைவெளி இன்றி ஓட்டினார்கள்.
இடைவேளையில் டீ காபி சமூசா ஸ்டால்களில் விற்பார்கள். விளம்பர ஸ்லைடுகள் போடுவார்கள்.. அது தனி வருமானம் தியேட்டருக்கு. சிவாஜி ஸ்லைடு போட்டால் அவர் ரசிகர்கள் கை தட்டுவர்.. எம் ஜி ஆர் ஸ்லைடு போட்டால் விசில் சத்தம் வரும். அடுத்த படத்தின் போஸ்ட்டர் போல் ஒரு ஸ்லைடு வரும்.
நாளை இப்படம் கடைசி என ஒரு ஸ்லைடு அறிவிப்பு போட்டால் அதுதான் கடைசி ஸ்லைடு; படம் ஓடப் போகிறது என அர்த்தம். வேகவேகமாக சிகரெட்டை அணைத்துவிட்டு உள்ளே வருவர் ஆண்கள்.
பாத்ரூம் போகும் சிறு குழந்தைகளை அம்மாக்கள், "சீக்கிரம் வா... படம் போடப் போறாங்க..." என்பர். "இரும்மா வரலே..." என்பான் பொடியன் டவுசரை இறக்கியபடி.
இருங்க... இதை அப்புறம் விலாவரியா சொல்வோம்.
கந்தசாமி என்ன செய்தார்?
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களின் வினியோக உரிமையும் பெற்று படங்களை ரிலீஸ் செய்தார். வேணு ஜெர்மனியில் சினிமா தொழில் நுட்பத்தில் ஒரு சவுண்ட் எஞ்சினீயரிங் கோர்ஸ் படித்துக்கொண்டு இருந்தார். வேணுவுக்கு வயது அப்போது 28.
இந்த வினியோகத் தொழிலில் நல்ல லாபம் வந்ததால் படங்களுக்கு நிதி உதவியும் செய்தார் கந்தசாமி. முதலில் வட்டிக்குத்தான் ஃபைனான்ஸ் தந்தார்.. பிறகு 'வட்டி வேண்டாம்.. சென்னை நீங்கலாக மற்ற மாவட்ட வினியோக உரிமை கொடுங்கள்...' என ஏரியா வாங்கி வெளியிட்டார்.
பாகவதர் காலம் முடிந்து சிவாஜி, எம் ஜி ஆர் வந்துவிட்டார்கள்.
அதே காலகட்டத்தில் ஜெமினி, டி ஆர் மகாலிங்கம், ஜெயசங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் படங்களும் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியாகி, நல்ல லாபம் தந்தன. கந்தசாமி இந்தப் படங்களை உரிமை வாங்கி வெளியிடுவார்.
கந்தசாமிக்கு வயதாகிவிட்டது. வேணுவும் இங்கே வந்து அப்பாவுக்கு உதவியாக இருந்தார். வேணு சொன்னார் "இப்படிச் சின்னப் படங்களை உரிமை வாங்கி வெளியிடுவதற்குப் பதில் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிடலாம். ஒன்றிரண்டு வசூலில் பொய்த்தாலும் ஹிட் ஆகிவிட்டால் பெரும் லாபம் வரும்" என தந்தையிடம் ஆலோசனை சொன்னார்.
அவரோ "ரிஸ்க் கூடாது.. இந்த சின்ன படங்களில் நஷ்டமே வராது. ஒரு வாரம் ஓடினாலும் நமக்கு 200% கிடைத்துவிடும்" என்றார்.
வேணு பிடிவாதமாக ஒரு எம் ஜி ஆர் படத்தை வாங்கினார் தன் சுயமுடிவாக. வசூல் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஒரே படத்தில் அப்பா இத்தனை வருஷம் சம்பாதித்ததில் மொத்த லாபத்தையும் எடுத்துக் காட்டினார்.
அப்புறம் சில சிவாஜி படங்களையும் வாங்கி வெளியிட்டு லாபம் ஈட்டினார். வெறும் வேணு 'கலைச்சிங்கம்', கே வேணு ஆனார். அவர் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வாங்கிவிட்டால் சக்ஸஸ்தான். நோ பெயிலியர்.
கந்தசாமிக்கு வயதாகிவிட்டது.. ஃபீல்டு முன்புபோல் இல்லை. பார்த்தார்... காலம் மாறிவிட்டது என தொழிலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
வேணுவின் மகன் தினேஷ் சென்னையில் விஷுவல் டெக்னாலஜி படித்தான். இப்போது அமெரிக்காவில் டிஜிட்டல் பிலிம் டெக்னாலஜி படிக்கிறான்.
வேணு ஒரு முடிவு செய்தார். ஏன் சொந்தமாக நாமே படம் தயாரிக்கக் கூடாது. வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை ஹீரோவாகப் போட்டார்.
படத்தின் பெயர் பொம்மலாட்டக்காரன். பொம்மலாட்டக் கலைஞர்கள் வாழ்வை சித்தரிக்கும் கதை. புது நாயகி, ஹீரோயின். பழைய நடிகையின் மகள்… மூக்கும் முழியுமாக இருந்தார்.
ஆறு பாடல்கள். பத்துப் பாடல்களை இசையமைக்க வைத்து அதற்கான சம்பளமும் தந்தார் இசையமைப்பாளருக்கு. அதில் ஆறு பாடல்களைப் பொறுக்கி எடுத்து படத்தில் வைத்தார்.
இது எம் ஜி ஆர் ஃபார்முலா.
படத்தில் இரு தெம்மாங்கு மெட்டில் ஆட்டப் பாடல்கள்.
இரண்டு டூயட்கள்.. இரண்டு ஸோலோ பாடல்கள்.. ஹீரோ ஹீரோயினுக்கு.
வேணுவின் அப்பா கந்தசாமி படத்தின் பிரீவியூ முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு நொந்துகொண்டார். ஒரு கருத்து இல்லே... தாய் தகப்பன் சகோதர பாசம்… உணர்ச்சி பொங்க வசனம் இல்லே... கதையில் சமூகக் கருத்து இல்லே..
பாட்டு எல்லாம் ஒரே டங்கர டக்கரன்னு இருக்கு.. இப்படி இருக்கானே வேணு.. யாராவது எடுத்து அதை ரிலீஸ் பண்ற வேலை செஞ்சா போதாதா..
சிலருக்கு படம் எடுக்க வரும்.. விற்று காசாக்கத் தெரியாது. சிலர் ஏரியாக்கள் வாங்கி ரிலீஸ் செய்வதில் கில்லாடிகள்.. படம் எடுக்க வராது. நண்பர் திருப்பூர் சுப்புவிடம் “ பையனுக்கு புத்தி சொல்லுங்கள்” என்றார்.
சுப்பு படத்தைப் பார்த்துவிட்டு “கந்தசாமி அமைதியா இருங்க.. உங்களுக்குத் தெரியாதது இல்லே… காலம் மாற மாற மக்கள் டேஸ்ட் மாறும்.. உங்க பையன் ஒண்ணும் விபரம் தெரியாதவர் இல்லே அமைதியா இருங்க.. போட்ட காசு நிச்சயம் வந்திரும்”
பொம்மலாட்டக்காரன் ரிலீஸ் ஆனது.
ஒரு வாரம் வசூல் டல்தான். கந்தசாமி சொன்னார் “அப்பவே சொன்னேன் கேட்டியா.”
சினிமா ஒரு சூதாட்டம் என்பார்கள்... குதிரை ரேஸ் போன்றது. சினிமா ரேஸில் சில குதிரைகள் நன்றாக எடுத்த எடுப்பில் ஓடும். சில குதிரைகள் கொஞ்சம் ஓடி படுத்து ரெஸ்ட் எடுத்து பின் மெதுவாக எழுந்து ஓடி பின் புயலாக மாறும் ஓட்டத்தில்.
சில குதிரைகள் ஆரம்பத்திலேயே நிற்கும் நகராது. சில குதிரைகளை ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்குக் கொண்டு வருவதே பெரும்பாடு என்றாகி விடும்.
பொம்மலாட்டக்காரன் ஒரு வாரம் சுமாராக ஓடி, பின் பட்டிதொட்டி எங்கும் படத்தின் பாடல்கள் ஒலித்தன. ரேடியோ டிவி யில் மீண்டும் மீண்டும் நேயர்கள் கேட்டனர். படத்தில் காமெடி டிராக் அற்புதம் என சொன்னார்கள். புது நடிகையும் நடிகரும் கிராமத்து பாத்திரங்கள். பொருத்தம் பிரமாதம்.
இப்படியாக பார்த்தவர்களின் கருத்தே பிட் நோட்டீஸ் அடிச்சுவிட்டது போல் பரவ …எடுத்ததே ஒரு ஓட்டம். வந்ததே ஒரு கூட்டம். அடுத்த ஷோவுக்கு காத்திருந்து பார்த்தார்கள்.
படத்தின் கிளைமாக்ஸில் அம்மன் கோவில் சாமி ஆட்ட காட்சியில் பெண்கள் கூட்டத்தில் பலர் தியேட்டரில் சாமி ஆடினார்கள்... தியேட்டர்காரர்கள் பூசாரிகளை நியமித்து விபூதி வேப்பிலை அடித்தார்கள்... குழந்தைகள் அம்மாக்களைக் கட்டிக் கொண்டு அழுதன. புருஷன்கார அப்பாவிகள் பேந்தப் பேந்த விழித்தார்கள். இது இயற்கையா வீட்டில் நடப்பதுதானே என்று நினைத்தபடி.
வசூல் அள்ளிக் கொட்டியது. போதும் போதாதற்கு வெளி நாட்டிலும் நல்ல வசூல். சீனா, ஜப்பான் நாடுகளில் வசூல் ஆனதைப் பார்த்து இந்திய அரசாங்கம் மூக்கில் விரலை வைத்தது.
அத்தனை டாலர்கள் அன்னியச் செலாவணி வரவு. கேளிக்கை வரி, வருமானவரி, என பல வரி வகைகளில் நல்ல வருவாய் அரசுக்கு.
கந்தசாமி தீர்மானித்தார்.. நமக்கு வயதாகிவிட்டது. சினிமாவைப் புரிந்துகொண்டது அவ்வளவுதான். பாகவதர், சிவாஜி எம் ஜி ஆர் காலம் மலைஏறி விட்டது என்று.
வேணு தன் காலத்திலேயே இன்னும் புது நடிகர்களின் வரவைப் பார்த்தார். அவர் பையன் தினேஷ் லாஸ் ஏஞ்செல்ஸில் ஹாலிவுட் படங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் அஸிஸ்டண்ட் ஆகப் பணியாற்றி நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் கற்று இந்தியா திரும்பினான்.
அவன் தனியாக 'ஜெல்லிஃபிஷ் கில்லர்ஸ்' என ஒரு படக் கம்பெனி ஆரம்பித்து 'பேல் பூரி பானி பூரி' என ஒரு படம் எடுத்தான்.
முக்கிய நடிகர் ஒருத்தர் நடித்தார். மலையாள நடிகை மஜந்தா பிஜ்ஜு தான் ஹீரோயின்.
படத்தில் தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி, மராத்தி பெங்காலி முக்கிய ஹீரோ நடிகர்கள் பல ரோல்களில் வந்தார்கள்.
வில்லன் ஒரு ஹாலிவுட் நடிகர். 007 பாண்ட் படத்தில் வில்லனாக நடித்தவர். பான் இண்டியா போய் பான் வேர்ல்டு தமிழ் படம்.
படத்தை முதலில் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் போட்டுக் காட்டினான் தினேஷ்.
இது என்ன படமா.. என மனதுக்குள் நினைத்தார் கலைச்சிங்கம் வேணு. ஆரம்பத்தில் ஒருத்தன் தலையை வெட்டி சூட் கேஸில் வைத்து அதைத் தூக்கிப் போறான் வில்லன். பிறகு ஹீரோ ஓரு பழைய மில்லில் சண்டை.. மூணு அடியாட்கள் கையை வெட்டி ரத்தத்தை தலையில் தடவிக்கிறார்..
படத்தில் இசை ஒரு பக்கம் அதிர்ந்தது. ஹீரோயின் கூட்டமாக தன் தோழிகளுடன் வந்தாள் அவர்களுடன் ஆடினாள்.. பாடினாள் போய்விட்டாள்.. பாட்டு ஒரு நிமிஷம் வரும்.. பின் அரை மணி கழித்து வரும். படம் முழுக்க வரும்.
பேரனாச்சே தினேஷ் .. ஒன்றும் குறை சொல்லவில்லை தாத்தா. அப்பா வேணுவுக்கு முகத்தில் ஈயாடவில்லை. அம்மாவும் தங்கையும் சூப்பர் என்றார்கள். அவர்கள் தான் அப் டு டேட் ஆக இருப்பவர்கள் எல்லா படங்களும் பார்த்து.
படத்தின் கடைசி காட்சியில் ஒரு இந்தி வயதான பழம் பெரும் நடிகை துப்பாக்கியுடன் வந்து சுடுவாள்... அந்த குண்டு ரசிகர்களை நோக்கி வரும்..
வணக்கம்.
அந்த குண்டு பார்ட் 2 க்கு லீடு என்றான் தினேஷ்.
அதெல்லாம் இருக்கட்டும் படம் ரிலீஸ் ஆச்சா.. என்ன எஃப் டி எஃப் எஸ் ரிசல்ட் FDFS அதாவது முதல் நாள் முதல் காட்சி அபிப்ராயம் என்ன சொல்றாங்க ரசிகர்கள் யூ ட்யூபில்..?
கும்பலாக இளைஞர்கள் ஆடிப் பாடி கொண்டாடினர் தியேட்டர்களில். வெளி நாட்டிலும் அப்படியே.
தியேட்டரில் படம் பார்க்க வந்த தாத்தா கந்தசாமிக்கு சத்தம் ஆகாமல் போய்விட்டது. 4 கே தரத்தில் உள்ள ஐ மேக்ஸ் தியேட்டரில் எல்லா சீட்டுகள் அடியிலும் ஸ்பீக்கர்கள்.. கூரையில் ஸ்பீக்கர்கள்.. சுவரில் ஸ்பீக்கர்கள். கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவு. லேசர் ப்ரொஜெக்டரில் தாத்தாவுக்கு கண் கூசியது. அப்போதான் போனவாரம் கேடராக்ட் ஆபரேஷன் பண்ணி இருந்தார்.
பார்த்தால் சண்டைக் காட்சிகளில் இதயம் நின்றுவிடும் போல் திடும் திடும் சத்தம். காதைப் பொத்திக்கொண்டார் தாத்தா.. உயிரோடு வீட்டுக்கு அனுப்புவானா பேரன் என ஒரு கேள்வி மனதுக்குள் ஓடியது.
அப்பா கலைச் சிங்கம் கே வேணு ஒரு முடிவெடுத்தார். சினிமா எங்கேயோ போய்கிட்டு இருக்கு.. நாம் ஒதுங்கிக்கொள்வது நல்லது.
பின் குறிப்பு..:
ஒரு நாள் எதேச்சையாக ஒரு நாள் வேணு தன் போனில் இணையத்தில் ஒரு வீடியோ பார்த்தார். அச்சு அசலாக எம் ஜி ஆர்….. சாட்சாத் எம் ஜி ஆரே… கோட் சூட்டுடன் குங் ஃபூ சண்டையிட்டு பத்து வில்லன்களைப் பந்தாடி சரோஜாதேவியைக் காப்பாற்றி கைபிடித்து அழைத்துப் போவது போல ஒரு நிமிட காட்சி.
ஏ ஐ.. யாம்..சாட் ஜிபிடியாம் ஜெமினியாம்..
நமக்கான இடம் இல்லை இது என முடிவெடுத்து சினிமா சன்யாசம் மேற்கொண்டார் கலைச் சிங்கம் கே வேணு.