

மதிய வெயில் சுள்ளென்று சுளுக்கெடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. வியர்வைத் துளிகள் மணிமணியாய் தலையிலிருந்து கழுத்து வழியாகப் பாம்புபோல் நெளிந்து முதுகிற்குள் நுழைவதை சிவக்குமார் உணர்ந்தான். சட்டையை இழுத்து தலையைக் குனிந்து நெஞ்சுக்கு காற்று படும்படி ஊதினான். வாயிலிருந்து வந்த காற்றும் வெப்பஅலை போல் கொதித்தது. தலைக்கு மேலிருந்த காத்தாடியும் கடிகாரத்தின் சிறிய முள் போல் வட்டமிட்டது.
சிவக்குமாரின் பக்கத்து இருக்கையில் ஒரு கர்ப்பிணி தனது மகளோடு உட்கார்ந்திருந்தார். மகள் போனை பார்த்தபடி ரீல்சை தள்ளிவிட்டபடி இருந்தாள். புழுக்கத்தை விரட்ட அந்தக் கர்ப்பிணிக்கு மகளின் பிறப்புச் சான்றிதழ் விசிறியாக உதவிக்கொண்டிருந்தது.
இதையெல்லாம் கவனித்தபடி உட்கார்ந்திருந்தான். நேரம் ஓடியது.
சிவக்குமார் புழுக்கம் தாங்கமுடியாமல் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். எதிரே உள்ள பழச்சாறு கடைக்குச் சென்றான். பழச்சாறு அறிவிப்புப் பலகையில் ‘லெமன்-10ரூ’ என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து, ஐஸ் நிறையப் போடச் சொல்லி ஒரு லெமனை வாங்கிக் குடித்தான்.
தொண்டை மட்டும்தான் குளிர்ந்திருந்தது, மறுபடியும் ஒரு லெமன் வாங்கிக் குடிப்போமா? என்று நினைத்தவன், கையில் இருந்த 40 ரூபாயைப் பார்த்து உடனே சட்டைப் பையில் வைத்தான்.