

பெரிய மனுஷன் வீட்டுக் கல்யாணம். பல ஆயிரம் பேர், உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குப் பெரும் பந்தல் வேயப்பட்டு, மிகவும் அழகான புத்தம் புது டிசைன், டேபிள் - சேர் போடப்பட்டிருந்தது. அந்த இடம் மூடும்படி, பெரும் கதவுகளும் இருந்தன. கதவின் அருகில், ஒரு முரட்டு மீசை வாட்ச்மேன் இருந்தான். கிட்டத்தட்ட இரண்டு போர்களைச் சந்தித்திருக்கும் அளவுக்கு, அவனின் உடல் கட்டும், தைரியமும், மிரட்டும் தொனியும், இருந்தது. காரணம், கண்டவர் எல்லாம், பெரிய மனுஷன் வீட்டுத் திருமண விருந்தில், கலந்து கொள்ளக்கூடாது. முறையான, அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே, திருமணத்தில் கலந்துகொண்டு சாப்பிடலாம் என்ற கோணத்தில் மட்டுமே, அந்த வாட்ச்மேன், நியமிக்கப்பட்டிருந்தார்.
ஏகப்பட்ட கூட்டம். அறுசுவை விருந்து. நாவிலும், கையிலும், நெய் ஓடும் அளவு, இனிப்பு பலகாரங்கள். சாப்பிட்டு முடித்ததும், தாம்பூல பை. அதில் நல்ல முற்றின தேங்காய், செவ்வாழை, வெற்றிலை மற்றும் வாசனைப் பாக்கு என்று அந்தப் பையை பார்த்தாலே மனசும் குளுகுளுக்கும்.
அந்த முரட்டு மீசைகாரன், அழைப்பில்லாமல் வந்தவர்களைத் தள்ளிய தள்ளில் ஒரு சீட்டு சாய்ந்தால் எப்படி வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் மற்ற சீட்டுகள் எல்லாம் சாயுமோ, அதுபோல் மற்றவர்களும் அடுத்தவரை, அடுத்தவரை தள்ளித் தள்ளிக் கிட்டத்தட்டி, கீழே விழும் நிலையில், நல்லவேளையாக, சுவர் இருந்ததால், கடைசியில் இருந்த ஒருவர், பிடித்து சமாளித்துக்கொள்ள, மற்றவர்கள் பாதி சாய்ந்த நிலையில் தங்களைச் சுதாகரித்துக்கொண்டு, எழுந்து, அந்த வாட்ச் மேனிடம் பெரும், வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். காரணம், விழுந்தவர்களில் பலர், அழைப்பிதழ் வைத்திருந்த பெரிய மனிதர்கள். ஆனால் உடலில்தான் பலம் இல்லை.
பின், அந்த மீசைகாரர் மன்னிப்பு கேட்டு, ஒவ்வொருவரின் அழைப்பிதழையும், ‘செக்’ செய்து உள்ளே அனுப்பினார். பார்த்தாலே தெரியும், சில பெரிய மனுஷங்களை, அப்படியே உள்ளே போக அனுமதித்தார். அப்போதுதான், கூட்டத்தைப் பார்த்தான் கந்தன். இவன் குப்பை பொறுக்குபவன். பார்த்தால் பெரிய மனிஷங்க கல்யாணம்னு, தோணுது. பல ஆயிரம் பேர் வந்து சாப்பிட்டு போறாங்க. நாம உட்கார்ந்து, சாப்பிட வேணாம்.
அதுக்கு அனுமதிக்க மாட்டாங்க. ரொம்ப வேண்டி, ஏதாச்சும் கையில சோத்தை, வாங்கிட்டு போகலாம்னுட்டு, அவன் கேட் கிட்டே வந்தபோது, மீசை அவன்; நிலையை கண்டு, ஒரே தள்ளு. அவ்வளவுதான், பத்தடி தாண்டி விழுந்தவன், மீண்டும் போராடி எழுந்து, “அய்யா இப்படி ஏழைகளை அடித்துத் துன்புறுத்தாதீங்க.
எனக்குப் பந்தியில, உட்கார்ந்து சாப்பிட வேணாமுங்க. ஏதாச்சும் ஒரு சாப்பாடு உருண்டை கொடுத்தா போதுமுங்க. நானும், என் வயசான அம்மாவும், சாப்பிடுவோம். பல ஆயிரம் பேர் சாப்பிடறாங்க. என் ஒருவனுக்கு என்னங்க ஆகப்போகுது” என்றான் குப்பைகாரன்.
“ஏய், நீ என் கிட்டயே, நியாயத் தர்மத்தைச் சொல்றியா. போடா வெளியே...” என்று மீண்டும் தள்ளியபோது, அவன் கேட்டைப் பார்த்தான்.
மீண்டும் ஓடினான்.
“ஏய், திரும்ப திரும்ப வந்தியோ, என்ன நடக்கும்னுட்டு தெரியாது...”
“அய்யா, நான் என்ன சொல்றேன்னு கேளுங்க...”
“டேய், நீ என் பொண்டாட்டி பாரு. கேட்கிறதுக்கு. போடா...” மீண்டும் தள்ளினார்.
கூட்டம் கூடியது.
அவன் மீண்டும் வந்தான். “அய்யா, நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளுங்க. அய்யா கேளுங்க...” அவன் உரக்க குரல் கொடுத்தபடி, இருந்தான்.
மீசை, நக்கலுடன் பார்த்தான். கூட்டம் போய்க்கொண்டிருந்தது.
“அய்யா...” என்றதும் மீசைக்கு வந்ததே கோபம், அவன் துணிப்பையைத் தூக்கி எறிந்தான்.
“அய்யோ அவசரங்க... அய்யா நான் சொல்றதைக் கேளுங்க...”
“என்னடா இழவு. உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு. என்னடா சொல்லித்தொலை.” கத்தினான் மீசை.
“அய்யா உங்கக் காலுக்கு பின்னால ஒரு கருநாகம் படம் எடுத்துட்டு இருக்குங்க...”
அவ்வளவுதான், திரும்பினான் மீசை. பார்த்தான்... அப்படியே மயங்கி சாய்ந்துவிட்டான். அதற்குள், பாம்பு சுதாகரித்து, தப்ப இருக்கும் சமயம், குப்பைகாரன் உடனடியாக, விருந்து சாப்பிடும் இரு கதவுகளையும், இறுக சாத்திவிட்டான். நல்லவேளை, பாம்பு உள்ளே புகவில்லை. அப்படி இல்லாதிருந்தால், பாம்பு புகுந்த அச்சத்தில், அனைவரும் இலைகளைத் தள்ளிவிட்டு, எழுந்து ஓட, அத்தனை விழந்த இலைகளுக்குள், பாம்பு புகுந்திருந்தால், தீ அணைக்கும் வீரர்களாலேயே, கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடிப்போயிருப்பர்.
எப்படியோ, குப்பைக்காரன் சாமர்த்தியமாக அந்தப் பாம்பை தன் குப்பை பொறுக்கும் கோணி பைக்குள் புகுத்தி வெளியே கொண்டு சென்றுவிட்டான்.
சற்று நாழி கழித்து, மீசை கண் விழித்தான்.
“யோவ். என்னையா, பாம்புக்கு மயக்கமா போட்டு விழுவே. அதை அடிச்சி, தூக்கி எறிஞ்சிருக்க வேணாம். நல்லகாலம், ஒரு குப்பைக்காரன், லாவகமா அந்தப் பாம்பை குப்பை எடுக்கும் கோணிப்பையிலேயே, பிடித்து போனானோ பிழச்சிச்சு...” என்று ஒருவர் கூறியதைக் கேட்ட மீசை, வேகமாக ஓடினான். வெகுதூரத்தில் குப்பைக்காரன். அவனை துரத்தி சென்று பிடித்து விட்டான்.
“தம்பி, என்னை மன்னிச்சிடுப்பா. நீதான் என் உயிரையே காப்பாத்தி இருக்கே. எனக்கு பாம்புன்னா, அவ்வளவு அச்சம்டா தம்பி. வா வந்து கல்யாண விருந்து, சாப்பிட்டு போ...” என்றதும்,
“அதுக்கு முன்னால ஒரு வேலை இருக்கு. இந்த சாக்கைச் சித்தப் பிடியுங்க” என்று சொல்லி, “ஜாக்கிரதை... அதில்தான் பாம்பு இருக்கு...” என்றதும், அவ்வளவுதான் கோணிப்பையைக் கீழே போட்டு மீசை ஒட, சிரித்துக்கொண்டே குப்பைக்காரன், அவனை அழைத்து, “கவலைப் படாதீங்க. இது வெளி வரமுடியாது. நான் இதைப் பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்து பிறகு வருகிறேன்...” என்றதும், மீசையின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
‘யார் நல்லவன்’ ‘யார் கெட்டவன்’. ‘யார் யோக்கியன்’ ‘யார் அயோக்கியன்’ எதுவுமே இந்த உலகத்துல புரிஞ்சிக்க முடியலே. ‘ஆயிரம் ஆயிரம் பேர் சாப்பிட வந்தாங்களே, யாராச்சும் ஒருத்தராச்சுமா, அந்த கருநாகத்தை பார்க்காம இருந்திருப்பாங்க?.
சாப்பாட்டுல இருக்கிற அவசரம் ஒரு உயிர்மேல இல்லியே. ‘ச்சீ...’ இது என்ன உலகம்... என்று நினைத்தவன், அந்தக் குப்பைகாரன், பாம்பை வன இலாகாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருந்து, பின் அழைத்து சென்று, நல்ல அருமையான அறுசுவை விருந்தை, முதலாளியிடம் விவரம் எல்லாம் கூறி, அனுமதி பெற்று, மீசையே பரிமாறி மகிழ்ந்தான்.
வயதான தாய் இருப்பதாக அறிந்து பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களில், சாப்பாடு கட்டியும், நிறைய இனிப்புகளைக் கொடுத்தும், அதே சமயம், முதலாளி தனக்குக் கொடுத்த, புது வேட்டி, துண்டைக் கொடுத்து கௌரவித்தும், அனுப்பி வைத்து, பெரும் நிம்மதி மனதில் ஏற்பட்டதும், கம்பீரமாக, தன் மீசையை முறுக்கிவிட்டான்.
அதே சமயம், இவ்வளவு சாப்பாடு, அம்மாவுக்குப் பார்சல், அத்துடன் இனிப்பு, புது வேட்டி, துண்டு, கொடுத்த அந்த பாம்புக்கு நன்றி தெரிவித்தபடி, குப்பைக்காரன் சென்றுகொண்டிருந்தான்.