சிறுகதை: நீரின்றி அமையாது வாழ்வு!

பணத்தால் வாங்க முடியாத தண்ணீரின் உண்மையான மதிப்பை உணர்ந்த பரந்தாமனின் நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | Beggar and couple
சிறுகதை | Beggar and coupleImage credit: Chatgpt

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

அன்று கல்யாண நாள் என்று காலையிலேயே மனைவி புவனாவைக் கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போனார் பரந்தாமன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ, கோயிலில் நல்ல கூட்டம். அபிஷேக ஆராதனை எல்லாம் முடிந்து, நிறைவான சாமி தரிசனம் பார்த்துவிட்டு அவர்கள் வெளியே வரப் பதினோரு மணிக்கும் மேல் ஆகிவிட்டது.

காலையில் சாப்பிடாமல் வெறும் காப்பியை மட்டுமே குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் சோர்வாக இருந்தது. கோயில் பிரசாதமாக கிடைத்த பொங்கலை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தங்களுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.

மதிய வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் வீசிய காற்றும் அனலாகத் தகித்தது. அதனால் சிறிது தூரம் போனதும்,

"எனக்குக் கொஞ்சம் தாகமாக இருக்கிறது. வழியில் எங்கயாவது நிறுத்தி ஜூஸ் குடித்துவிட்டுப் போகலாமா?" என்று புவனா கேட்டாள்.

பரந்தாமனுக்கும் தொண்டை வறண்டு போயிருந்தது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது, புவனா தண்ணீர் பாட்டிலை எடுக்க மறந்துவிட்டாள். கோயிலில் இருந்தபொழுதுகூட, வெளியே வந்ததும் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்தவர்கள், கோயிலில் பிரசாதம் சாப்பிட்டதும் அதை வாங்காமலே கிளம்பிவிட்டார்கள்.

பரந்தாமன் ஸ்கூட்டரை ஒரு சர்பத் கடையின் அருகில் நிறுத்தினார். ஆனால், அந்தக் கடை பூட்டியிருந்தது. அந்தப் பகுதியில் பெரும்பாலான கடைகளும் மூடியிருந்ததைக் கவனித்ததும் இருவருக்கும் ஏமாற்றமாக இருந்தது. பரந்தாமன் புவனாவைப் பார்த்தார். உச்சி வெயிலின் உக்கிரத்தில் அவளுடைய முகத்தில் வியர்வை துளிகள் மின்ன, அவள் சோர்வாக இருந்தாள்.

இதையும் படியுங்கள்:
திகில் சிறுகதை: பொம்மை!
சிறுகதை | Beggar and couple

"சரி, இன்னும் ஒரு பத்து நிமிஷத்தில் வீடு வந்திரும். வீட்டுக்கே போயிடலாம்" என்று மனைவிக்குச் சமாதானம் சொல்லிவிட்டு ஸ்கூட்டரை எடுத்தார். இந்த மாதிரி தாகத்தோடு தண்ணீருக்குத் தவிக்கும் நிலை தனக்கு ஏற்பட்டதை நினைத்ததும், பரந்தாமனுக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால், அவருடைய தொழிலே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் அடைத்து விநியோகம் செய்வதுதான்.

‘நான் தண்ணீரை விற்றுத்தான் சம்பாதிக்கிறேன். வீட்டில் எத்தனை கேன்கள் அடுக்கி வைத்திருக்கிறேன்! ஆனால் இப்போ, எனக்கும் என் மனைவிக்குக் குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்கலையே!’ என்று அவர் யோசித்துக்கொண்டிருக்க, புவனா அவருடைய தோளைப் பலமாகப் பிடித்து அழுத்தியபடியே தடுமாறினாள்.

“புவனா! என்னாச்சு?” என்று பதறியபடியே அவர் வண்டியைச் சாலையோரமாக நிறுத்தினார். அதற்குள் வண்டியில் இருந்து இறங்கிய புவனா நிற்க முடியாமல் அவர்மேல் சாய்ந்துவிட்டாள்.

அவளுக்கு வெயிலின் அனல் வீச்சைத் தாங்க முடியாமல், மயக்கம் வருவதுபோல் இருந்தது. பரந்தாமன் அவளைத் தாங்கிப் பிடித்தபடியே, அதிர்ச்சியில் "புவனா! புவனா!" என்று சத்தமாகக் கூப்பிட்டார்..

அவருடைய சத்தத்தைக் கேட்டதும், அந்த வழியே போனவர்கள் அவர்களை நின்று பார்த்தார்கள். அங்கே சுற்றியிருந்தவர்கள் சிலர் ஓடி வந்தார்கள்.

சிறுகதை | unconscious woman and her husband
சிறுகதை | unconscious woman and her husbandImage credit: Chatgpt

“யே... கூட்டம் போடாதீங்கப்பா... கொஞ்சம் நகருங்க!”

“சார், தண்ணீர் பாட்டில் இருக்கா... இல்லையா? சரி, இங்க யார்கிட்டயாவது தண்ணீர் பாட்டில் இருந்தால் கொடுங்க!”

அவர்களைச் சுற்றித் தொடர்ந்து குரல்கள் மட்டும் கேட்டன. ஆனால், யாரும் தண்ணீர் கொண்டு வரவில்லை. அதைப் பார்த்துவிட்டு, கூட்டத்திலிருந்த ஒருவர் சட்டெனத் தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டார். சற்று தள்ளியிருந்த கடைக்குச் போய் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தார். அதற்குள் அங்கே வந்த யாரோ ஒருவரிடமிருந்த தண்ணீர் பாட்டிலை, இன்னொருவர் வாங்கிப் பரந்தாமனிடம் கொடுத்தார்.

ஒரு வித பயத்தோடும் படபடப்போடும், என்ன செய்வதென்றே தெரியாமல், மனைவியை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த பரந்தாமன், உடனே அதை வாங்கி மனைவி புவனாவைக் குடிக்க வைத்தார். அவளும் அவசர அவசரமாக சில மடக்குகள் குடித்தாள். புவனாவின் முகத்தில் சற்றுத் தெம்பு வந்தது.

பிறகு அவளே பரந்தாமனிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி, கொஞ்சம் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக்கொண்டாள். அவர் அவளைக் கைதாங்கலாக அழைத்துச் சென்று, அருகிலிருந்த நிழலான பகுதியில் நிறுத்தினார்.

அப்போது வெளியிலிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு வந்தவரும்,

"இந்தாங்க சார்... இதையும் வைச்சுக்கங்க" என்று சொல்லிவிட்டு அதைக் கொடுத்தார்.

“ரொம்ப நன்றிங்க.” என்றபடி பரந்தாமன் தன் பர்ஸைத் திறந்து பணத்தை எடுக்க முயன்றார்

“பரவாயில்லை, வேண்டாம் சார்.” என்று மறுத்துவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார். புவனா சற்றுத் தெளிவாக ஆனதை கவனித்த கூட்டமும் கலையத் தொடங்கியது.

பரந்தாமன் அவருக்கு முதலில் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தவருக்கு நன்றி சொல்ல திரும்பிப் பார்த்தார். ஆனால் அவரைப் பார்த்தவுடனே, அவர் முகம் மாறியது. ஒரு நிமிடம் அதிர்ச்சியோடு, நம்ப முடியாமலும், ஏதோ இனம் புரியாத குழப்பத்தோடும் அந்த நபரைப் பார்த்தார்.

ஏனென்றால் அவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர். பல காலமாக எண்ணெயையே பார்க்காத காய்ந்த தலைமுடி. ஆங்காங்கே நைந்து, கிழிந்துபோன சட்டையும், திட்டுத் திட்டாக அழுக்கு படிந்த லுங்கியுமாக நின்றிருந்தவரைப் பார்த்ததும், பரந்தாமனுக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி கூசியது.

‘இந்த ஆள் குடுத்த தண்ணீரையா... புவனாவிற்குக் கொடுத்தேன்?’

அவருக்கு உள்ளுக்குள் ஒருபுறம் கோபமும், அவமானமும் எழும்பியபோதும், அந்தத் தண்ணீரும் கிடைக்காமல் போயிருந்தால், புவனாவுக்கு என்ன ஆயிருக்கும்?! என்பதையும் அவர் மனம் சிந்தித்தது.

‘கொஞ்ச நேரத்திற்கு முன்பு தனக்கு இருந்த மனநிலையில், யார் அந்தத் தண்ணீரைக் கொடுத்தார்கள் என்றுகூடப் பார்க்கத் தோன்றவில்லையே, அப்போதைக்கு அந்தத் தண்ணீரின் தேவை மட்டும் தானே எனக்கு முக்கியமாக இருந்தது’ என்றும் நினைத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எழுத்தாளனின் கண்கள்!
சிறுகதை | Beggar and couple

பரந்தாமனுக்கும் புவனாவுக்கும் அந்தப் பிச்சைக்காரனை நன்றாகத் தெரியும். அவர்களுடைய வீட்டுப் பக்கமும் அவன் வந்திருக்கிறான். யாராவது விரும்பித் கொடுக்கும் காசையோ, மீந்துபோன உணவையோ வாங்கிக்கொண்டு போய்விடுவான். புவனா அவளையும் அறியாமல் தன்னிச்சையாக கையெடுத்துக் கும்பிட, அவனும் தயங்கியபடி கும்பிட்டான்.

அதைப்பார்த்த பரந்தாமனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஏனென்றால் அவன் சில முறை கையில் ஒரு பழைய தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அவரிடம் தண்ணீர் கேட்டிருக்கிறான். அப்போது அவனிடம் சொன்ன வார்த்தைகள் இப்போது அவருடைய நினைவுக்கு வந்தன.

“ஆமா... உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்குக் கொடுக்கறதுக்குத்தான் தண்ணிய ஃபில்டர் பண்ணி, பாட்டில்ல அடைச்சு வித்துட்டு இருக்கேன். போய்யா அந்தப் பக்கம்! அங்க ஏதாவது குழாயடியில் பிடிச்சுக்கிட்டுக் குடி!”

இப்படிப் பேசி விரட்டிய அதே பிச்சைக்காரனிடம் தண்ணீரை வாங்கி, தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது என்று நினைத்ததும் அவருக்கு மனசு உறுத்தியது.

‘தண்ணீரை விற்பனை செய்கிற நானே, தண்ணீருக்குத் தவிக்க வேண்டி இருக்கு. தண்ணீரோட விலை மட்டும் தெரிஞ்ச எனக்கு, அதோட மதிப்பு என்னன்னு இப்பதான் தெரியுது. நீரின்றி அமையாது வாழ்வு என்பதே உண்மை. இனி வீட்டுக்கு வெளியே ஒரு கேன் தண்ணீரை வைத்து, யார் வந்து கேட்டாலும் குடிப்பதற்குத் கொடுக்க வேண்டும்’ என்று அவர் மனதில் நினைத்தார்.

பிறகு அவர் ஒன்றும் பேசாமல், அந்தப் பிச்சைக்காரனிடம் அந்தப் புதிய தண்ணீர் பாட்டிலைத் தந்தார். அவன் அதை பணிவாக வாங்கிக்கொண்டு, அவரைப் பார்த்துத் தன் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

பரந்தாமனும் புவனாவும் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.