

சில மாதங்களாகவே அந்த எழுத்தாளர் மிகவும் குழம்பிப்போய் இருந்தார். வீட்டு சூழ்நிலை காரணமாக இருக்குமா அல்லது வேலை பளுவா என்று யோசிக்கக்கூட நேரம் இருந்தும், இல்லாமல் நாட்களை கடத்தி கொண்டுதான் இருந்தார். ‘என்ன செய்ய வயிற்றுக்கு பிழைக்க வேண்டுமே’ என்றார். தினசரி எழுதும் அந்த எழுத்தாளர் சில நாட்களாக எதுவும் எழுதவில்லை. “ஏன் சார் என்ன ஆகிவிட்டது” என்று நான் கேட்டதற்கு “எழுத ஆரம்பிக்கும்போது வெளிச்சம் தெரிவதில்லை. இருள் என் அறையை ஆக்கிரமித்து கொள்கிறது” என்றார்.’ அவர் எழுதி கசக்கி போட்டிருந்த ஒரு கடிதம் எனக்கு கிடைத்தது. அந்த கடிதம்...
ஒரு கேள்வி நானும் எழுதுவதால் என்னை எழுத்தாளன் என்று நினைத்து கொண்டபோது எனக்குள் ஒலித்தது. ‘அக்காலத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னை விட எவ்வளவு, மலையளவு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு இருந்திருப்பார். அந்த சூழ்நிலையிலும் அவர் எவ்வாறு நடமாடினார்? எப்படி அன்றாடம் இயங்கி இருப்பார்? அவர் மனிதரா? ஆனால் ஒன்று தன் வாழ்வில் தனக்கேற்பட்ட அவ்வளவு இடிபாடுகளிலும் அவர் எழுதினார், எழுதிக் கொண்டேயிருந்தார். தஸ்தயெவ்ஸ்கி மட்டுமா? ஏன் டால்ஸ்டாய், அன்டன் செகாவ், காஃப்கா.
இவர்கள் மட்டுமா? ஏன் நம் புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், வைக்கம் முகமது பக்ஷீர் இவர்கள் வாழ்வில் பிரச்சினையில்லையா? சரி இதில் குறிப்பிடாத பெயர்கள் கொண்ட எழுத்தாளர்களின் வாழ்வில் பிரச்சினையில்லையா? அவர்கள் வாழ்வில் நடந்த, பார்த்த, கேட்டவற்றை அடிப்படையாக கொண்டுதானே தங்களின் மேலான இலக்கியங்களை அவர்கள் இவ்வுலகில் படைத்தார்கள். அவர்கள் வழிவந்த நான் மற்றும் நாம் (மற்றவர்களையும் அக்கறை உணர்வுடன் பார்ப்பவன்தானே எழுத்தாளன்) மனதளவில் ஏன் பலவாறாக உடைந்து போகிறோம். ஒருவேளை மனிதன் என்பதால் இருக்கலாம் என்ற ஒரு சிறிய சந்தேகம். உடனே அறிவாளிகள் ஒன்று சேர்ந்து “மனிதனுக்கு மட்டும்தான் ஓய் பகுத்தறிவு இருக்கு. அதுனாலதான் அவனுக்கு மனசுவலி, தலைமுடியை இழுத்தால் வலி எல்லாம் வருது” என்றால் “அதே மனிதனிடம்தான் மதிப்பிற்குரிய அறிவாளி ஜாம்பவான்களே, தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறும் ஆற்றலும் இருக்கிறது. அதை பயன்படுத்தாமல் இருப்பதும் முட்டாள்தனம்” என்று பதிலளிப்பேன். அதுசரி புதுமைப்பித்தன் அவர்களுக்கே ஏவுகணைமூலம் தாக்கியவர்கள் என்னை எதன்மூலம் தாக்குவார்களோ!
தஸ்தயெவ்ஸ்கியை துரத்திய புனித வலிப்பு என்னையும் துரத்தி கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு வலிப்பு இருக்கிறதை நான் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதற்கு காரணமும் அவருக்கு இருக்கிற வலிப்பு எனக்கும் இருக்கிறதென்பதால். அந்த வலிப்பு மகிழ்ச்சியான நேரங்களிலும் வருகிறது.
ஆனால் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு அவருக்கு வந்த வலிப்பை சிந்தித்து பார்த்தால் அது கொடுமையான வலிப்பு. மனதில் பாரத்துடன் இருக்கும்போது வருகிற வலிப்பு சாவின் உச்சத்திற்கு சென்று திரும்பவும் பிரபஞ்சத்திற்கு வர வைக்கும் வலிப்பு. இரப்பர் பந்துபோல. அந்த வலிப்பு சில தினங்களுக்கு முன்பு எனக்கு வந்தது. இந்த வலிப்பே என் மனப்பாரத்தை தீர்க்க ஒரு வழியாகவும் அமைந்தது. தஸ்தயெவ்ஸ்கிக்கும் அப்படியாகதான் இருந்திருக்குமொ என்னமோ!
குழம்பிய நேரங்களில் எவ்வளவோ நபர்கள் அறிவுரை, ஆறுதல் கூறியும் என் தலையில் ஏறவில்லை. மறுபடியும் என் மனம் சிந்தனையை நோக்கி ஓடியது. அது எழுத்தாளர்களின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டிய ஓட்டமாக இருந்தது.
ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர நாவலில் இடம்பெறும் வரிகள் ‘ஒரு செயல் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டு வருமேயானால் அது ஒரு சடங்காகிப் போகிறது.’
வாழ்க்கையும் அவ்வாறான ஒரு சடங்காக இருக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது. நாம் செய்கிறதை மற்றவர்கள் பார்ப்பதற்காகவும், நம்முடைய வெற்றியை அடுத்தவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்கும் என வாழும் வாழ்க்கை என்ன மாதிரியான ஒரு வாழ்க்கை? இரண்டு விதமான வாழ்க்கையை இங்கு மனிதர்கள் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளார்கள். ஒன்று இயல்பான வாழ்க்கை, மற்றொன்று அலங்கார வாழ்க்கை. இயல்பான வாழ்க்கைக்கு எதிராக நாம் செய்யும் செயல்களே அலங்கார வாழ்க்கைக்கு அடித்தளமாகின்றன. அனைத்து புனித நூல்களிலும் தமக்கு துன்பம் விளைவித்தவர்களை மன்னிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது.
ஆலயங்களுக்கு சென்று இப்படியான உபதேசத்தைக் கேட்டு தலையை ஆட்டும் நாம், வெளியே வந்தபின் அலங்காரத்தை வாழ்க்கையில் பூசிக்கொண்டு அதற்கேற்ப அடுத்தவருக்கு இழிவு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது எப்படி? ஐயாக்களே... உடனே எனக்கு நாத்திகன் என்று பெயர் சூட்ட வேண்டாம்.
பள்ளியில் என்னுடன் படித்த நண்பனை நான் ‘மாப்பிள’ என்று அழைத்ததற்கு, “மச்சான் அவன ஏன்டா மாப்பிளனு கூப்பிடறா” என்று அதே பள்ளியில் படித்த மற்றொரு நண்பன் (என் குடும்பத்திற்கு ஒரு வகையில் உறவுக்காரன்) கேட்டான்.
நான் “ஏன் அப்பிடி கூப்பிடா என்னா” என்று கேட்டதற்கு “அவன் நம்ம ஆளுங்க இல்ல மச்சான் கடைசி தெரு பையன்” என்றான். அம்பேத்காரின் படத்தை வாட்ச்அப் மற்றும் முகநூலில் புரோபைல் படமாக வைத்திருக்கும் இந்த ஏஐ காலத்தில், ‘இப்போது எவரும் சாதி பார்ப்பதில்லை’ என்று மேடைக்கு மேடை சிலர் பேசினாலும், எனக்கு அதில் நம்பிக்கையில்லை.
வேலைத்தளத்தில் என் டீ கப் காணவில்லை என்று பாரசாமான்கள் தூக்கும் கூலி தொழிலாளிகள் அவர்களின் கப்பை எடுத்து நான் டீ குடிப்பதை கண்ட என் மேலாளர் “இது போர்ட்டர்ஸ் கப், இதுல போய் நீங்க குடிக்கிறீங்க” என்றார். சட்டம் தடை செய்திருந்தாலும் இயேசுநாதர் குஷ்டரோகியை தமது கையால் தொட்டதை விட நான் செய்தது பெரிய தவறோ என சிந்தனையிலாழ்ந்தேன்.
ஒரு நூலகம் திறக்கப்படும் ஊரில் சிறைச்சாலை மூடப்படும்’ என்று விவேகானந்தர், விக்டர் ஹியுகோ சொன்னதாக நானே சில மேடைகளிலும், பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையிலும் பேசியுள்ளேன். பல நூலகங்கள் உள்ள தெருவுக்கு நேரெதிரே சிறைச்சாலையும்தானே அமைந்துள்ளது, அது ஏன்?
என்னப்பா கேள்வியா கேட்டுட்டு இருக்க! என்று எல்லோரும் என் மீது வருத்தப்படலாம். சிலர் யோவ் என்னயா நீ, இதுதானேயா தினசரி நடைமுறை வாழ்க்கை என்றும் சொல்லலாம். இதுதான் தினசரி நடைமுறை வாழ்க்கையென்றால், இப்படிதான் காலங்காலமாக உலகம் இயங்குகிறதென்றால் பழமொழிகள், புனித நூல்கள் எல்லாம் பொய்யானவையா?
இங்கு ஆன்மீகவாதிகளுக்கும் சரி, நாத்திகவாதிகளுக்கும் சரி, ஒரு வாழ்வியல் கோட்பாடு உள்ளது. அவரவர்கள் அந்தந்த வாழ்வியலை பின்பற்றுகிறோமா என்பதுதான் முக்கியம். பொய் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் நாம்தான் பொய்யான வாழ்க்கையையும் வாழ்கிறோம். சமீபத்தில் ஒரு நடிகரின் நேர்காணல் ஒன்றை நானும், நண்பர் ஒருவரும் பார்த்து கொண்டிருந்தோம். அதில் அவர் படத்தில் மட்டும்தான், தான் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதாகவும், இயல்பு வாழ்க்கையில் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென்றும் என் உயிருக்கும் மேலான ரசிகர்கள் புகைப்பிடிக்க வேண்டாம் எனவும் சொன்னதற்கு “படத்திலேயும் புகைப்பிடிக்காமல் நடிக்கலாம்தானே. என்ன வெங்காயத்துக்கு படத்திலேயும் புகைப்பிடிக்கிறான்” என்றார் நண்பர்.
அன்று நான் லாரியில் சாமான்களை டெலிவரி செய்வதற்காக போய்க்கொண்டிருந்தபோது. ரெட் சிக்னல் விழுந்து வண்டி நிறுத்தப்பட்டது. இடப்பக்கம் ரோட்டை பார்த்தவாறு பெஞ்சுகள் போடப்பட்ட அக்கடையில் சிலர் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
ஒரு வயதான அம்மா சூரியன் கொடுக்கும் தாராள சூட்டில் வெளியே நின்று கொண்டு, கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் தனது இரு கைகளையும் கூப்பி, வயிற்றில் தடவி பசிக்கிறது என்பதை சைகையால் காட்டி வேண்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவளை பார்த்தார்கள்.
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் வரும் எழுத்தாளர் ஜே.ஜே, ஹோட்டலில் வைத்து பிச்சைக்காரன் - முற்றிய தொழுநோயாளியை கண்டதும் அவருக்குள் ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறது. குஷ்டரோகி எப்போதோ போயிருப்பான்.
அவனை தேடி போகும்போது மரத்திற்கடியில் அவன் சாய்ந்திருப்பதை கண்டு தன் சட்டை பையிலிருந்து ஒரு வெள்ளி நாணயம் ஒன்றை எடுத்து அவன் முன்னால் ஜே.ஜே போடுவார். குஷ்டரோகிக்கு விரல்கள் இல்லையெனில் அவன் எப்படி அதை பொறுக்குவான் என்ற யோசனை வந்ததும், ஜே.ஜே காசை எடுக்க கீழே குனியவும் குஷ்டரோகியின் இடதுகால் நிமிரவும் வெள்ளி நாணயமோ மண்தரையோடு அரைத்து போய்விடும். சுந்தர ராமசாமி எனும் மகா எழுத்தாளன் ஒரு வரி எழுதியிருப்பார். ‘அவமானத்தாலும், வெட்கத்தாலும், சுயவெறுப்பினாலும் மனஞ் சுருங்கி ஜே.ஜே ஓடி வந்தான்.’
வெள்ளிக்கிழமை, பிறந்தநாள், இறந்தநாள், பண்டிகைகள் போன்ற நாட்களில் பிச்சைக்காரர்களை தேடி உணவளிப்போர்கள் மற்ற நாட்களில் அவர்களை அருவருப்பாக பார்ப்பதற்கும், இப்பொழுது ஜே.ஜே போல வாழும், வாழாமலும் இருக்கும் ஒருவருக்கும் மனஞ்சுருங்காது. ஏனென்றால் இன்று அனைவருக்கும் சொல்வதற்கு ஏராளமான காரணங்கள் கிடைக்கிறது. அன்று ‘அந்த வயதானவளுக்கு நானாவது உதவி செய்திருக்கலாமே’ என்று என் மனம் அதை பற்றி சிந்தித்தபோது எனக்கும் ஒரு காரணம் கிடைத்தது, ‘அப்போது பார்த்து சரியாக சிக்னல்ல பச்சை லைட் விழுந்திருச்சே!