

அந்த கம்பார்ட் மெண்ட்டில் பாஸ்கரும் இன்னொரு சாமியாரும் மட்டுமே இருந்தார்கள். ரயில் திருச்சியில் இருந்து கிளம்பும்போது ஒரே மழை.
சாமியார் நிஷ்டை போல கண் மூடி இருந்தார். ரயில் திருவெறும்பூர் தாண்டியதும் கண் விழித்தார்.
பாஸ்கர் நமஸ்காரம் என்று கை கூப்ப, ஆசீர்வாதம் போல் கை காட்டினார்.
"சாமி எந்த ஊர்? எங்கே போறீங்க? ..உங்க பேரென்ன?"
"சீர்காழி...என் பெயர் ஆனந்த். தாண்டவ ஸ்வாமி என மக்கள் வைத்தது. உன் பெயர் என்னப்பா?"
"பாஸ்கர் சுவாமி. நானும் சீர்காழிதான் போறேன்."
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் என்ன எங்கே விவரங்கள் விசாரித்த பின் ஒரு நீண்ட மவுனம் அங்கே நிலவியது.
சுவாமியிடம் பேசிய ஒரு நிமிடத்தில் பாஸ்கர் தெரிந்து கொண்டது இது தான். சுவாமி பூர்வாசிரம ஒரிஜினல் பெயர் ஆனந்த்.
சென்னை ஐ ஐ டி யில் எம்.டெக் படித்து அமெரிக்காவில் நாஸாவில் பத்து வருடம் பணி புரிந்து நாடு திரும்பி விட்டார்.
ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப் கட்டுமானத்தில் பங்காற்றியவராம்.
அண்ட சராசரங்களின் பிரமாண்டம் தெரிய வந்த பின் ஆன்மீகப் பற்று மேலிட, அவனன்றி ஒரு அணுவும் அசையாது... என உணர்ந்தார்.
பாரதி பாடிய 'எங்கெங்கு காணினும் சக்தியடா' பாடல் ஒரு விழிப்பைத் தர, சம்பாதித்த பணத்தில் சீர்காழிக்கு முன்னால் வைத்தீஸ்வரன் கோவில் அருகில் ஒரு தோப்பு வாங்கி ஒரு சிறிய ஆசிரம இல்லம் கட்டிக்கொண்டு வந்து விட்டார்.
மக்கள் அவரை ஆனந்த தாண்டவ சாமி என்று கூப்பிட்டனர். சிலருக்கு ஜாதகம் பார்த்து சொல்வார். சில வி ஐ பிக்கள் அவரைப் பார்த்து ஆசி வாங்கிச் செல்வர்.
"சுவாமி ஒரு சந்தேகம்... நீங்க ஒரு ஆன்மீக விஞ்ஞானி சொல்லுங்க.. நாலாவது பரிமாணம் டைம்... ஐந்தாம் பரிமாணம் உண்டா.. அது எப்படி இருக்கும்..? இறந்த
பின் ஆத்மா எங்கே போகிறது.?"
பாஸ்கர் கேட்டதும் மெல்லிய புன்னகை சாமி முகத்தில்.
"உங்க கேள்வி க்கு ஒரு பதில் இருக்கு... முடிந்தால் ஆசிரமத்துக்கு வாங்க... சொல்றேன்... இல்லே காட்டறேன்."
ஒரு ஞாயிறு காலை பாஸ்கர் ஃபோன் செய்து விட்டு ஆசிரமத்துக்குப் போனான்.
ஒரு தென்னந்தோப்பு ...கம்பி முள் வேலி அமைத்து சின்ன கேட். பூட்டப்படவில்லை.
திறந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் சாமி மண் வெட்டியால் புல் செதுக்கிக்கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் மண் வெட்டியைப் போட்டு விட்டு ஆசிரமத்துக்குள் அழைத்துப் போனார்.
பெரிய ஹால்... ஒரே ஒரு நடராஜர் விக்கிரகம். ஒற்றை செம்பருத்திப் பூ வைத்து பார்க்கவே பக்தி மணத்தது. சாம்பிராணி ஓரத்தில் புகைந்தது.
கொண்டுவந்திருந்த பழக் கூடையை நீட்ட, வாங்கிக் கொண்டார். ஒரு தட்டில் டபரா டம்ளரில் காபி கொண்டு வந்தார் சுவாமி.
"ஐயோ நீங்க ஏன் எடுத்து வந்தீங்க...?"
"இங்கே நான்தான் எல்லாமே. நானே சமைத்துக் கொள்வேன்... சுத்தம் செய்வேன். வாரம் ஒரு முறை என் நண்பர் ஒரு ஆள் அனுப்புவார். தோட்டத்தை கூட்டிப் பெருக்கி குப்பை கொளுத்துவான்."
"சாமி நீங்க ஃப்ரீ தானே?"
சிரித்தபடி "வாங்க உங்க கேள்வியை ஆராயலாம்."
நடராஜர் முன்பு ஒரு பலகை போட்டு பாஸ்கரை உட்காரச் சொன்னார்.
"கண்ணை மூடுங்கள். நான் சொல்லும் வரை திறக்க வேண்டாம்."
அவன் புருவ மத்தியில். விரலை வைத்து சில ஸ்லோகங்கள் சொல்லி "உங்கள் உடலை விட்டு நீங்குங்கள்... மேலே வாருங்கள்... இன்னும் மேலே இன்னும் மேலே..."
பாஸ்கர் பறப்பது போல் உணர்ந்தான். எங்கு போகிறோம்?
"இதோ வந்து விட்டோம். இது தான் ஐந்தாம் பரிமாணம்."
ஒரே புகை மண்டலம்....கொஞ்ச நேரம் கழித்து அங்கே சில உருவங்கள் காற்றில் மிதந்த படி வந்து பாஸ்கரை உற்றுப் பார்த்து சென்றன. யாரையும் அடையாளம் தெரியவில்லை பாஸ்கருக்கு. தூரத்தில் கோடிக்கணக்கில் காற்றில் நட்சத்திரக் கூட்டம் போல மிதந்தன... சாமி குரல் கேட்டது.
"பாஸ்கர் இது தான் நீங்க தேடும் ஐந்தாம் பரிமாணம்... ஆவிகளின் உலகம். ஆன்மாக்களின் இருப்பிடம்... இறந்த பின் இங்கேதான் ஆன்மாக்கள் வருகின்றன. உடலுக்கே அழிவு.. ஆத்மனுக்கில்லை.
அது மட்டுமல்ல நீங்கள் விரும்பினால் இறப்புக்கு முன்னும் இங்கே வரலாம். இந்த ஐந்தாம் பரிமாணம் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துள்ளது. அது நினைத்தால் திடீர் எனப் பிளந்து மனிதர்களை உள்ளே இழுத்துக் கொள்ளும்... சிலர் மாயமாய் எந்தச் சுவடும் இன்றி மறைவது இதனால் தான்."
சிறிது நேரம் கழித்த பின், "கண்ணைத் திறங்க..."
கண்ணைத் திறந்த பாஸ்கர் கடிகாரத்தைப் பார்த்தான். மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை...
"இந்த ஐந்தாம் பரிமாணத்தை நிரூபிப்பது கஷ்டம்... சொன்னால் நம்ப மாட்டார்கள்.. சிலருக்கே காட்சிப் படும்."
"ஆமாம் சாமி. கொஞ்சம் மிரட்சியா தான் இருக்கு."
பாஸ்கர் வணங்கி விடை பெற்றான்.
பிறகு பாஸ்கர் வெகு நாட்கள் அலுவலில் மூழ்கிவிட்டான்.
சில வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் ஞாபகம் வர , காரில் அங்கே வந்தான்...
ஆசிரமம் புல் மண்டி காடாய் மாறி இருந்தது... முள் கம்பிவேலி மேல் காட்டுக் கொடிகள் படர்ந்து இருந்தன.
விலக்கிக் கொண்டு உள்ளே நுழைய முற்பட்டபோது, ஒரு ஆள்
டி வி எஸ் பிஃப்டியில் போனவன் நிறுத்தி,
"சாமி மேலே போயிட்டாருன்னு சொல்றாங்க... யாரும் பாடியை பார்க்கலே.. ஆசிரமத்தின் உள்ளே யாருமில்லே..."
பாஸ்கருக்குப் புரிந்ததது.
ஐந்தாம் பரிமாணம் அவரை உயிரோடு உள்ளே இழுத்துக் கொண்டது... அவர் எங்கே இருப்பார் என்று சொன்னால் , யாருக்குப் புரியும்..?!
பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் மரணத்திற்குப் பிந்தைய மனித ஆன்மாவின் பயணத்தையும் அறிவியல் மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் ஆழமாகப் புரிந்துகொண்டு, பிரபஞ்சப் பேராற்றல் குறித்த புதிய தேடலையும் தெளிவையும் அடைவீர்கள்.