
சிறு வயதிலிருந்தே ரகுவுக்குக் கணிதத்தில் ஏகப்பட்ட ஆர்வம்! கணக்குப் பாடங்களில் அவன் கேட்கும் கேள்விகள் சில, ஆசிரியர்களையே சிந்திக்க வைக்கும். அந்த அளவுக்கு அவன் மனத்துக்குள் எப்போதும் கணிதமே வலம் வந்து கொண்டிருக்கும். தானும் ஒரு கணக்கு ஆசிரியராக வேண்டும் என்பதே அவன் ஆசை. அவன் ஆசைப் பயிருக்கு நீர்இறைப்பதைப்போல அவன் உயர்நிலைப்பள்ளி கணக்கு ஆசிரியர் கண்ணனும் உதவினார். மணியடித்த பிறகும் மாணவர்கள் சந்தேகம் கேட்டால், ’நம்ம ராமானுஜத்துக்கிட்ட கேட்டுக்கிடுங்கப்பா!’ என்று சொல்லி அவனை மேதையாகப் புகழ்வார். அந்தப் புகழ்ச்சி ரகுவுக்கு ரொம்பப் பிடிக்கும்!
டென்த், ப்ளஸ் டூ எல்லாவற்றிலும் மேத்சில் சென்டம் வாங்கினான. பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி., எல்லாவற்றிலும் முதல் இடத்தில் தேறினான். உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் கண்ணன் அவனைக் கவர்ந்ததைப்போலவே, கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ராஜாமணி அவனின் வழிகாட்டி ஆனார்!
எந்தச் சிறிய விஷயத்தையும் அவர் காதுகளுக்குக் கொண்டு சென்று விடுவான். தான் எடுக்கும் முடிவுகள் சரியானவைதானா என்பதை அவர் மூலமாக ஒரு தடவை ‘செக்’செய்து கொள்வான். அவரும் ஒரு தந்தையைப் போன்ற வாஞ்சையுடன் அவன் கேட்கும் எதற்கும், மிகவும் சிந்தித்துத் தக்க வழிமுறையைக் கூறுவார். அவன் விரும்பியபடியே கணித ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தான். அவனே மாணவர்களுக்கு வழி காட்டும் பணியில் இருந்தாலும், தன் வழிகாட்டியாகப் பேராசிரியர் ராஜாமணியையே தொடர்ந்து பின்பற்றி வந்தான்.
படித்து முடித்து வேலையும் கிடைத்தபின்பு நம் ஊரில் வழக்கமாகச் செய்வது திருமணந்தானே! பெற்றோர்கள் பார்த்த பெண்ணை, ஒரு முகூர்த்த நாளில் அவன் கரம் பிடித்தான். இல்லற வாழ்க்கை இனிதாகத் தொடங்கி, சில மாதங்கள் வரை மிக அமைதியாகவும் ஆனந்தமாகவும் கழிந்த நிலையில், மனைவியுடன் அவனுக்குக் கருத்து வேறுபாடுகள் மெல்லத் தோன்ற ஆரம்பித்தன. அவனுக்குத் தெரிந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தியும், முழுதான வெற்றியை அவனால் அடைய முடியவில்லை. மன உளைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.
வழக்கம் போல அவன் பேராசிரியரைத் தொடர்பு கொண்டான். ”கவலைப்படாதே! இது எல்லோர் வாழ்விலும் நிகழ்வதுதான். நான் ஓர் ஏழு எழுத்து ஃபார்முலா அனுப்பியுள்ளேன். அதனைப் பிரயோகித்துப் பார். நிச்சயம் பிரச்னைகள் தீரும்!” என்று அவரிடமிருந்து பதில் வந்தது!
மகிழ்வுடன் அந்த ஃபார்முலாவைச் செயல்படுத்த ஆரம்பித்தான். முதல் நான்கு நாட்களுக்கு அது நன்றாகவே வேலை செய்வதாக உணர்ந்து திருப்தியடைந்திருந்த நேரத்தில், சில தோல்விகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று. இருந்தாலும் மனந்தளராமல் அவன் சூத்திரத்தைப் பயன்படுத்தினான்.
என்னதான் புத்திசாலித்தனமாக அதனைப் பயன்படுத்தினாலும், நாளாக…நாளாக…பிரச்னைகளின் எண்ணிக்கை அதிகமாகி, ரகுவின் அமைதிக்குப் பங்கம் ஏற்பட ஆரம்பித்தது. பிரச்னை பூதாகாரமாகிப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால் அதிலிருந்து விடுபட எண்ணிய ரகு மீண்டும் பேராசிரியரைத் தொடர்பு கொண்டான்!
“என்ன ரகு! நம்ம ஃபார்முலா சரிப்பட்டு வரலன்னுதானே சொல்ல வர்றே?” என்று அவரே ஆரம்பிக்க “ஆமா சார்!” என்றவனை இடை மறித்து, ”டோன்ட் ஒர்ரி மை சன்! இப்ப நான் ஓர் ஆறு எழுத்து சூத்திரத்தை அனுப்பறேன். அது ஒனக்கு பூரண மனத் திருப்தியைக் கொடுக்கும். உன் வாழ்க்கை இனி பிரகாசமா இருக்கும்!” என்பதுடன் சூத்திரத்தையும் அனுப்பியிருந்தார்!
ஏழு எழுத்து சூத்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு ஆறு எழுத்து ஃபார்முலாவை அவன் பயன்படுத்த ஆரம்பித்ததும் எல்லாம் அவனுக்கு வெற்றியாகவே அமைந்து திருப்தியைக் கொடுக்க ஆரம்பித்தது. அவனும் அவன் மனைவியும் ஆனந்த வாழ்வில் திளைத்தனர்!
சூத்திரம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்?
ரொம்ப சிம்பிள்தாங்க!
ஏழு எழுத்து: அடக்கிப் பார்!
ஆறு எழுத்து: அடங்கிப் போ!