
மனதோடு அடங்கி கிடந்த பழைய நினைவுகளை, ரகுவுக்கு இந்த பஸ் பயணம் நினைவுப் படுத்தியது. வேகமாக நகரும் சாலையோர மரங்கள், அவ்வப்போது கண்ணில் படும் வாய்க்கால் சந்திப்புகள், கலகலவென சிரித்து கடக்கும் காவிரி ஆறு, இப்படி இயற்கை எழில் ததும்பி இருப்பது தான்… கிராமத்து வாழ்க்கையின் சிறப்பு. இதன் அருமை, நகரத்தில் வாழ்ந்த பிறகு தான் உணர முடிகிறது.
ஆற்றங்கரை ஆலமரத்து பிள்ளையார் கோவில், ஆலமர விழுதுகளில் விளையாடிய ஆனந்தம், பள்ளிக்கூட வாசலில் மிளகாய் பொடி தூவி சாப்பிட்ட மாங்காய் துண்டுகள்... ஐஸ் வண்டி - சேமியா ஐஸ்… இப்படி... அந்த காலத்தில் அனுபவித்த சுகங்களை நினைத்து, உடம்பை ஒருகணம் சிலிர்த்து கொண்டான்.
அரசு பள்ளியில், சரியாக படிப்பு வராமல் 'நானும் பள்ளிக்கூடம் போறேன்' என்று பெயர் பண்ணி ஒன்பதாம் வகுப்பு வரையில்.... சமாளித்துக் கொண்டிருந்தவனுக்கு, பத்தாவது படிக்கும் போது... படிப்பு என்பது வேப்பங்காயாக கசந்தது.
"மத்த பசங்களால படிச்சு நல்ல மார்க் வாங்க முடியுது. உன்னால மட்டும் ஏன்டா முடியல!?"
என்று அவனுடைய அப்பாவிடம் அடிக்கடி திட்டு வாங்கி, அடி வாங்கி... கடைசியில் அதிக மார்க் வாங்கும் ஆசையில் அரையாண்டு பரிட்சையில் பிட்டு அடித்து மாட்டிக்கொண்டான். பள்ளிக்கூடத்தில் ஆசிரியரிடம் திட்டு, வீட்டில் அப்பாவிடம் தர்ம அடி எல்லாம் சேர்ந்து...
'இனி இந்த படிப்புக்கும் நமக்கும் ஒத்து வராது; இங்கே வீட்டில் இருந்தால் “படி படி” என்று தொல்லை பண்ணிக்கொண்டே இருப்பார்கள்' என்று நினைத்து, வீட்டை விட்டு, வெளியூர் போய் விருப்பபடி வாழலாம் என்று அவன் முடிவெடுத்தான். ஒரு நாள் அதிகாலையில், பக்கத்துக்கு ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு போய், சென்னைக்கு கிளம்பி விட்டான்.
ஏதோ ஒரு வேகத்தில், என்னவோ ஒரு நம்பிக்கையில் ஊரை விட்டு வந்ததும்... ஆரம்பத்தில் திசை தெரியாமல் அலைந்து திரிந்தான். ஒரு வேளை சாப்பாட்டிற்கே நிறைய சிரமப்பட்டான். ரகுவுக்கு தினசரி வாழ்க்கையே போராட்டமானது. கிடைத்த வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்தான்.
ஊரிலிருந்த உறவுகள் அனைத்தும் அவனை தேடி அலைந்தார்கள். அப்பாவும் அம்மாவும் தினசரி பேப்பர்களில் விளம்பரம் கூட கொடுத்து இருந்தார்கள்.
ரகுவுக்கு, அவன் அம்மாவின் முகம் தான் அடிக்கடி நினைவிலும், கனவிலும் வந்து போகும். வீட்டில் உள்ளவர்களோடு போனில் பேச அவனுக்கும் விருப்பம் இருந்தாலும், அவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்தது.
ஏறக்குறைய மூன்று வருடம் கழித்து, அவன் பக்கத்து வீட்டு அக்காவை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.
“அப்பா அம்மாவை தவிக்க விட்டு இப்படி நீ ஊரை விட்டு வந்திருக்க கூடாது. நீ ஊரை விட்டு வந்ததுல இருந்து, அவங்க உன்னை தேடி அலைஞ்சு நொந்து போய் இருக்காங்க தெரியுமா?!”
என்று திட்டிவிட்டு, அந்த அக்கா அவனுக்கு நிறைய அறிவுரை சொன்னார்கள். கூடவே ஊருக்கு வர சொன்னார்கள்.
இந்த சென்னை நகரத்தில் இருந்து பழகி விட்டு, மீண்டும் கிராமத்து சூழலில் போய் வாழ அவன் விரும்பவில்லை. அவன் அப்போது தான் ஒரு ஜவுளி கடையில், முதலாளிக்கு நம்பிக்கையான ஆளாக மாறி, அங்கேயே தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அக்கா மூலமாக தகவல் தெரிந்து, அவன் அப்பா அவனை பார்க்க அங்கே வந்தார்.
அப்புறம் அந்த முதலாளி தான், அவனுடைய அப்பாவை சமாதானம் செய்து திரும்ப ஊருக்கு அனுப்பி விட்டார். அதற்கு பிறகு இந்த பத்து பதினோரு வருட காலத்தில், அக்கா திருமணத்திற்கு ஒருமுறை, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஒருமுறை என்று… இரண்டு தடவை மட்டுமே அவனுடைய ஊருக்கு வந்து போயிருக்கிறான். இப்போது சென்னையில் பிரபலமான அந்த துணிக்கடையில் மேலாளராக முக்கிய பொறுப்பில் அவன் இருக்கிறான்.
அடுத்த மாதத்தில் அவனுக்கு கல்யாணம் ஆகப் போகிறது. நெருங்கின சொந்தத்தில், மாமாவுடைய பெண் மல்லியை பேசி முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த முறை, கல்யாணத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய சில வேலைகளை முடிக்க, அவன் அப்பா வரச் சொன்னதால் வந்து இருக்கிறான். அப்படியே, ஊர் எல்லை மாரியம்மன் கோவிலில் வைத்து மல்லியை சந்திப்பதாக, அவளிடம் பேசி இருக்கிறான்.
இதுவரை அவளோடு கைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தவனுக்கு, இப்போது நேரில் சந்தித்து பேசப்போவதை நினைத்ததும், மனசுக்குள் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
ஒரு வழியாக பேருந்து ஊருக்கு வந்து சேர்ந்து பள்ளிக்கூட பஸ் நிறுத்தத்தில் நின்றதும், ரகு அங்கே இறங்கிக் கொண்டான்.
அதுதான் அவன் படித்த அரசு பள்ளிக்கூடம்… இன்னமும் அதன் வாசலில் மிளகாய் பொடி தூவிய மாங்காய் துண்டுகள்... ஐஸ் எல்லாம் விற்றுக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது, சட்டென மழை வருவது போல் இருட்டத் தொடங்கி, படபடவென்று மழையும் பெய்ய தொடங்கியது. மழையில் நனையாமல் இருக்க, அவசரமாக பள்ளிக்கூட வாசலில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ஒதுங்கி நின்றான்.
மழைக்கு கூட பள்ளிக்கூட வாசலுக்கு ஒதுங்காதவன்னு ஒரு சிலரை சொல்வார்கள். அது போல இந்த படிப்பே வேண்டாமுன்னு ஊரை விட்டு ஓடிப்போனவன், இன்று அதே பள்ளிக்கூட வாசலில் மழைக்கு ஒதுங்கி நிற்க வேண்டி வந்ததை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டான்.
போனமுறை அவன் ஊருக்கு வந்தபோது… அவனுடைய அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
'நீ சென்னை வரைக்கும் போய், யாரையுமே தெரியாத ஊரில்...போராடி வாழ்ந்து முன்னேறி இருக்கே..! இதே முயற்சியை நீ படிப்பு விஷயத்திலயும் காட்டியிருந்தா, உன் வாழ்க்கை இன்னும் சிறப்பாக மாறி இருக்கும்...'
உண்மைதான். அவன் படித்திருந்தால் … இன்னும் நல்ல நிலமைக்கு வந்திருக்க முடியும் என்று அவனும் நினைத்ததுண்டு. அவன் ஒரு மேலாளராக இருந்தாலும், பணம் உள்ளவர்களை விட, படித்தவர்களிடத்தில் பேசும் போது… அவனுக்குள் உண்டாகிற தாழ்வு மனபான்மையை அவனால் தவிர்க்க முடிவதில்லை. அந்த மன வருத்தத்தை, வருங்கால மனைவி மல்லியிடம் கூட போனில் பகிர்ந்து இருக்கின்றான். மல்லி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்திருக்கிறாள்.
'அதற்கென்ன, இப்போதும் கூட நீங்கள் விரும்பினால் படிக்க முடியும். அஞ்சல் வழி அல்லது பகுதி நேர படிப்பு என்று நிறைய வழிகளிருக்கு' என்று மல்லி சொன்னாள். அவள் சொன்னதை பற்றி... அன்று அவன் யோசிக்கவில்லை.
அப்போது சட்டென்று ஒரு மின்னல் 'பளிச்' சென்று வானத்தில் மின்னி மறைந்தது. அந்த நிகழ்வு, அவனுக்கு எதையோ சொல்ல வந்த மாதிரி தெரிந்தது .
புத்தருக்கு போதி மரம் போல அந்த பள்ளிக்கூட பேருந்து நிறுத்தம் ரகுவுக்கு ஒரு புதிய சிந்தனையை, நம்பிக்கையை கொடுத்தது.
இனிமேலும் படிக்க வாய்ப்பிருக்கு என்கிற போது, அவனும் ஏன் அதற்கு முயற்சி செய்ய கூடாது?