
டைரக்டர் விஸ்வாவுக்கு பெரிய ஷாக்!
ஆனந்த அதிர்ச்சி!
நூறு வயலின்கள் ஒரு சேர மனதில் ஆனந்த பைரவி வாசித்தன...
காரணம் - தற்போது டிவியில் வந்த நடிகை மீராவின் பேட்டி!
பளிச்சென்று ஓபனாய் மனம் திறந்து சொன்னாள்.
“ஐ ஃபீல் ஐயாம் இன் லவ் வித் டைரக்டர் விஸ்வா. இன்னமும் அவரிடம் சொல்லவில்லை. இதன் மூலம் என் காதலை டைரக்டர் விஸ்வாவுக்கும் ரசிகர்களுக்கும் அறிவிக்கிறேன்.”
என்னது? கிள்ளிப்பார்த்துக்கொண்டான். நடப்பது கனவல்ல நிஜம்தான்!
மீரா! மேக்கப்பே தேவையில்லாத பேரழகு. கடந்த 5 வருடமாய் ஃபீல்டில் நம்பர் ஒன்!
ஏகப்பட்ட நடிகர்கள், ப்ரொட்யூசர்ஸ், டைரக்டர்ஸ், கேமராமேன், ஏன் தொழிலதிபர்கள் கூட நேரே வந்து வழிந்து ஜொள் விட்டு ட்ரையாகி போனார்கள்.
எதிலும் சிக்காத விலாங்கு மீன்! என்னிடமா?
எப்படி?
ரெண்டு வருடம் முன்பு உனக்கு நடிக்கவே வராதென முகத்துக்கு நேரே திட்டி மீராவை படத்திலிருந்து கழட்டி வி்ட்டேனே! எவ்வளவு ஆத்திரமும் கோபமுமாய் போனாள்!
போன வாரம் சிறந்த நடிகை போட்டியில் என் ஒரே ஒரு ஜூரி ஓட்டால் மீரா தோற்றுப்போனது அவளுக்கும் தெரிந்த விஷயம் தானே.
இருந்தும் டிவி பேட்டியில் 'டைரக்டர் விஸ்வாவின் எல்லா படமும், ஏன் ஒவ்வொரு ஃப்ரேமும், எனக்கு பிடிக்கும்' என்றாளே!
அப்படியென்றால் என்னை ரொம்ப நாளா லவ் பண்றா. நான் தான் புரிஞ்சுக்கலை
“கங்க்ராட்ஸ், லக்கி ப்ரைஸ், பெஸ்ட் ஆஃப் லக், படவா இத்தனை நாள் மறைச்சிட்டியே! எப்ப கல்யாணம்?” என்று ஏகப்பட்ட ஃபோன் கால்கள்.
மீராவின் கார் நேரே வர வாசலுக்கு ஓடினான்.
“வெல்கம் பேபி” என்று ஜொள்ளினான்.
தேவலோக ட்ரீம் கேர்ளாய், வாசனையாய், பொக்கே நீட்டி “ஐ லவ் யு!” சொல்ல, இமைக்க மறந்து “மீ டூ” என்றான்.
“ரெடியா வாங்க. உங்களைக்காண பெரிய மீடியா க்ரூப்பே வெளியே” மீராவின் மியூசியானோ குரல் மந்திரிச்சு விட்டது போல் கோட் சூட்டில் புகுந்து வந்தான்.
ஏகப்பட்ட நியூஸ் ஏஜென்ஸிகள், டிவி, மீடியாக்கள். ஆனால் கேள்வி ஒன்று தான்.
“எப்ப மேரேஜ்?”
மீராவின் முகத்தைப்பார்த்தான் விஸ்வா
“சொல்லுங்க விஸ்வா”
“நீயே சொல்... “
“ஆசை தீர காதலிச்சிட்டு... அப்புறம்” என்றாள்.
“ஆஹா கவிதை! சூப்பர்...” என்ற பாராட்டுக்கள்
“விஸ்வா எப்ப டிரீட்?”
"இதோ இப்பவே வாங்க” என்று டபள் 5 ஸ்டார் ஓட்டலுக்கு அழைக்க, சடன் சர்ப்ரைஸ் என்று மீடியாக்கள் மகிழ, விடிய விடிய ஒரே கூத்து!
“இப்படியே ஒரு ப்ளசன்ட் டிரிப் டு ஊட்டி?” என்று மீரா விஸ்வாவிடம் கிசுகிசுக்க...
விஸ்வா நெளிந்தான்.
மூன்று நாட்கள் ஊட்டியில்! ஹாட் ஸ்டே!
பணம் பம்பரமாய்ச்சுற்றி பறக்க, எதைப்பற்றி கவலையில்லாத மோனநிலை!
மறுபடி ஊருக்கு திரும்பினால் மீராவும் கூடவே தங்க, ஒருவாரம் ஒரு நொடியாய் பறக்க,
“என் வீட்டுக்கு எப்ப வரீங்க?”
“இது தான் இனி உன் வீடு. அது என் மாமியார் வீடு.” என்றான்.
“யூ நாட்டி” என்று கொஞ்சி விஸ்வாவே பார்த்தேயிராத காஸ்ட்லி சூட், கோட், ஷூ, ஹாட் ட்ரிங்க்ஸ் என வாங்கி அடுக்கினாள்.
“உன் சொத்து பூரா காலியா?” விஸ்வா கேட்க,
“என் சொத்தே நீங்க தான்,” என்று ஹக் பண்ண, மெய் மறந்தான்.
அன்றும் பொழுது நொடியாய் கரைய, அதிகாலையில் செகரெட்டரி ஃபோன் செய்து, ”மேடம் இன்று அவுட்டோர்” என்று ஞாபகப்படுத்த,
அடித்து பிடித்து கிளம்பினாள்...
போகவே மனமில்லை.
இரண்டாம் நாள் மீராவிடமிருந்து ஃபோன்.
“ஏன் ரெண்டு நாள் ஃபோன் பண்ணலை?” கோபமாய் கேட்டான்.
பதிலில்லை.
மேலும் கோபமாய் வந்தது...
“இப்ப ஏன் ஃபோன் பண்ணினே? வெறுப்பேத்தவா?”
“ஆமாம்” அழுத்தமான பதில்.
“நம்ம லவ் ப்ரேக்அப் ஆயிடிச்சு?” என்றாள்.
“என்ன சொல்றே?” கிணறில் இறங்கும் குரலில் கேட்டான்.
“இப்பத்தானே சொன்னேன். நம் லவ் ப்ரேக்அப் ஆச்சு."
“ஏன்?”
“அப்படி கேளுடா என் சிங்கக்குட்டி! எனக்கு நடிக்கவே தெரியலைனு உன் படத்தை விட்டு தூக்கினே. எனக்கு எதிரா ஓட்டுப்போட்டு சிறந்த நடிகை போட்டியிலிருந்து என்னை விலக்கினே. எனக்கு நடிக்க தெரியாதா? ஆஹ்ஹாஹ்ஹா! இப்ப பாத்தீல்லே! எப்படி உன்னைக் காதலிப்பதுபோல் நடிச்சு ஏமாத்திட்டேன்!? மீடியாவிலே மாலையில் ஹாட் நியூஸா வரும். பாத்து அனுபவி! பைபை.” ஃபோனை வைத்தாள்
‘அடிப்பாவி எல்லாம் நடிப்பா?’ வியர்த்து விறுவிறுத்து மயங்கி விழுந்தான் டைரக்டர் விஸ்வா.