

1. என் தேசம்:
நகரத்திலேயே பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட அபார்ட்மென்ட். இந்து பண்டிகைகள் கிறிஸ்துமஸ் ரம்ஜான் இப்படி எந்த மதம் சார்ந்த பண்டிகைகள் வந்தாலும் அங்கிருக்கும் பெரிய மைதானம் அலங்காரம் செய்யப்பட்டு விழா கொண்டாடப்படும். இந்து பண்டிகை என்றால் அங்கு குடியிருக்கும் கிறிஸ்துவ முஸ்லிம் நண்பர்கள் கலந்து கொள்வார்கள். கிறிஸ்துமஸ் ரம்ஜான் என்றால் இந்துக்களும் தங்கள் பண்டிகை போல் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வார்கள். இதற்கு காரணம் அங்கு குடியிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜோஷ் அவரும் அவருடன் பணிபுரிந்த ராஜன்பத்மநாபன் அவரும் தான்.
சுதந்திர தின விழா கொண்டாட்டம் என்றால் அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் நாட்டுப் பற்றை விளக்கும் நாடகங்கள், பேச்சு போட்டி என பங்கேற்று சிறப்பித்து விடுவார்கள்.
அன்று சுதந்திர தின விழா ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த ஜோஷ், ராஜனை காணோமே என்று தேடினார். விழா ஆரம்பிக்க சிறிது நேரம் மட்டுமே இருக்க, ராஜன் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்தார். ராஜனுக்கு அறிமுகப்படுத்த மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு விழா மேடைக்கு வந்தார்கள்
எப்போதும் ஜோஷ் முன்னுரை பேசினால் ராஜன் முடிவுரை பேசுவார். மேடையில் அமர்ந்திருந்த அனந்த் அவர்களை பார்த்து "இந்த முறை நீங்கள் முன்னுரை பேசினால் பொருத்தமாக இருக்கும்," என்று ஜோஷ் கூற, அனந்த் பேச தொடங்கினார்..
"சிறு அறிமுகம்... நான் ஜோஷ் அவர்களுடன் ராணுவத்தில் பணியாற்றி உள்ளேன். அவர் பிறந்து வளர்ந்த கிராமத்து அருகில் தான் என் கிராமமும். கிராமத்துக்கு பல வருடங்கள் கழித்து வந்த ஜோஷ் அவர்கள் இம்முறை என்னை சந்திக்க வந்தார். எங்கள் கிராமத்தில் விவசாயம் தான் முக்கிய தொழில். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க நகரத்திற்கு அனுப்பி அங்கேயே வேலை கிடைத்தால் நல்லது என்று அனுப்பி விடுகிறார்கள்.
அவர்கள் படித்த கல்வி நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றவே எனக்கு இருந்த பூர்வீக நிலத்தில் கட்டடம் கட்டி அங்கே ஒரு சிறிய லைப்ரரி ஆரம்பித்து பக்கத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வந்து புத்தகங்கள் படிக்க அனுமதி தந்தேன்.
விவசாய வேலைகளுக்கு செல்லும் பெண்களை அவர்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் வந்து கல்வி பயில ஏற்பாடு செய்தேன். அதற்காக எத்தனையோ பள்ளிகள் சென்று கல்வியறிவு வளர உதவி செய்ய ஆசிரியர்களை கெஞ்சி இருக்கிறேன். பலர் விருப்பத்துடன் வந்து கல்வி பயில உதவி செய்கிறார்கள்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய போது எனக்கு ஏற்பட்ட நாட்டுப் பற்று இந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்ற சிறிய ஆசை தான். நாளிதழ்களில் நாளும் வரும் பெண்களை கொச்சைப்படுத்தும் செய்திகள், கொலை கொள்ளை இது எதுவுமே ஒரே நாளில் மாற முடியாது. ஆனால் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உலகத்தை எப்படி மாற்ற விரும்புகிறீர்களோ அப்படி முதலில் நீங்கள் மாறுங்கள். ஆம். அப்படி நான் மாறினேன். இன்று பல மாணவர்கள் என் இடத்திற்கு வந்து கல்வி கற்று தருகிறார்கள்.
அவர்களுக்கு விவசாயம் என்றால் என்ன என்பதை என் கிராமத்து மக்கள் சொல்லித் தருகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கற்றுத் தருகிறோம். படித்து பிறகு ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நானும் ஜோஷ் மற்றும் ராஜன் அவர்களும் வழி நடத்துகிறோம்.
இன்று இந்த கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிக்க பெருமை அடைகிறேன். இது அலங்காரக் கொடி அல்ல. பல வீரர்கள் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்த சுதந்திரம் தான் நம் தேசியக் கொடி.
இதோ இந்த கொடி காற்றில் அசையும் போது அது எனக்கு வெறும் காற்றாக தோன்றவில்லை. நமக்கு சுதந்திரம் பெற்றுத் தர போராடிய வீரர்களின் மூச்சுக் காற்றாகத் தான் நான் உணர்கிறேன். இந்தியராக வாழ்வதில் பெருமிதம் கொள்வோம். நன்றி ஜெய்ஹிந்த்."
பேசி முடிக்கையில் விழாவில் கலந்து கொண்டு அமர்ந்திருந்த அனைவருக்கும் தேசிய கொடி அசைவில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் மூச்சு காற்றை சுவாசிப்பது போல் தான் இருந்தது. வந்தே மாதரம்.
**************
2. ஜாதிமத பேதமில்லை:
தாய்நாட்டின் பெருமை பற்றி அடுத்த வாரம் பள்ளியில் நடக்க இருக்கும் விழாவில் உரை ஆற்ற அழைப்பு வந்த மகிழ்ச்சியில் பேச வேண்டிய குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜோசப்.
மனைவி மேரியைக் காணவில்லையே என்று பார்த்த போது தான் வெளியே இருந்து வந்த மேரி "எதிர் ஃப்ளாட் டில் இருக்கிற உமா, அதான் உங்க கிட்ட படிச்ச பையன் ராமுவோட மனைவி, வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தாங்க.. இருங்க.. டீ கேட்டீங்களே.. இதோ போட்டு தரேன்," என்ற மனைவியின் கையில் இருந்த பையைப் பார்த்து "என்ன இது?" என்று கேட்க, "அது வந்துங்க.. அவங்க வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை செஞ்சாங்களாம்.
அந்த உமா வந்து 'ஆன்ட்டி நீங்க வீட்டுக்கு அவசியம் வாங்க'ன்னு கூப்பிட்டா.. போனப்போ எல்லாருக்கும் கொடுத்த மாதிரி தாம்பூலம் கொடுத்தாங்க.."
சொல்லி முடிப்பதற்குள் அந்த பையை பிடுங்கி அருகில் உள்ள டேபிளில் வைத்து விட்டு, "மேரி... நாம இந்துக்கள் பண்டிகைக்கு போகலாமா? எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இதை செய்றே..." என்று கோபத்துடன் கூறிய கணவனிடம்,
"இங்க பாருங்க... அன்போட கூப்பிட்டதால போனேன்.. அவங்க இந்துவா இருக்கட்டும்.. அதுக்காக பழகக் கூடாது பேசக் கூடாது ன்னா எப்படிங்க? இப்ப கூட 'என் தேசம்' ன்னு பேசக் கூப்பிட்டு இருக்காங்கன்னு "பல்வேறு மொழி இன மக்களை ஒருங்கே கொண்டு வேற்றுமை பாராது ஒற்றுமை காணும் தேசம் நம் தேசம்" ன்னு நீங்க குறிப்பு எழுதிக் கிட்டு இருந்ததை நானும் பார்த்தேன். அந்த ஒற்றுமை வீட்டளவில் இல்லையே. இந்து மதம் அவர்களுடன் பழகாதே.. பக்கத்து வீட்டு பேகம் முஸ்லிம் அவங்களோட பழகாதேன்னு இவ்வளவு வேற்றுமை பார்க்கற நீங்க முதல்ல ஜாதி மத வித்தியாசம் பார்க்காமல் எல்லார்கிட்டயும் அன்பா பழகுங்க. அப்புறம் பேசலாம் என் தேசம் ன்னு." கோபமாக சென்றாள் மேரி.
சுதந்திர தின விழாவில் என் தேசம் என்று மாணவர்கள் முன் உரை ஆற்றி விட்டு மாணவர்களை சந்தித்து பேசிய மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த ஜோசப் விரைவாக வந்த பைக் இடித்து கீழே விழுந்து இதோ மருத்துவமனையில்...
கண் முழித்த கணவன் ஜோசப் பை பார்த்த மேரி கண்களில் கண்ணீருடன், "உங்களுக்கு ஒண்ணுமில்லங்க.. பைக்கில் வந்தவர் இடிச்சதில மயங்கி விழுந்துட்டீங்க.. கை கால் எல்லாம் அடி.. ஒரே ரத்தம்.. நல்ல வேளை நம்ப எதிர்த்த ஃப்ளாட் ராமு உங்க பழைய மாணவர் ன்னு ஸ்கூலுக்கு வந்திருக்கார்..
வழியில் நீங்க விழுந்ததை பார்த்ததும் அவர் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து எனக்கு போன் பண்ணினார். இரண்டு நாளா அவங்க வீட்டில் இருந்து உங்களுக்கும் எனக்கும் சாப்பாடு கொண்டு வந்து தராங்க.."
பேசி முடிக்கையில் டாக்டர் உள்ளே நுழைந்தார். "சார் உங்களை இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்றோம்.."
பதிலுக்கு நன்றி சொன்ன ஜோசப் பிடம் "நன்றி சொல்லுங்க.. இதோ உங்களை கூட்டிட்டு வந்த ராமுவுக்கு.. கரெக்ட் டைம் க்கு கூட்டிட்டு வந்ததும் இல்லாம உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டது தெரிஞ்சு உடனே அவர் தான் ரத்தம் கொடுத்தார்.. உங்க ஸ்டூடண்ட்டு சொன்னார்..," என்று சொன்ன டாக்டர் அருகில் நின்று கொண்டிருந்த ராமுவின் கையைப் பிடித்து கண்கலங்கி அழுத ஜோசப்பின் கண்ணீரின் அர்த்தம் மேரிக்கு மட்டுமே புரிந்தது.