சிறுகதை: அந்த ஒரு 'சரி'!

அரசாங்க வேலைக்காகவே காதலைத் தள்ளிவைத்த ஜோடி: இது ஒரு வித்யாசமான காதல் கதை!
காதல் கதை | NCC Cadet
காதல் கதை| NCC CadetAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

"லெப்ட்... ரைட்... லெப்ட்...!"

காலை ஐந்து மணி.

மதுரையில் உள்ள ஒரு கலைக் கல்லூரி மைதானம் முழுவதும் NCC கேடட்டுகளின் காலடிச் சத்தம் எதிரொலித்தது.

பத்து மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களுக்கான பத்து நாள் ஒருங்கிணைந்த முகாம்.

குணமித்ரன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

ஜனனி , விருதுநகர் மகளிர் கல்லூரி NCC சீனியர் அண்டர் ஆபிசர்.

முதல் நாள் முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை.

"வரிசை நேராக இல்லை."

"உங்களால்தான்."

"நான் இல்ல... நீங்க."

சிறிய வாக்குவாதம்.

ஒரு சின்னப் பார்வை

இரண்டாம் நாள்.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி.

குணமித்ரன் முதல் இடம்.

மூன்றாம் நாள்.

வரைபட வாசிப்பு.

ஜனனி முதல் இடம்.

போட்டி இருந்தது.

பொறாமை இல்லை.

மரியாதை மட்டும் மெதுவாக வளர ஆரம்பித்தது.

பத்தாம் நாள் முகாம் முடியும் நேரம்.

பரிசளிப்பு விழாவில்,

"சிறந்த கேடட் – குணமித்ரன்."

"சிறந்த கேடட் – ஜனனி"

இருவரும் ஒரே மேடையில் நின்றார்கள்.

அன்றுதான் முதன்முறையாக ஒருவருக்கொருவர் மனதார வாழ்த்து சொன்னார்கள்.

அந்த ஒரு கை குலுக்கல்...

அவர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று இருவருக்கும் அப்போது தெரியாது.

முகாம் முடிந்து ஒவ்வொருவரும் தங்கள் கல்லூரிக்குத் திரும்பினார்கள்.

ஒருநாள்...

"Congratulations..."

என்று ஒரு குறுஞ்செய்தி.

அதற்குப் பதில்,

இதையும் படியுங்கள்:
சிறுகதை: லாட்டரி அடிச்சுடுச்சு… ஆனா…?
காதல் கதை | NCC Cadet

"Thank you."

அதுதான் ஆரம்பம்.

அதற்குப் பிறகு...

படிப்பு.

NCC தேர்வுகள்.

குரூப் -2, SSC, வங்கி, UPSC...

பேச்சுகள் எல்லாம் எதிர்காலத்தைப் பற்றித்தான்.

ஒருநாள் ஜனனி சொன்னாள்.

"நமக்கு ஒரு ஒப்பந்தம்."

"என்ன?"

"இனிமேல் ஸ்மார்ட்போன் வேண்டாம்."

அவன் சிரித்தான்.

"என்ன ஜோக்கா?"

"இல்ல."

"அப்ப?"

"நமக்கு இலக்கு முக்கியம்."

"சரி."

"தேவையில்லாமல் இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது."

"சரி."

"WhatsApp... Instagram... Video Call... எதுவும் இல்லை."

"சரி."

"நமக்கு அரசு வேலை கிடைக்கும்வரை காதல்கூட நம்ம படிப்பை கெடுக்கக் கூடாது."

அவன் சிரிக்கவில்லை.

ஒரே ஒரு வார்த்தை.

"சரி."

அந்த "சரி"யில்தான் காதல் இருந்தது.

அடுத்த மூன்று ஆண்டுகள்...

காதலர்கள் போல அவர்கள் வாழவில்லை.

போட்டித் தேர்வு எழுதும் இரண்டு போராளிகளாக வாழ்ந்தார்கள்.

மாதத்திற்கு ஒருமுறை.

"எப்படி இருக்க?"

"நல்லா."

"படிப்பு?"

"நடக்குது."

"சரி... வை."

முப்பது வினாடிகள்.

அவ்வளவுதான்.

பிறந்தநாள் வாழ்த்துக்கூட இரவில் பன்னிரண்டு மணிக்கு

வரவில்லை.

தேர்வு முடிந்த பிறகுதான் வந்தது.

"Belated wishes."

அதுவே அவர்களின் காதல்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஆ.கா.சுப்ரமணி alias ஆயிரம் கார்டுகள் வாங்கிய அபூர்வ சுப்ரமணி!
காதல் கதை | NCC Cadet

முதலில் குணமித்ரனுக்கு வேலை கிடைத்தது.

தமிழ்நாடு அரசுப் பணி.

ஆறு மாதங்களுக்குப் பிறகு...

ஜனனிக்கும் அரசு வேலை.

அன்று இரவு.

பல ஆண்டுகளுக்குப் பிறகு.

முதல் முறையாக...

ஏழு நிமிடம் பேசினார்கள்.

அதில்...

"Love you"

என்ற வார்த்தைகூட இல்லை.

‘ஒப்பந்தம் முடிந்தது’

என்ற ஒரே ஒரு வாக்கியம் மட்டும் இருந்தது.

ஆனால்...

வாழ்க்கையின் கடினமான தேர்வு அப்போதுதான் ஆரம்பமானது.

ஜனனி வீட்டில் எதிர்ப்பு.

‘வேறு ஜாதி.’

குணமித்ரன் வீட்டில் எதிர்ப்பு.

"நம்ம உறவிலேயே பார்க்கலாம்."

இருவரும் ஓடிப் போகவில்லை.

வீட்டை விட்டு வெளியேறவில்லை.

பசியில் வாடவில்லை..

சண்டை போடவில்லை.

ஒரே ஒரு முடிவு.

ஒரே ஒரு நம்பிக்கை.

"நம்மள வளர்த்தவங்கள காயப்படுத்தி நம்ம வாழ்க்கையை

ஆரம்பிக்கக்கூடாது."

மூன்று மாதங்கள்.

ஆறு மாதங்கள்.

ஒரு வருடம்.

மெதுவாக இரு குடும்பங்களும் புரிந்துகொண்டன.

"நம்ம புள்ளைங்களுக்குப் பிடிச்சுருச்சு. அவுங்கதான

வாழப்போறாங்க...

இவ்வளவு வருடம் காத்திருந்த பிள்ளைகள்...

இன்னும் கொஞ்ச நாள் காத்திருப்பாங்க.

அவசரப்பட மாட்டாங்க."

காதல் கதை| newly married couple with phone
காதல் கதை| newly married couple with phoneAI Image

ஒரு நல்ல நாள் பார்த்து தேதி…

இருவரின் நம்பிக்கை... மவுனம்...

இரு வீட்டுக் கதவுகளையும் திறந்தது.

திருமண மேடையில்...

மணமகளின் கையில் இன்னும் அதே பழைய கீபேட் போன் இருந்தது.

அதைப் பார்த்து குணா சிரித்தான்.

"இப்பவாவது ஸ்மார்ட்போன் வாங்கலாமா?"

ஜனா சிரித்தாள்.

"வாங்கலாம்..."

"ஏன்?"

"இப்போ நம்ம காதலைக் காப்பாத்த வேண்டிய அவசியமில்லை...

நம்ம வாழ்க்கையை வாழ வேண்டிய நேரம் வந்துடுச்சு."

மணவிழாவில் இருந்த அனைவரும் கைதட்டினார்கள்.

ஆனால்...

அவர்கள் இருவருக்கும் மட்டும் தெரியும்...

அந்தத் திருமணத்தை நடத்திவைத்தது காதல் அல்ல.

'ஒப்பந்தத்தை மீறாத ஒழுக்கம்.'

logo
Kalki Online
kalkionline.com