

திருச்சி ஜங்ஷன்...
‘பல்லவன்’ விரைவு ரயில்வண்டி, புறப்பட இன்னும் பத்துநிமிடம் பாக்கி இருந்தது.
ஸ்டேஷன் டி.வி.யில் அறிவிப்பாளர் முகம் அலைகளுக்கு இடையே கொஞ்சம் அழகாய்த் தெரிந்தது.
‘பச்’ -- ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த 19 வயது புஷ்பாவிற்குப் போரடித்தது.
“சே, என்னப்பா, இன்னும் வண்டி கிளம்பற நேரம் ஆகலை?”
அப்பா அன்பழகன், சிரிப்பொன்றை இலேசாய் பரவ விட்டவராய்,
“அது... வரவேண்டியவங்க எல்லாம் வர்றாம? எப்படி?” என்றார்.
55 வயதிலும் அட்டகாசமாய் 'டை’ அடித்துக் கண்ணுக்குக் குளிர் கண்ணாடி போட்டிருந்தார்.
அந்த பொதுப் பெட்டியில் இடம் கிடைக்காத சலிப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிலர் டாய்லட் கதவுக்கருகில்.
அன்பழகன் தனது பக்கத்து சீட்டில் துண்டொன்றை போட்டுவிட்டு முகம் தெரியாத நண்பருக்கு ரிசர்வ் செய்து வைத்திருந்தார்.
“ஆமா, பக்கத்தில யாரு வர்றாங்கப்பா?”
“அ.. அது, யாராவது தெரிஞ்சவங்க வந்தா உட்கார சௌகரியமாக இருக்குமேன்னு தான்...”
இழுத்தவாறே சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.
புஷ்பாவிற்கு அப்பாவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
'இந்த அப்பாவிற்கு இதே பழக்கமாய் போச்சு. ஒவ்வொரு தடவை வண்டில போகும்போதெல்லாம் இடம் போட்டு வைக்கிறது, கடைசி நேரத்துல பொம்பளைங்க யாராவது வந்தா உடனே பல்லிளிச்சு என்னவோ.. பெருந்தன்மையுடன் இடம் கொடுக்கிற மாதிரி கொடுத்து அப்படியே கொஞ்சம்.. வெட்டிப்பேச்சு பேசி... கூடவே, ஒட்டி உரசிக்கொண்டு...'
தலையில் அடித்துக்கொண்ட புஷ்பாவின் பார்வையில்,
ஒரு நடுத்தர வயதுப் பெண் லட்கேஜூகளுடன் ஏறி திணறியவாறு இவர்கள் இருக்கையை நோக்கி வருவது தெரிந்தது.
“சா... சார், இங்கே சீட்டு யாருக்கு?”
“வ... வந்து, என் ஃப்ரெண்டு வருவான்னு போட்டேன். சரி, சரி நீங்க உக்காருங்க. வண்டி கிளம்பும் நேரமாச்சு. இனிமே, எங்க அவன்...?”
வழிந்து அவளுடைய லக்கேஜைத் தானே வாங்கி ஒழுங்குபடுத்தினார்.
புஷ்பாவிற்கு ஒரே கோபம் கோபமாய் வந்தது.
'அவ்வளவுதான். இனிமே, சென்னை போறவரைக்கும் ஒரே பேச்சு... சிரிப்பு, கும்மாளம் தான். இடையிடையே தண்ட காபி செலவுகள் வேற. இந்த அப்பாவுக்கு வயசுக்கு வந்த பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போறோம் என்று ஒரு இங்கிதம் வேணாம்? என் தலையெழுத்து... சின்ன வயசிலே அம்மா தவறிப் போனது.'
உள்ளுக்குள்ளேயே பொருமினாள்.
எத்தனையோ முறை ஜாடை மாடையா சொல்லிப் பார்த்தாயிற்று... பலனே இல்லை.
பல்லவன் ‘ஹார்ன்’ அடித்து பயணத்தைத் தொடங்கி, ஸ்ரீரங்கத்தை தொட்டுவிட்டு இருந்தது.
ஏதோ சொல்லி ”ஹா... ஹா” என அப்பா சிரித்ததற்கு, அதுவும் சிரித்தது.
'என்கிட்டே பேசாம... அப்பாக்கிட்ட என்ன பேச்சு? ஏன் இப்படி வெட்கமில்லாமல பலமா சிரிக்கிறீங்க? ன்னு அவங்களை நேரடியா கேட்டுட்டா?'... ஒரு கணம் யோசித்தவள்,
'நோ. நான், நம்ம அப்பாவைத் தான் சரிப்படுத்தலாம். அவங்களை எப்படி?'
உடன் தீர்மானித்தாள்.
'என்ன நடந்தாலும் சரி, இத இன்னிக்கி தடுத்து நிறுத்தணும். மிஞ்சிப்போனா என்ன? வீட்ல போனவுடனே அடி கிடைக்கும். அவ்வளவுதான்.'
உறுதியுடன் கூப்பிட்டாள்.
“அப்பா, அப்பா. எனக்கு ரொம்ப 'போர்’ அடிக்குது. உங்களுக்கு தான் வழக்கம்போல பேசக் கம்பெனி கிடைச்சுடுச்சே. அடுத்த பெட்டில நிக்கிறதைப் பார்த்தா.. என் பாய் ஃப்ரெண்ட் மாதிரி தெரியுது. போய் பேசிட்டு இருக்கேன். அப்புறம், போன தடவை உங்க கூட இதே மாதிரி சிரிச்சுப் பேசிக்கிட்டு ஒரு ஆண்ட்டி வந்தாங்க இல்ல, அவங்கக் கூட அதுல ஏறின மாதிரி தெரிஞ்சது. இங்கே போரடிச்சா ‘அங்கே’ அவங்க கிட்ட பேச வாங்க. என்ன?”
பொய் சொல்லி ‘விருட்’டென எழுந்த புஷ்பா,
வேகமாய் நாலடி நடந்து திரும்பிப்பார்க்க,
பேயறைந்த மாதிரி அப்பாவும், அவளும் முழிப்பது தெரிந்தது.
‘இனியும் தொடருமா... அப்பா கச்சேரி?’ என மனதுக்குள் சிரிக்க தொடங்கினாள்... புஷ்பா.