
ஹால் நிரம்பி வழிந்தது.
வானதி பேச ஆரம்பித்தாள்.
“பண்பாடு பற்றி ஒரு பண் பாடு என்று சொன்னவுடன் அந்தப் பண் பாட நான் பட்ட பாடு பெரும்பாடு” என்ற அவளது பேச்சின் ஆரம்பத்தை அனைவரும் ரசித்தனர்.
“பண்பாடு சீரழியும் விதத்தால் மனமே
சஞ்சலம் நீ படாதே தினமே
அறிவியலும் ஆன்மீகமும் இணையட்டும்
அறிஞரெல்லாம் அதைப் போற்றிப் புகழட்டும்”
என்று இனிய குரலில் பாட ஆரம்பித்தாள் வானதி.
வரிசையாக பண்பாடு சிறக்க பாஸிடிவான வழிகளை அவள் பாடவே கூட்டம் ஆரவாரித்தது.
இலக்கியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவரான மணிசங்கருக்கு ஒரே சந்தோஷம். இறுதியாக நன்றியுரை சொல்ல வந்தவர் இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்ட ‘ஏஐ க்ரேட்’ நிறுவனத்தின் நிறுவனர் உமாகாந்தனுக்கு நன்றி கூறி தம்பதி சகிதமாக வந்து பரிசு வழங்க மேடைக்கு வருமாறு அவரை அழைத்தார். அத்தோடு நிகழ்ச்சியில் பேச பலரையும் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கியச் செல்வர் மகாதேவனுக்கும் நன்றி கூறி அவரையும் மேடைக்கு அழைத்தார்.
பாஸிடிவ் சிந்தனையை வழங்கிய வானதிக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்ட போது அனைவரும் ஆரவாரித்தனர்.
உமாகாந்தனின் மனைவி வானதியைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.
“நீ ஒரு நாள் என் வீட்டுக்கு வாயேன்” என்ற அவரது அன்பு அழைப்பைக் கேட்டு வானதி திகைத்துப் போனாள்.
பில்லியரான அந்தப் பணக்காரக் குடும்பம் எங்கே, தான் எங்கே – அவள் மலைத்தாள்.
“இவள் என் பெண் தான்” என்றார் இலக்கியச் செல்வர் மகாதேவன்.
“அடடா. அப்ப நீங்களும் வாருங்களேன்” என்றார் உமா காந்தன்!
பெரிய தோட்டத்தின் நடுவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான பங்களாவைப் பார்த்து திகைத்தனர் வானதியின் பெற்றோரும், வானதியும்.
அன்போடு அவரை வரவேற்ற உமாகாந்தனும் அவர் மனைவியும் தங்கள் மகனான சங்கரை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
“உங்கள் பேச்சு பிரமாதம்! பாஸிடிவ் சஜெஷன் இஸ் க்ரேட்” என்றான் சங்கர்.
வானதி வெட்கத்தால் சிவந்தாள்.
சற்று நேர உரையாடலில் இரு குடும்பங்களும் நெருக்கமாகி விட்டன.
“சாப்பிடலாமா” என்று விருந்துக்கு அழைக்கப்பட்ட போது பெரிய டைனிங் டேபிளையும் அதில் பரப்பப்பட்டிருந்த வெள்ளி பேஸின்களையும் தட்டுக்களையும் விதவிதமான உணவு வகைகளையும் பார்த்து மலைத்தது வானதியின் குடும்பம்.
எப்படி வெள்ளி ஸ்பூன்களையும் போர்க்குகளையும் கையாள்வது என்று யோசித்தாள் வானதி.
“ஒரு முக்கிய விஷயம்! என் பையனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சம்மதித்தால் வானதியை கல்யாணுக்குத் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம்," என்றார் உமாகாந்தன்.
இதைக் கேட்ட மகாதேவன் திகைத்தார். ’இப்படி ஒரு பெரிய இடத்துச் சம்பந்தமா?'
“ஓகே! முதலில் பையனும் பெண்ணும் பேசட்டும். அவர்கள் ஓகே என்றால் மீதியை நாம் பேசுவோம்” என்ற உமாகாந்தன், “கல்யாண்! நீ வேண்டுமானால் ஒரு சின்ன டிரைவுக்கு வானதியுடன் போய் வாயேன்” என்றார்.
“வேண்டாம், வேண்டாம். மாடியே இருக்கிறது; அது போதும்” என்றான் கல்யாண்.
மேல்மாடிக்குச் சென்ற கல்யாண் வானதியைப் பார்த்து, “ஐ லைக் யூ. யுவர் பாசிடிவ் அப்ரோச் இஸ் ரியலி குட். இந்த மேரேஜ் ப்ரபோஸலுக்கு சம்மதமா?” என்றான்.
“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர். உங்கள் குடும்பமோ பில்லியனர் குடும்பம்... எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்,” என்றாள் வானதி.
“ஓகே! நாளைக்கு ஆகாஷ் ரெஸ்டாரண்டில் சாயங்காலம் மீட் பண்ணுவோம். நீங்கள் முடிவைச் சொல்லலாம்," என்றான் கல்யாண்.
பெற்றோர்கள் மறுநாள் மாலை வரை காத்திருக்கச் சம்மதித்தனர்.
ஆகாஷ் ரெஸ்டாரண்ட் நகரின் பிரம்மாண்டமான ரெஸ்டாரண்ட். பல ஏசி ஹால்கள் உண்டு.
சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்தாள் வானதி. கல்யாண் காத்திருந்தான்.
“என்ன ஆர்டர் பண்ணலாம்?” கேட்டான் கல்யாண்.
"பாஸந்தி, தோசை, காபி. லைட் டிபன் போதும்" என்றாள் வானதி.
“என்ன முடிவு?” கல்யாண் ஆவலுடன் கேட்டான்.
வானதி மெதுவாகப் பேசினாள்: ”என்ன சொல்வது என்று தெரியவில்லை. பணக்காரக் குடும்பத்திற்கு நான் ஒத்துவருவேனா என்ற குழப்பம் இருக்கிறது.”
இதை அவள் சொல்லும் போதே எதிரிலிருந்த ஹாலிலிருந்து லவுட் ஸ்பீக்கரில் பெரிய குரல் ஒன்று ஒலித்தது.
“என்ன அங்கே நடக்கிறது?" என்று வெயிட்டரிடம் கேட்டான் கல்யாண்.
“பல கம்ப்யூட்டர் கம்பெனிகளில் உள்ள டெக்னிகல் ஸ்டாபுக்கு மீட்டிங் சார்” என்றார் வெயிட்டர்.
எதிர் ஹாலிலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.
“ஆகவே நீங்கள் மாற்றி யோசிக்க வேண்டும். எதிரெதிர் சிந்தனைகளை ஒதுக்காதீர்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. பாஸிடிவாக மாற்றி யோசிப்பவரை உங்களுடன் இணைத்துக் கொண்டால் வாழ்வே செழிக்கும்.”
இதைக் கேட்ட வானதியின் முகம் மலர்ந்தது. கல்யாண், ”ஆஹா! அருமையான யோசனை ஆல்டர்னேடிவ் திங்கிங்...” என்று பேச்சைப் பாராட்டினான்.
“நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு சம்மதம். மாற்றி யோசித்தேன். கணப்பொழுதில் இப்படி முடிவெடுத்து விட்டேன். எப்போதும் ஏன் ஒருதலைப்பட்சமாக பயந்து கொண்டு சிந்தனை செய்ய வேண்டும். நடுத்தரக் குடும்பம் பணக்காரக் குடும்பத்தை இன்னும் செழிப்பாக ஆக்கக் கூடாதா என்ன?” என்றாள் வானதி.
“சூப்பர்! நானும் ஆல்டர்நேடிவ் திங்கிங் செய்து முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு நல்ல மாதிரியாக யோசனை கூறி எனக்கு ஆதரவு தந்து கம்பெனியையும் முன்னேற்ற ஒரு நல்ல பாஸிடிவ் திங்கர் லைஃப் பார்ட்னராகத் தேவை. எனக்கும் சம்மதம். இதோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்தியைச் சொல்லி விடுகிறேன்.” என்றான் கல்யாண்.
வானதி போனை எடுத்து, “நான் வீட்டிற்கு சற்று நேரத்தில் வந்து விடுவேன்” என்று சொன்ன போது, “அதற்கு அவசியமே இல்லை” என்று அடுத்த ஹாலிலிருந்து சொல்லிக் கொண்டே முன்னால் வந்தது வானதியின் குடும்பம். அதைத் தொடர்ந்து பின்னால் கல்யாண் குடும்பமும் வந்தது.
"அட, நீங்கள் வீட்டில் அல்லவா இருப்பீர்கள் என்று நினைத்தேன்" என்ற கல்யாணுக்கு பதிலாக அவனது பெற்றோர் ஹாஹா என்று சிரித்து “நாங்கள் இங்கே தான் காத்திருந்தோம்” என்றனர்.
“ஆல்டர்நேடிவ் திங்கிங்” என்று ஒரே சமயத்தில் அனைவரும் ஒரு மனதாகச் சொல்ல, ஹாலே சிரிப்பில் மிதந்தது!