சிறுகதை: அப்பாவின் ஈரம் - அத்தியாயம் - 2

Appavin Eram
Father and Son
Published on
இதையும் படியுங்கள்:
சிறுகதை: அப்பாவின் ஈரம் - அத்தியாயம் - 1
Appavin Eram

"என்னப்பா தியாகுவையா தேடறிங்க? அவன் இப்ப வந்தானே. பைய உள்ளவைக்க போனத நா பாத்தேனே" சொல்லிக்கொண்டே அவனறைக்கு உள்ளே சென்று பார்த்தார் பெரியண்ணா.

"இல்லண்ணா அவன்... அவன்" அக்கா.

"ஏண்டி தயங்குற... சொல்லு அவன் வேறென்னெல்லாம் பண்ணி வச்சிருக்கான்னு சொல்லு" அப்பாவின் கர்ஜனை தெரு வரை கேட்டது.

"அவன் பெரியண்ணா சட்டைலேர்ந்து பணம் எடுத்துண்டு போயிருக்கான்..."

"அது மட்டும்தான் பாக்கி இப்ப அதுவுமா? பேஷ் பேஷ். பெரியவனே கேட்டியா உந்தம்பி பண்ண காரியத்த" அப்பா. கோபத்தில் அப்பா தன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்ப தயாரானார்.

ஆனால் பெரியண்ணா தடுத்து, "அப்பா நீங்க இருங்க. நான் போய் அவன அழைச்சிண்டு வரேன்." பெரியண்ணா பாவம் அப்போதுதான் வேலையிலிருந்து களைப்பா வீடு வந்தார். அண்ணி "கொஞ்சம் காப்பி சாப்ட்டுட்டு போங்க" என்று விரைந்து, அடுக்களை சென்று காப்பி எடுத்து வந்து அண்ணாவிடம் தந்தார்.

"கோபப்படாதீங்கோ. அவன் எங்கேயும் போயிருக்கமாட்டான். அடிக்காம, தன்மையா பேசி அழைச்சிட்டு வாங்கோ. பயப்படப்போறான். பசியாயிருப்பான் பாவம்" - அண்ணி. அண்ணிக்கு தியாகு ஒரு குழந்தை. அவர்கள் கல்யாணத்தின்போது தியாகுவிற்கு வயது 4. தாயின் தவிப்பு அண்ணியின் கண்களில், பெரியண்ணா முதலில் அவன் நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்றார். பின் முனுசிபல் ஆபிஸ் ரேடியோ அடிக்கு சென்றார். அங்கேயும் அவனில்லை. இசக்கி வீட்டுக்கும் சென்றார். இசக்கியின் அம்மா வந்தாள் வெளியே. "இசக்கியும் வீட்டிற்கு வரவில்லை என்றாள்". சொல்லிக்கொண்டிருக்கும்போதே இசக்கி வந்தான்.

"எங்கடா தியாகு" பெரியண்ணா.

"அவன் அப்பவே போயிட்டானே. அவங்கப்பா அடிச்சாராண்ணா?" இசக்கி.

"இல்லடா... அவன் வீட்லயே இல்ல."

"அவனுக்கு இருட்டுன்னா பயமாச்சே..."

"சரி... அவன் வந்தான்னா யாரும் அவன அடிக்கமாட்டாங்களாம். எல்லாத்தையும் நான் பாத்துப்பேன்னு சொல்லி அனுப்பறியா?" பெரியண்ணா.

"சரிண்ணா" இசக்கி.

பெரியண்ணாவிற்கு சட்டென்று சாவித்திரி (சின்னக்கா) சொன்னது நினைவுக்கு வந்தது. சட்டையிலேர்ந்து எடுத்த பணம். சைக்கிளை வேகமாக ரெயில்வே ஸ்டேஷனை நோக்கி மிதித்தார். பெரியண்ணா நேரே டிக்கெட் கவுன்டருக்குச் சென்றார். "இப்போ யாராவது சின்ன பையன் டிக்கெட் வங்கினானா" வென்று கேட்டார். கவுன்டரிலிருந்தவர் "ஆமாம். ஒரு பையன் கடலூருக்கு டிக்கெட் வாங்கினான். ஆனா, ஒம்பது மணிக்குத்தான் அடுத்த வண்டி" கேட்காத கேள்விக்கும் பதில் சொன்னார்.

பெரிண்ணா உடனே இறங்கி பிளாட்பார்ம் சென்றார். காலியாக இருந்தது. சோகையாக கரைக்கொன்றாய் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குழல் விளக்குகள் இருட்டுடன் போராடிக்கொண்டிருந்தன. ஒரு பக்கம் நின்று பார்த்தால் ஒரு ரெயில் நிலையம் அங்கிருப்பதாகவே காட்டிக்கொள்ளாதவாறு இருள் அந்த நிலையத்தை மறைத்து வைத்திருந்தது. அங்கிருந்த புன்னை மரநிழலில் ஒரு சிறு உருவம் தெரிந்தது. வேறு பக்கமாக அதனருகில் சென்றபோது. தியாகு இருட்டில் அமர்ந்திருப்பது தெரிந்தது. கொத்தாக அவன் சட்டையைப் பற்றி இழுத்து வெளிச்சத்திற்கு வந்து ஒரு அறை விட்டார் பெரியண்ணா. இதுவரை அவர் அவனை அடித்ததில்லை. அந்த அடி தண்டனையல்ல. ஒரு தவிப்பின் முற்றுப்புள்ளி.

"ஏண்டா இப்படி பண்ற?"

"என்ன விட்டுடுங்க... என்ன விடுங்க..."

"நீ என்ன தப்பு பண்ணடா சொல்லு?"

"அப்பா இசக்கியோட நான் பேசறத பாத்துட்டார். வீட்டுக்கு வந்தா என்ன கொன்னே போட்டுடுவார். என்ன விட்டுருங்க, நான் போறேன்."

இதையும் படியுங்கள்:
சிறுகதை - மதில் சுவரில் ஓர் இடைவெளி!
Appavin Eram

"உனக்கு நான், அண்ணி, சாவித்திரிக்கா, அப்பா யாருமே வேண்டாமா? எங்கதான் போறே. யாருமில்லாத இடத்துக்கா? இல்லே மைதிலியக்கா வீட்டுக்கா? சொல்றா. அண்ணி எவ்வளவு தவிச்சுப் போயிட்டாங்க தெரியுமா?" பெரியண்ணா அப்படி பேசி தியாகு பார்த்ததில்லை.

"நீ வீட்டுக்கு வா. அப்பா அடிக்காம நான் பாத்துக்குறேன். நீ நெறைய படிக்க வேண்டாமா? நீ குழந்தைமில்லை புரியுதா... நான் சொல்றது?"

அழுதுகொண்டே பெரியண்ணா சைக்கிளில் ஏறி அமர்ந்துகொண்டான் தியாகு. வெளிச்சம் வந்த இடத்தில் அழுகையை மறைத்தான். இசக்கி வீட்டை தாண்டி ஊருக்குள் சென்றபொழுது வெட்கம் பிடிங்கித்தின்றது. வீடு நெருங்கியதும் இதயம் துடித்து வாய் வழியே வந்துவிடும் போல இருந்தது. உள்ளே நுழைந்ததும் சாவித்திரி ஓடிவந்து கட்டிக்கொண்டாள். அண்ணி பாத்ரூம் இழுத்துச் சென்று (அப்பா அவனை பிடிங்கிக் கொள்வதை தடுக்க) குளிக்கச் செய்தாள். ஆனால், அப்பாவைக் காணவில்லை. அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு சுற்றி பெரியண்ணா, அண்ணி சாவித்திரி அமர்ந்துகொண்டார்கள். யாரும் பேசவில்லை. கைகழுவும்போது கடலூர் டிக்கெட்டையும் மீதி சில்லறையையும் பெரியண்ணாவிடம் கொடுத்தான். அப்போது அப்பா கோயிலுக்கு போய் திரும்பி வந்திருந்தார் (அவர் நெற்றியும் வெறும் அங்கவஸ்திர மார்பும் சொல்லியது) அவர் கண்கள் சிவந்திருந்தன. அவனருகே வந்து "நீ பெரிய மனுஷனாயிட்டே" என்று சொல்லி தலையில் கைவைத்து விட்டு சென்றார்.

அந்தத் தொடலில் உணர்ந்த சூடு இன்றும் நினைக்கையில் கதகதப்பாய் சிலிர்க்கும். அந்தத் தொடலின் அர்த்தம் புரிந்துகொள்ள நான் தந்தையாக வேண்டியிருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை- வேதனையின் வடுக்கள்!
Appavin Eram

அன்றிரவு அடிக்காத அப்பா எனக்குப் புதிராக இருந்தார். பின் வந்த நாட்களில் அவர் என்னைத் திட்டுவதையும் அடிப்பதையும் தவிர்த்தார். யாரும் கேள்வி கேட்க பயந்த அப்பாவை நான் கேள்விகளால் வருடி, குத்தி, காயப்படுத்தி, திணறடித்தது யாவும் அவர் ஈமக்கிரியை முடிந்த அந்தத் தூக்கமில்லா இரவில் என் தலையணையை நனைத்தது. நனைந்த அந்தத் தலையணையின் ஈரம் என் தந்தையின் ஈரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com