

கணேஷ் வருத்தத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். அவருக்கு வந்த செய்திகள் நன்றாகவே இல்லை. ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு மூன்று மாத ஓய்வில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஓய்வாகப் படுக்கையில் படுத்திருந்தவருக்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தந்த செய்திகள் நன்றாகவே இல்லை.
ஓய்வாக இருக்கும்போது கம்பெனியை யார் கவனிப்பது?
கலிபோர்னியாவில் மேலாண்மை நிர்வாகத்தில் டிகிரி வாங்கிய தனது பெண் அகிலாவை தைரியமாக எம்.டி. ஆக்கி அவளையே நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லி அவர் பெருமிதமும் பட்டார். அமெரிக்காவில் நிர்வாக மேலாண்மைப் படிப்பு என்றால் சும்மாவா?
ஆனால் அகிலாவிற்கு ஷார்ட் டெம்பர் அதிகம். எதிர்பார்ப்பும் அதிகம். அமெரிக்கா போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் இங்கு நடக்குமா?
தினசரி இரண்டு சஸ்பென்ஷன் ஆர்டரைக் கொடுத்தாள் அகிலா. டிஸிப்ளின்! டிஸிப்ளின்! அனைவரும் நடுங்கினர்.
பட்டனைச் சரியாகப் போடவில்லை என்று செக்யூரிடிக்கு மெமோ.
மானேஜர் ஐந்து நிமிடம் லேட்டாக வந்தார் என்பதற்காக அப்படியே வீட்டிற்குப் போய்விட்டு மறு நாள் வந்தால் போதும் என்ற ஆர்டர்.