- கெளரி சாம்பமூர்த்தி
அன்றைய பரபரப்புக்குக் காரணம் இருந்தது. அப்பா தனது சொத்துக்கள் யார் யாருக்கு என்ன என்கிற விவரங்களைத் தனது மூன்று பிள்ளைகளுக்கும் சொல்லப் போகிறார்.
"நீலு (நீலகண்டன்), தாசா (தசரதன்), ஜனா (ஜனார்த்தனன்) எல்லோரும்
10 மணிக்கு குடும்பத்துடன் வந்துவிடுங்கள்."
மூத்த பிள்ளைகள் இருவரும் அப்பாவின் அசையும், அசையா சொத்துக்கள் எப்படி பிரிக்கப்படப் போகின்றன என்பது பற்றி தங்களுக்குள் விவாதம், மனைவிகளின் கணிப்புகள் என்று ஜுரம் வரும்படியான எதிர்பார்ப்பில் இருந்தனர். இளையவன் ஜனா தனக்கும் இந்த ஓட்டப்பந்தயத்துக்குச் சம்பந்தம் இல்லை என்பதுபோல சற்று ஒதுங்கியே இருந்தான். இது மற்ற இருவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
"மொத்தத்தையும் ஆட்டையைப் போடப் பார்க்கிறான் இவன். அப்பாவின் சொத்து சுய சம்பாத்தியம்" என்று மனைவியரின் தூபம் வேறு.
முப்பது வருடங்களுக்கு முன், சற்றே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம்தான் அது. அப்பா நன்கு படித்தவராயினும் சுமாரான வேலையில்தான் இருந்தார். "உங்களுக்கு அப்பாவை பிடிக்குமா அல்லது அம்மாவைப் பிடிக்குமா?" என்று கேட்டால், ஒரே குரலில், "அப்பா!" என்று தயக்கமின்றி சொல்லும் குழந்தைகள். அம்மாவின் கண்டிப்புக்கு நேர் எதிர் அப்பா. தின்பண்டங்கள், கிரிக்கெட் பேட் என்று தன்னால் முடிந்தவரை வாங்கி கொடுத்து, அவர்களின் நடவடிக்கைகளில் பங்கேற்று உற்சாகப்படுத்தி, புத்தகங்கள் படித்து கதை சொல்லுவது, "அதோ பார்! அதுதான் சப்த ரிஷி மண்டலம்!" என்று வானத்தில் கோடு போட்டு காட்டுவது என்று சுவாரஸ்யமான குழந்தை பருவத்தைக் கொடுத்தவர்.
1974இல் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வென்ற மாச்சை சென்னை சேப்பாக்கத்தில் நேரில் சென்று பார்த்து, சக மாணவர்களின் தீராத பொறாமையைப் பெற்ற தனிப் பெருமை மூவருக்கும் உண்டு.
ஆனால், அம்மாவோ, படிப்பு படிப்பு என்று உயிரை வாங்கி விடுவாள். ஹோம் வொர்க் முடிக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் இரவு சாப்பாடு கிடையாது.
பெரியவன் நீலகண்டனுக்கு பத்து வயது ஆனபோதுதான் அப்பாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்தது. அலுவலகத்தில் துபாய் வாடிக்கையாளர் ஒருவர் அப்பாவின் செயல்திறன், நேர்மை, உழைப்பும் ஆகியவற்றால்
கவரப்பட்டு தனக்கு உதவியாகத் தன்னுடன் துபாய் வருமாறு வற்புறுத்தினார். அதற்கு பின் சிதம்பரத்தின் வாழ்க்கை பெரும் வளர்ச்சி கண்டது.
வயதான பெற்றோர் காரணமாகவும், குழந்தைகளின் படிப்பு கெடாமல் இருக்கவும் வேண்டிக் குடும்பத்தினரை சிதம்பரம் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. அப்பா உடன் இல்லாத காரணத்தால் அம்மாவின் மனோதிடம் தளர்ந்துவிட, கண்டிப்பு குறைந்தது. புதிதாக வந்த பண வரவும் வசதிகளும் நீலு, தாசா இருவரையும் பணம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதைவிட, பணம் மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியம் என்று எண்ண வைத்தது. நன்கு படித்து சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பெரிய வேலை, பின் அதை துறந்துவிட்டு, இருவருமாக ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிப்பது என்று அசுர வேகத்தில் முன்னேறினர். இருவரின் மனைவியரும் கணினி நிபுணர்கள் என்பதால் ஸ்டார்ட்-அப்பில் பங்காளிகள் ஆயினர்.
சிறியவன் ஜனாவும் மருத்துவம் பயின்று சிறந்த எழலும்பியல் நிபுணராக பெயர் பெற்றான். அவன் மனைவி குழந்தை நல மருத்துவர்.
25 வருடங்கள் சம்பாதித்து பின் சென்னை திரும்பினார் சிதம்பரம். நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த அவர் மனைவி பவானி நோய்வாய்ப் பட்டாள். மூத்த பையன்கள் அதிகம் எட்டிப்பார்க்காத நிலையில், ஜனா அடிக்கடி வந்து போவது, அம்மாவை தன்னுடன் அழைத்துச் செல்வது என்று பொறுப்பாக இருந்தான். அம்மாவின் தலை சாய்ந்ததும் நீலு, தாசா அவர்களின் மனைவியர் எல்லோரும் வெளிப்படையாகவே அம்மாவின் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகளுக்குப் போட்டியிட்டு ரசாபாசப் படுத்தினர். ஜனா அப்பாவின் வருத்தத்தைக் காண சகியாமல், அம்மாவின் காரியங்கள் முடிந்தவுடன் அவரை தன்னுடன் வருமாறு அழைத்தான். சற்று தயங்கி அப்பா, "கொஞ்ச நாள் ஆகட்டும்பா" என்றார்.
இரண்டு மாதங்கள் ஓடின. அப்பாவின் அழைப்பு வந்தது.
ஆர்வத்தின் உச்சத்தில் இருந்த நீலு, தாசா, மனைவி மக்களுடன் வந்தனர்.
காரை விட்டு இறங்கியதும் தாசா, "நீலு! அப்பாவின் வீடுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், ஷேர்ஸ் எனக்கு வேணும், ஆமாம்!" என்றான்.
"அது சரி! அப்பாவின் சொத்து எல்லாம் நமக்குத்தானே சொந்தம்" என்று உரிமைக்குரல் கொடுத்தான் நீலு.
"நாமே பிரிச்சுக்கறோமே, ஜனாவுக்கு?" இது நீலுவின் மனைவி சாந்தா.
"அவன்தானே செல்லப் பிள்ளை! கூடவே இருந்து குழை அடிக்கிறவன். அவனை விட்டு விடுவாரா என்ன?" இது தாசாவின் மனைவி மாலினி.
உள்ளே வந்து நீலுவின் இரண்டு பிள்ளைகள், தாசாவின் இரண்டு பெண்கள் நால்வரும் வரவேற்பு அறையில் அரட்டைக்கு உட்கார, பெரியவர் நால்வரும் உள்ளே புத்தகங்கள் அடுக்கிய அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவிடம், " என்னப்பா! நீங்கள் சொன்ன டயத்துக்கு வந்துட்டோமா? வக்கீலைப் பார்த்து விட்டீங்களா? முடிவு பண்ணிட்டீங்களா?" என்று கேள்வி கணை தொடுத்தனர்.
"இரு, இரு! என்ன அவசரம்? ஜனா வந்து விடட்டும்" என்றார் அப்பா.
"அவன் வரட்டும் அப்பா. நீங்கள் முதலில் என்கிட்ட சொல்லுங்க. நான்தானே மூத்தவன்."
வாசலில் ஜனா குடும்ப சகிதமாக காரில் இருந்து இறங்க, அவன் பிள்ளை மற்ற பசங்களுடன் ஜாலியாக பேச உட்கார்ந்தான்.
"என்னப்பா, எப்படி இருக்கீங்க? செக் அப் டியூ ஆச்சே இப்போ?"
அவன் மனைவி சோபனாவும் ஸைட் டேபிள் இல் இருந்த மருந்து மாத்திரைகள், டாக்டர் சீட்டு ஆகியவற்றை கவனமாகப் பார்வையிட்டு,
"நான் கடைசியாக பார்த்ததற்கு இப்ப BP கொஞ்சம் அதிகமாக இருக்கே?" என்றாள்.
'உக்கும்', சாந்தா, மாலினி இருவரும் நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டனர்.
வக்கீல் வரதராஜன் உள்ளே வந்து உயிலைப் படித்தார். மூவருக்கும் சம பங்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவர் இருக்கும் வீடு, மற்றும் தனது கடைசி காலத்துக்குத் தேவையான பேங்க் பேலன்ஸ் தவிர மற்ற
எல்லாவற்றையும் மூவருக்குமாகப் பிரித்திருந்தார்.
மன உளைச்சலில் இருந்து விடுபட்ட நீலு, தாசா இருவரும் "அப்பாடா!" என்றனர். அவர்களுக்கு எங்கே எல்லாவற்றையும் ஜனாவிற்கே எழுதி விடுவாரோ என்ற பயம்.
இருக்கும் வீடு மற்றும் பேங்க் பேலன்ஸ் யாருக்கு என்ற அடுத்த சர்ச்சை கிளம்பியது. வக்கீல், "நீலு, தாசா! அப்பாவை கடைசி வரை யார் வைத்துக்கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவை போய்ச் சேரும்" என்றார்.
"அதற்கென்ன பார்த்துக்கலாம்" என்று மெல்லிய குரலில் முனகினான் நீலு.
"அதானே எத்தனையோ ஐந்து நட்சத்திர ரிட்டையர்மெண்ட் விடுதிகள் உள்ளன. ஒருவருக்கு மாதம் ஒரு லட்சம் வரை ஆகும்" என்றான் தாசா அந்த நிறுவனங்களின் பெயர்களை அடுக்கியபடி.
"நான் 20 வருடங்களுக்கு மேலாக குடும்பம் இல்லாமல் தனித்து வாழ்ந்தவன். கடைசி காலத்தில் உங்க அம்மாவும் இல்லாமல் தனியே இருக்க வேண்டாம்னு பார்க்கிறேன். அது ஒரு வாழ்க்கையா? நீங்கள் இத்தனை பேர் இருக்கும்போது... ஐ வான்ட் டு லிவ் மை லைஃப், நாட் எக்ஸிஸ்ட்!"
அங்கு அப்போது நிலவிய மெளனம் பல விஷயங்களை பளிச் என்று படம் போட்டுக் காட்டியது.
ஜனா சட்டென்று, "அப்பா! நீங்கள் என்னுடன் நம் வீட்டிற்குக் கிளம்புங்கள்" என்றான்.
ஹாலில் பேரன், பேத்திகள் மெல்லிய குரலில் முணுமுணுக்கும் அரவம் கேட்டது.
"ஓஹோ! சாருக்கு மூன்றில் ஒரு பங்கு பத்தலையாக்கும்?" என்றான் தாசா கிண்டலாக.
"அப்பா என்னுடன் வருவதாக இருந்தால் மட்டுமே என் பங்கை நான் எடுத்துக்கொள்வேன். இல்லாவிட்டால் எனக்கு எதுவும் வேண்டாம்பா!" என்றான் ஜனா தீர்மானத்துடன்
"அப்போ உனக்கு வேண்டாம்னா நாங்க எடுத்துக்கலாம் என்கிறாயா?", என்றான் நீலு. எல்லோரும் நிமிர்ந்தனர்.
"வெல், வொய் நாட்? கடவுள் புண்ணியத்திலும், அப்பா அம்மா ஆசிகளாலும் நல்ல வாழ்க்கை வாழ்கிறேன். பெற்றவரை வைத்து பார்த்துக்கொள்ள யோசிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. என் ஷேரை நீங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அல்லது ஏதோ ஆசிரமத்திற்கோ கோயிலுக்கோ எழுதிக் கொடுக்கிறேன். இப்பவே வேண்டுமானாலும் எழுதிடறேன்" என்றான் திட்டவட்டமாக.
அப்பொழுது அங்கு நிலவிய அர்த்தமுள்ள மௌனத்தைக் கிழித்தது ஹாலில் ஒலித்த சண்டைக் குரல்கள்.
நீலுவின் பெரிய பிள்ளை சதீஷ், "அப்போ அப்பா வாங்கிய புதிய கார் உனக்கு என்கிறாயா நீ? ஏன் நான் ஓட்டக்கூடாதா அதை?" என்றான்.
"ஏன், உனக்கும்தான் ஒரு கார் வாங்கி கொடுத்திருக்காரே?" என்றான் சிறியவன் கிரீஷ்.
"அது ஃபாரின் கார் இல்லியே! மேலும் அதை உனக்குனு கொடுக்கலியே? அப்பா வாங்கி இருக்கார், அவ்வளவுதான்" இது சதீஷ்.
அப்பாவுடையது என்றால் என்னுடையதும்தானே?" இது கிரீஷ்.
வெல் செட் கிரீஷ்! அதிலென்ன சந்தேகம்! அப்பாவுடையது எல்லாம் நமக்குத்தானே சொந்தம்!" என்றனர் தாசாவின் பெண்கள் திட்டவட்டமாக.
ஒரு கோரமான நிசப்தம் நிலவியது.
தங்கள் வார்த்தை தங்களுக்கே இவ்வளவு சீக்கிரம் திரும்பும் என்று நீலுவும் தாசாவும் எதிர்பார்க்கவில்லை.
இம்முறை அப்பாவின் மெல்லிய சிரிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
"இப்போ எல்லாம் சின்னவங்க பாடம் கற்றுக் குடுக்குறாங்கப்பா! ஈஸியாக இருக்கும்போதே கத்துகிட்டா நல்லது. இல்லாவிட்டால் யு வில் லேர்ன் இட் தி ஹார்ட் வே!"