தீபாவளி சிறப்பு சிறுகதை - தீபா'வலி'...!

குலதெய்வ வழிபாட்டுக்குப் புறப்பட்ட குடும்பத்தில் நடந்த எதிர்பாராத சுவாரஸ்யம் பற்றிய தீபாவளி சிறப்பு சிறுகதை
தீபாவளி சிறப்பு சிறுகதை |  Family trip
தீபாவளி சிறப்பு சிறுகதை | Family tripImage credit: Gemini AI
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

தீபாவளிக்கு வயலூருக்குப் போயிருந்தோம். எனது புகுந்த ஊர். மாமியார், மாமனார், கொழுந்தனார், ஓர்ப்படியார் என்று எல்லோரும் அங்கேதான் இருக்கிறார்கள்.

எனது கணவருக்கு பேங்க்கில் வேலை. இப்போது கும்பகோணத்தில் இருக்கிறோம். நான் எனது வீட்டுக்காரர், குழந்தைகள் தீபா மஞ்சு. அளவான குடும்பம்... வளமான வாழ்வு.

மாமனாருக்கு ஐந்து ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கிறது. காவிரி பாசனத்தில் முப்போகமும் அமோகம். மாமனாருக்கு மாட்டுத் தீவன வியாபாரமும் உர வியாபாரமும் படு ஜோர். கொழுந்தனார் பி.ஏ. படித்திருந்தாலும், அப்பாவின் விவசாயத்துக்கு உதவியாக கிராமத்திலேயே இருக்கிறார்.

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே ஊருக்குப் போய்விட்டோம். போன உடனேயே ஒரு நிபந்தனை போட்டார் மாமியார். தீபாவளிக்கு முதல் நாள் குலதெய்வம் கோயிலுக்கு போய்விட்டு வந்துபிறகு தீபாவளி கொண்டாடலாம் என்பதே அது.

ஆறேழு மாதங்களுக்கு முன்னாள் கொழுந்தனார் ஒரு சிறு பைக் ஆக்ஸிடெண்டில் அடிபட்டு... கட்டுப்போட்டு படுத்திருந்து... இப்போது நன்றாகிவிட்டார். அந்தச் சமயம் அவர் குணமாகிவரவேண்டும் என்பதற்காக குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு உருவாரமும் செய்து வைத்துவிடுவதாக வேண்டிக்கொண்டார்களாம். அதனால் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் அந்தச் சமயத்தில், வேண்டுதலை நிவர்த்தி செய்துவிட வேண்டுமென்பது அவரது எண்ணம்....

வயலூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் உள்ளே போகவேண்டும். அங்கே போய் பொங்கல் வைத்து மாவிளக்கு போடவேண்டுமாம். மண்பாண்டம் செய்யும் குயவனிடம் சொல்லி ஒரு கால் செய்யச் சொல்லி வாங்கிவந்து வைத்திருந்தார்கள். அதையும் சாமிக்கு சாத்த வேண்டுமாம்.

வயலூருக்குப் போகிறோம் என்றதுமே தீபாவும் மஞ்சுவும் முந்திக்கொண்டு சொல்லிவிட்டார்கள், அந்த நான்கு நாட்களும் காலையில் வாய்க்காலில்தான் போய் குளிப்போம் என்று.

அது சாதாரண வாய்க்கால் கிடையாது. பெட்டவாய்த்தலைக்கு அருகில் காவிரியில் இருந்து பிரிந்து ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு வயலூர் வழியாக ஓடி, மறுபடியும் ஊரையெல்லாம் சுற்றிக்கொண்டு போய் திருச்சி துவாக்குடியில் ஒரு ஏரியில் கலப்பதாக என் கணவர் எப்போதோ சொல்லியிருக்கிறார். காவிரியில் தண்ணீர் இருக்கும்போது வாய்க்காலிலும் இருக்கும்.

சோப்பு, சாம்பு துணிமணிகள் சகிதமாக பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் மூவரும்.

மாமியார் சொல்லியிருந்தார், இளைய மருமகள்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று. ஆம்... அது நானேதான். கோவிலில் ஒரு அடி பைப்பு உண்டு. எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். தண்ணீர் ருசியாக இருக்கும். துருப்பிடித்த வாசனை எதுவும் வராது. அதில் குளித்துவிட்டு ஈரப்புடவையுடன்தான் பொங்கலே வைக்கவேண்டுமாம். அதனால் நான் வாய்க்காலுக்குப் போகவில்லை.

எதிர்பட்ட மாமியார். ‘ஏன்... தேவி... நீ வாய்க்காலுக்குப் போகலை...‘ என்றார்கள்.

''அத்தே... நீங்கதான் கோவில்ல அடிபைப்புல குளிச்சுட்டு ஈரப் புடவையோட பொங்கல் வைக்கனும்னு சொன்னீங்க...'' என்றேன்.

''அதுசரி... அதுக்குன்னு வீட்டிலேர்ந்து சாமி சாமான்லாம் எடுத்துக்கிட்டு கோயிலுக்குப் போகும்போது குளிக்காமலா போறது... சரியில்லை... நீ போய் முதல்ல குளி...'' என்றார்கள். வேறு வழியின்றி சுடுதண்ணீர் போட்டு குளித்தது வேறு கதை.

தீபாவளி சிறப்பு சிறுகதை | Worship of the Family Deity
தீபாவளி சிறப்பு சிறுகதை | Worship of the Family Deity Image credit: Gemini AI

மணி ஒன்பது ஆகிவிட்டது, வாய்க்காலுக்குப் போனவர்கள் குளித்துவிட்டு வர. அதற்குள் இங்கே எல்லோரும் ஒருத்தர் ஒருத்தராக குளித்துவிட்டார்கள்.

இட்லி சாப்பிட்டு முடித்து டிரெஸ் மாற்றிக்கொண்டு கிளம்புவதற்கு ரொம்ப நேரம் ஆனது. மாமியார்தான் ஒவ்வொருவரையும் முடுக்கிக்கொண்டே இருந்தார்கள்.

பொங்கலுக்குத் தேவையான அரிசி வெல்லம் இத்யாதிகள் என்று ஒரு அட்டைப்பெட்டி பார்ஸல். தேங்காய், பழம், இலை, இத்யாதிகள்... என்று வேறொரு கட்டைப் பை. குழந்தைகள் சாப்பிடக் கேட்பார்களே என்று பிஸ்கட், மிக்ஸர், இத்யாதிகள்... என்று இன்னொரு கட்டைப் பை. அத்துடன் மற்றும் பெரியவர்கள் கேட்பார்கள் என்று பெரிய பிளாஸ்க்கில் டீ, கொஞ்சம் பழங்கள் என்று வேறொரு அட்டைப் பெட்டி.

விரித்துப் போட்டு உட்கார ஜமக்காளம், முகம் கைகால் அலம்பினால் துடைக்க நான்கைந்து துண்டுகள் என்று ஒரு கட்டைப் பை... எல்லாம் ஒவ்வொன்றாய் தயாராகின.

ஒவ்வொரு பார்ஸலும் ரெடியாக ரெடியாக அவற்றை ஹாலில் ஒரு ஓரமாய் கண்ணில் படும்படி வைக்கச் சொன்னார் மாமியார். எதுவும் மிஸ் ஆகிவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பார். ஏதாவது விட்டுப் போனால் திரும்பவும் பத்துப் பதினொரு கிலோமீட்டர் திரும்பி வந்தல்லவா எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்பதே அதற்கு காரணம்.

மறுபடியும் எதிர்பட்ட மாமியார், ''தேவி... டிரெஸ் எடுத்து வச்சாச்சா..?'' என்றார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமல் போன சங்கிலி...!
தீபாவளி சிறப்பு சிறுகதை |  Family trip

எனக்கு திகைப்பு. ''அத்தே... எல்லாரும் குளிச்சு புது டிரெஸ் போட்டுக்கிட்டோம்... அப்புறம் எதுக்கு டிரெஸ் எடுத்து வைக்கணும்...?'' என்றேன்.

அப்புறம்தான் புரிந்தது, அவர்கள் சாமிக்கு புடவையும் வேஷ்டியும் வைத்து படைப்பார்கள் என்று. அதை தேடி எடுத்துக்கொண்டாகிவிட்டது.

அத்துடன் அங்கே போய் அடிப்பைப்பில் குளித்துவிட்டு பொங்கல் வைத்துவிட்டு வீடு திரும்பும்வரை அதே ஈரப் புடவையோடா வரமுடியும்....

அதையும்தான் சொல்கிறார்கள் என்று புரியவர ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பெட்டியை மறுபடியும் கலைத்துப்போட்டு ஒரு செட் டிரெஸ் எடுத்து வைத்து களைப்பாகி போனது. மேலும் ஒரு கட்டைப் பை தயாரானது.

''தம்பி... கார்ல காத்தெல்லாம் கரெக்டா இருக்கான்னு பார்த்துக்கிட்டீங்களா...?'' என்றார் மாமனார்.

இரண்டு கார்கள் வெளியே நின்றிருந்தன. நாங்கள் கொண்டு வந்திருந்த கார் ஒன்று. மாமனாரின் கார் ஒன்று. எழுந்ததுமே போர்வெல்லில் குழாய் செருகி இரண்டு கார்களையும் குழந்தைகளின் உதவியோடு ஷாம்பூ போட்டு குளிப்பாடியிருந்தார் என் 'அவர்'. அப்போதே பார்த்திருப்பார் டயரெல்லாம் சரியாக இருக்கிறதா என்று. ஆனாலும் மாமனார் சொன்னதும் அண்ணனும் தம்பியும் வெளியே ஓடினார்கள் மறுபடியும் செக் பண்ணிக்கொள்ளலாம் என்று..

குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் ரெடியாகிவிட, பெரியவர்கள் பார்ஸல்களை எடுத்துக்கொள்ள, குழந்தைகள் அவரவர்களுக்கான சிறு சிறு பைகளை எடுத்துக்கொண்டனர். அதில் அவர்கள் விளையாடுவதற்கு கிரிக்கெட் மட்டை, கேரம் போர்டு என்றும் உண்டு.

எப்போதும் எல்லோரும் சேர்ந்தாற்போல வெளியே போனால் எங்களது காரில் கொழுந்தனாரின் குழந்தைகள் உட்கார்ந்துகொள்வார்கள். அடுத்த காரில் எங்களாடு குழந்தைகள் உட்கார்ந்து கொள்வார்கள். மாமனார் எங்களோடும் மாமியார் அடுத்த காரிலும்...

கார்கள் கிளம்பின. இரண்டு பக்கமும் வயல் வெளிகள். காற்றுக்கு அசைந்தாடி அசைந்தாடி பயிர்கள் எங்களை வரவேற்பதுபோல இருந்தன. தென்னை மரங்கள், நெல், கரும்பு என்று விதம் விதமாக இருந்தன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சாணை பிடிக்கலையோ சாணை...!
தீபாவளி சிறப்பு சிறுகதை |  Family trip

பதினைந்து நிமிடங்களில் ஒரு பெரிய முட்புதர்கள் நிறைந்த அடர்ந்த காடு வந்தது. ஏற்கனவே கோயில் பூசாரியிடம் சொல்லி வைத்திருந்ததால் கார்கள் போகும் ஒத்தையடிப் பாதையை சுத்தம் செய்திருந்தார்கள்.

திறந்த வெளியில் சிலைகள் நின்றிருந்தன. அருகருகே வேல்கள். அவற்றில் காய்ந்து போன மாலைகள். சுற்றிலும் எப்போதோ யார் யாரோ பூஜை செய்துவிட்டுப் போனதற்கான அடையாளங்கள்.

கார்களை நிறுத்த குழந்தைகள் முதலில் இறங்கினார்கள். குழந்தைகளிடம் ஒரே ஆரவாரம்.

திடீரென்று அதிர்ச்சி. தீபாவைக் காணவில்லை. ''ஐயோ... என் செல்லத்தைக் காணோமே...'' என்று அலறிவிட்டேன்.

''அத்தை... உங்ககூடத்தானே வர்றேன்னா...'' கத்தியே விட்டேன்.

அவர்களோ, ''ஐயோ... எங்க கார்ல ஏறலை... அதனால் உங்களோட வர்றாள்னல்லவா நினைச்சிக்கிட்டிருந்தோம்...'' என்று பதற, கொழுந்தனார், ஓர்ப்படியார் கூட அதையே சொன்னார்கள்.

என் கணவன் மேல் திருப்பினேன் என் கோபத்தை. ''ஏங்க... உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா... குழந்தைங்க ஏறிட்டாங்களான்னு பார்க்கறதில்லையா...?''

அவரோ, ''சரி, நான்தான் கவனிக்கலை... உனக்கும் அந்தப் பொறுப்பு இருக்கவேணாமா... என்னவோ எனக்குமட்டுமே அக்கறை இருக்கணும்ன்ற மாதிரி...''

அழுகை தாங்க முடியவில்லை. மாமியார் உடனே, ''தம்பி காரை திருப்பு. பாப்பாவை வீட்டுக்குள்ளேயே விட்டு பூட்டிட்டு வந்துட்டோமோ...'' என்று சொல்லி பீதியை மேலும் கிளப்பினார்கள்.

பிரபு சொன்னான், ''அவள் பல்லாங்குழி ஆடனும்னு கட்டையை தூக்கிட்டு வெளியே வந்ததைப் பார்த்தேனே...''

''அப்போ... கட்டையோட வெளியேயே விட்டுட்டு வந்துட்டோமோ...?''

அதற்குள் என் கணவர் காரில் ஏறி உட்கார்ந்தார்.

மாமனார் குறுக்கே போனார். ''தம்பி... தைரியமா போ... ஒன்னும் ஆகியிருக்காது...''

மாமியார் பின்னாலேயே ஓடினார். ''தம்பி... குழந்தை வீட்டுலேதான் இருக்கும்... ஒரு எட்டு போயிட்டு வா... அதுக்கு முன்னே டிக்கில இருக்கறதை எல்லாம் இறக்கிடு... அதுவரை சும்மாவேவா நிக்கமுடியும்... பொங்கல் வேலைகளைப் பார்த்துக்கிட்டிருப்போமில்லையா...''

''எனக்கு ஒரு ஐடியா... ‘ஏங்க பக்கத்து வீட்டுல ஜமுனா அக்கா இருப்பாங்க... ஒரு எட்டு வீட்டுல எட்டிப் பார்க்கச் சொல்லுங்க...'' என்றேன். ஒர்ப்படியார் உடனே மொபைலில் அவர்களது நம்பரைத் தேடினார்.

அடுத்த கார் டிக்கியைத் திறந்த கொழுந்தனார், ''கிடைச்சிட்டா தீபாக்குட்டி...'' என்று சத்தம் போட்டார். எல்லோரும் அந்தக் காரை நோக்கி ஓட...

தீபாவளி சிறப்பு சிறுகதை | Family trip
தீபாவளி சிறப்பு சிறுகதை | Family tripImage credit: Gemini AI

தூக்கக் கலக்கத்தில் இருந்த தீபா திக்கித்திக்கி சொன்னாள், ''பல்லாங்குழிக் கட்டையை தூக்கி உள்ளே வச்சேனா... அது அட்டைப் பெட்டிக்கு அடில போயி விழுந்துச்சா... கண்ணுல படறமாதிரி வைக்கனும்னு குனிஞ்சேனா... அப்படியே உள்ளே விழுந்துட்டேன்... டிக்கி டக்குனு மூடிக்கிச்சு...'' என்று அவள் அழுகையினூடே சொல்லச் சொல்ல அப்படியே அள்ளித் தூக்கி உச்சி முகர்ந்து... அழுது... ஆர்ப்படித்து... அந்த வலியை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை.

அப்புறம் குளித்து பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு... எல்லாம் அனிச்சையாய் நடந்து முடிந்து வீடு திரும்பியது தனிக்கதை.