

tamil short story: Dosa
சும்மா சொல்லக்கூடாது! சுந்தரி எப்பவுமே ரொம்பச் சிக்கனமாக் குடும்பம் நடத்துறதுல கெட்டிக்காரி; கஞ்சப்பிசினாறியல்ல! ஆனாலும், ரொம்ப அன்பானவ.
அன்னைக்கு முகிலன் வேலைக்கு அவசர அவதியாய்க் கிளம்பிக்கொண்டிருந்தான்.
“ஏங்க, சாப்பிட்டுப்போங்க! காலைல வயித்தைப் பட்டினி போடாதீங்க!” என்றாள்.
கேட்க இதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் வேலைக்கு ஓடியாக வேண்டும். ஒரு பத்து நிமிஷம் லேட்டாப் போனாக்கூட அரைநாள் லீவைக் கட் பண்ணீடுவான் சூப்பர்வைசர் சுதீஷ்!
“இல்ல சுந்தரி, நேரமாச்சு! இனி நீ எப்ப டிபன் பண்ணி, நான் எப்பக் கிளம்பறது? வேண்டாம், விடு! மத்தியானம் வீட்டுக்கு வந்துடறேன்!” என்றான்.
“இருங்க! ஒரு அஞ்சே நிமிஷம், இதோ கல்லைப் போட்டுடறேன்!” என்றாள்.
முகிலனுக்குப் பகீர் என்றது! “சுந்தரி, சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லிட்டு, இப்ப இப்படிக் கல்லைப் போட்டுடறேங்கறியே? முழிச்சிட்டு இருக்கும்போதே கல்லைப் போடறேங்கறியே... தூங்கிட்டு இருக்கையில நீ என்ன பண்ண மாட்டே?” கிண்டலடித்தான் முகிலன்.
“அய்யே! ரொம்பத்தான்! ஒங்க மனசுக்குள்ள என்ன வடிவேலுன்னு நெனைப்பா? கல்லைப் போட்டுடறேன்னு சொன்னது தலைல இல்ல, அடுப்பில தோசைக்கல்லைப் போட்டுடறேன்னு சொன்னேன். இப்பத்தான் ‘நான்-ஸ்டிக்’ ஆச்சே? கல் லேசாக் காய்ஞ்சாப் போதும், ரோஸ்டு மாதிரி தோசை ரெடி! இருங்க!” என்று அவனை அழுத்தி உட்கார வைத்து, அவன் கையை கழுவிவிட்டு உட்காரும் முன் தோசை வார்த்துத் தட்டில் வைத்தாள்.
“சட்னி...?” என்றான் முகிலன்.
“இத பாருங்க, வெறும் வயித்துல சாப்பிடாமப் போகக் கூடாதேன்னு ஒரு தோசை சாப்பிட்டுட்டுப் போகட்டும்னு சொன்னா, இப்பச் சட்னி, சாம்பார்லாம் கேட்டா எப்படி?”
“அப்போ சும்மா திங்கச் சொல்றியா? சாப்பிட உக்காந்ததுக்குத் தண்டனையா? வெறும் வயிறை நீக்க வெறும் தோசை தின்னணுமா?” என்றான் முகிலன்.
“குடும்பத்துச் சிக்கனம் ரெண்டு பேர் கையிலயும் இருக்கு! வெளில சாப்பிட்டா செலவாகும்னுதான் வீட்டுல ரெண்டு தோசை சாப்பிடச் சொன்னேன். சட்னி கிட்டினி எல்லாம் எதிர்பார்க்காமச் சிக்கனமா சாப்பிடுங்க!”
“தொட்டுக்க என்னது?”
“டம்பளர்ல தண்ணி வச்சிருக்கேன் பாருங்க! தண்ணில முக்கிச் சாப்பிட்டா, சிக்கனமாவும் இருக்கும்... உடம்புக்கும் நல்லது!” என்றாள்.
மாட்டிகிட்டோம்னு நினைச்சுத் தண்ணில தோசையை முக்கி எடுக்க, அந்தத் தோசை அந்தக் கால ‘ஹரிகேன்’ விளக்கு பட்டைத் திரி மாதிரி தட்டிலிருந்து நீண்டு எழுந்தது.
தோசை ‘நான்-ஸ்டிக்’ கல்லுலயும் ஒட்டலை; சாப்பிட்ட முகிலன் வாயிலயும் ஒட்டலை! அவன் வாழ்க்கையில ஒட்டாம வாழ ‘நான்-ஸ்டிக்’ தான் காரணமோ? ஆனாலும் தோசை நல்லா இருக்க...
“டேஸ்டா இருக்கே?!” என்றான் முகிலன். சும்மா இருந்திருக்கலாம், சுந்தரி கேட்டாள், “அப்படீன்னா, ஒரு அரைக்கரண்டில இன்னொரு தோசை சுட்டுப் போடவா?”
“வேண்டாம் சுந்தரி! நீ முழுக்கரண்டில சுட்டதே வாலு மாதிரி இருக்கு! நீ அரைக்கரண்டில சுட்டா எல்லாம் ஒழுகி, அது வட்டமா வராம மட்டமா வந்தா என்ன பண்றது?” என்று அவன் கலாய்க்க...
சுந்தரி, “அய்யோ பாவம், வெறும் வயித்தோடு அனுப்ப வேண்டாமேன்னு பார்த்தா கிண்டலா பண்றீங்க?” என்று கரண்டியை ஓங்கிட்டு வர, லேட்டானா அரைநாள் சம்பளம் போயிடுமே என்று அந்த அரைக்கரண்டி தோசையை மறுத்து ‘அபீட்’ ஆனான் முகிலன்.