

ஓட்டு எண்ணும் நாள் காலை. அம்மணி, குழந்தைகள் டிவி போட்டுவிட்டு பார்த்தபடியே தான் பல் விளக்கி, காபி சாப்பிட்டு, குளித்து, டிரஸ் செய்து, டிபன் சாப்பிட்டு, படித்து, சமைத்து...
டிவி ஓடியபடி இருந்தது.
அதைப் பார்த்தபடியே தான் அனைவரும் எல்லா வேலைகளும் செய்தார்கள்..
சரி ஃபைனல் முடிவு வந்தாச்சு.
அப்புறம் மக்கள் பவனுக்கு போனார்..வந்தார்.
திரும்பவும் போனார் வந்தார்.
மறுநாளும் போனார்.
யூடர்ன் அடித்தார் போகவில்லை.
மறுபடி மக்கள் பவன் போனார். லிஸ்ட் தந்தார்.
10-ம்தேதி பதவி ஏற்றார்.
ப்ளூ கிரீம் கலர் சேலை கட்டிய ஹீரோயின் வந்தார்.
ராகுல் வந்தார்.
11-ம்தேதி சட்டசபை வந்தார்.
எல்லா தலைவர் வீட்டுக்கும் போனார்...அது 12-ம்தேதி...
13-ம்தேதி சட்டசபை பெரும்பான்மை வாக்கெடுப்பு..
ஒரு பெரிய கட்சி புட்டுக்கிட்டது.
செய்தி சானல்கள் 4 முக்கியமானவை.. அப்பப்போ மாற்றி மாற்றி வீட்டில் பார்த்தார்கள். பொடிசுகள் முதல் கிழம் கட்டைகள் வரை..
சினிமா சேனல், பாட்டு சேனல் எதுவும் பார்க்கப்படவே இல்லை..
காலை 6 மணிக்கு ஆன் செய்து டிவி பாட்டுக்கு ஓடுகிறது..
பார்த்த படியே வீட்டில் வேலைகளும் நடக்கிறது.
வேலைக்கார அம்மாவும் கூட்டி துடைக்கிறார்.. டிவி செய்திகள் ஓரக்கண்ணால் பார்த்தபடி,
குழந்தைகளும் அம்மணியும் போனில் இதே விஷயத்தையே பார்த்தார்கள். ஒரு கண் டிவி... மறு கண் போன்.
குடும்பத் தலைவர் வழக்கம் போல் ஆபீஸ் போறார் வர்றார்..கடைக்குப் போறார்.
இரவில் அம்மணி சொல்வார் "இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா?", என ஒப்புவிப்பார் பார்த்த விஷயங்களை.
இந்த அப்பாவி அதையும் கேட்டுக்கிட்டார்.
அவர் மைண்ட் வாய்ஸ்...."சார்...சின்ன ரிக்வெஸ்ட்...கட்சி ஆரம்பிச்சீங்க ரைட்... தேர்தலில் நின்னீங்க ஓகே... ஏதோ ஜெயிச்சீங்க.. ஓகே.. பீஸ்ட் டிரெஸ்ஸில் வர்றீங்க... கொஞ்ச நாள் செய்தி சேனல்களில் தலை காட்டாதீங்க ப்ளீஸ்...
முடியலே..வீட்டுக்கு வீடு அரசியல் அலசல், கருத்துக் கணிப்பு, விவாத மேடையா ஆயிட்டு எங்க டைனிங் ஹால்...
மாற்றம்.. புதிய அலை அடிக்க வச்சதில் சந்தோஷம்.. கொஞ்சம் வீட்டு நிலைமைகளைப் பார்த்து செயல்பட்டா நாங்க கொஞ்சம் ஃப்ரீயா இருப்போம்.."
அம்மணி குரல்... "இன்னும் மூன்று பேர் வீட்டுக்குப் போகலே.. இன்னிக்குப் போகலாம்... பார்க்கணும் அதை."