

மார்கழியின் குளிரில் இழுத்து போர்த்திக்கொண்டு, தலைக்குப் குல்லா போட்டுக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனமில்லாமல் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பித் திரும்பி மெத்தையில் உருண்ட வண்ணமாக இருந்தான் ரியோ.
ஏன் எழுந்திருக்க வேண்டும்? அப்படி எழுந்து என்ன பண்ணப்போறோம்? இந்த எண்ணம் வருவதற்குக் காரணம், வேலை மேல் இருந்த பற்று கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனத்திலிருந்து காணாமல் போனதுதான்.
கடிகாரம் நினைவூட்டியது மணி எட்டு என்று. போர்த்திய போர்வையைச் சற்று விலக்கி, கடிகாரம் இருந்த திசையை நோக்கி மணியைப் பார்த்தான். எட்டு ஐந்து ஆகியிருந்தது. மெதுவாகத் தலையிலிருந்த குல்லாவையும் போர்த்தி இருந்த போர்வையும் ஒழுங்காக வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு, சொம்பில் உள்ள தண்ணீயைக் குடித்துவிட்டுத் தனது பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினான்.
ஜன்னலுக்கு வெளியில் செம்பருத்திப்பூக்கள் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த இரண்டு வண்ணங்களுடன் வெகு அழகாகக் காட்சி அளித்தன. மார்கழியின் பனித்துளிகள் செம்பருத்தியின் இதழ்களில் அங்கங்கே காணப்பட்டன.