சிறுகதை: போட்டி!

பேச்சுப் போட்டியில் தோல்வியால் துவண்ட சுஷ்மிதாவை, தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றும் சிறுகதை
Life lessons story | Parents with Child
Life lessons story | Parents with ChildImage credit: AI
Updated on
Kalki Strip
Kalki Strip

“தேவையில்லாம உங்க செல்ல மகளை சீண்டாதீங்க. ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து அவ மூட்ஆஃப்ல இருக்கா. சொல்றது புரியுதா..?”

ஆஃபிஸ் விட்டு வந்தவனிடம் காபி கொடுத்தவாறே என்னை எச்சரித்தாள் மனைவி தேவிகா.

“என்ன நடந்தது..?” என்றேன் கவலையோடு.

“ஸ்கூல்ல ஏதோ போட்டி வெச்சிருக்காங்க. அதுல தோத்துட்டா. அந்தக் சோகம்..”

மகள் சுஷ்மிதா தனியார் பள்ளியில் ஆறாவது படிக்கிறாள். படிப்பு தாண்டியும் திறமைசாலி. பள்ளியில் நடக்கும் எந்த ஒரு போட்டியையும் தவறவிடமாட்டாள். உற்சாகமாக கலந்துகொள்வாள். சில நேரங்களில் வெற்றியும் பெறுவாள்.

மாறாக போட்டியில் தோற்றுவிட்டாலோ, தனக்கு பரிசுகள் கிடைக்க வில்லை என்றாலோ துவண்டுவிடுவாள். தோல்வியை, ஏமாற்றத்தை தாங்கமுடியாத, ஜென்சீ மாடல் குழந்தைகளுக்கே உண்டான மனக்கோளாறு அவளிடமும் இருந்தது.

நான் ரூமில் எட்டிப் பார்த்தேன். எங்கோ வெறித்தபடி படுக்கை மேல் அமர்ந்திருந்தாள் சுஷ்மிதா.

“என்னடா குட்டி ஆச்சு. ஏன் இத்தனை சைலன்ட்?” என மெல்லப் பேச்சு கொடுத்தேன்.

என்னைப் பார்த்தாள். தலைகுனிந்தாள். ”ஸ்கூல்ல ஒரு பேச்சுப் போட்டிப்பா. ஆர்வமா கலந்துக்கிட்டேன். ஆறுதல்பரிசு கூட எனக்குக் கிடைக்கலை..” குரலில் வருத்தம்.

“சரி விடு, இதெல்லாம் ஒரு பெரிய விசயமா..? அடுத்ததடவை ஈசியா ஜெயிச்சுடலாம்.”

“எத்தனை இஷ்டமா தயாரிச்சு வெச்சிருந்தேன் தெரியுமா. என் கடின உழைப்பு வீணாப் போயிடுச்சு.”

“உழைப்பு என்னைக்கும் வீணாப் போகாதுடா குட்டி.! அந்த முயற்சி, பயிற்சியா மாறிடும். திறமையானவங்ககிட்ட ஜெயிச்சியா.. கவலைப்படாதே, திறமையை வளர்த்துக்கோ. சுமாராவனவங்ககிட்ட தோத்தியா.. தூக்கிப் போட்டுட்டு வேற வேலையைப் பாரு. இதைவிட பெரிய பரிசு கிடைக்கலாம்..”

எனக்குத் தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை சொல்ல சொல்ல மெல்ல சமாதானம் ஆனாள். “ஓகே” எனப் பெருமூச்சு விட்டபடி உற்சாகமாக எழுந்தாள்.

நான் கேட்டேன் “என்ன போட்டி அது. என்ன தலைப்பு..?”

“பேச்சுப் போட்டி! தலைப்பு, தோல்வியே வெற்றிக்கு முதல் படி!”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சுமையான சுகம்!
Life lessons story | Parents with Child
logo
Kalki Online
kalkionline.com