

"என்னங்க… உங்களைத்தான்" என்றாள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் என் மனைவி தன் புடவையைச் சரிசெய்துகொண்டே..
"சொல்லுமா..! பசங்களுக்குப் பள்ளிக்கு நேரமாகுது. அவர்கள் கிளம்பத் தயார் பண்ணிக்கொண்டு இருக்கேன். நீ சொல்லு, கேட்டுனுதான் இருக்கேன்."
"இன்னிக்கு சாயங்காலம் அநேகமாக ஆபீஸ்ல இந்த வருடப் பொதுக்குழு கூட்டம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆபீஸ்க்கு போனப் பிறகுதான் சரியாத் தெரியும். அப்படி இருந்தா நான் வீட்டுக்கு வர ராத்திரி 10.00 மணி ஆகிடும். அதனால், நீங்க பசங்கள சாப்பிட வச்சி, தூங்க வச்சிடுங்க. நான் ஆபீஸ் கார்ல வந்திடுவேன். எனக்காக நீங்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டாம். அப்படி மீட்டிங் இல்லன்னா நான் உங்களுக்குப் போன் பண்றேன், வழக்கம்போல பேருந்து நிறுத்தத்திற்கு வந்திடுங்க... என்ன சரியா?"
"சரிம்மா.”
என் மனைவி பெயர் ரேகா. அவள் வேலைச் செய்யும் கம்பெனி நிர்வாக இயக்குநரின் தனிச் செயலாளர். அவர் என் மனைவி ரேகாவைத், தன் சொந்த மகள்போல் நினைத்து, நிர்வாகம் சம்மந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் இவளிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்.