

“எவ வீட்டு பீயெல்லாம் என் வீட்டு முத்தத்துல வந்து கெடக்குது. இவளுகளுக்கு வேற வேலையே இல்ல. புதுசா அதிசயமா கண்டுருக்காலுக இத ஒன்ன. இவளுக வலியாம இருக்க என் வீட்டு முத்தம் நாறுது” என்று காலையிலேயே கத்தத் துவங்கினாள் பத்திரகாளி.
'காலையிலயே ஆரம்பிச்சிட்டாளா? இவளுக்கு வேற வேலையே இல்ல' என்று சலித்துக் கொண்டார் கணவன் நடராஜன்.
"என்ன அங்க முணங்குறீங்க. உங்களுக்கு என்ன? நானுள்ள வழிச்சி கழுவி விடணும்" என்று கணவனிடம் சீறினாள்.
'சரிதா இதுக்கு மேல இங்க இருந்தா வேலைக்கு ஆகாது' என்று எண்ணியபடி நடராஜன் தனது டிவிஎஸ் 50 ஐ எடுத்துக் கொண்டு காட்டுக்கு கிளம்பினார்.
அது ஒரு கரிசல் கிராமம். பட்டணமும் இல்லாத பட்டிக்காடும் இல்லாத ஒரு நடுத்தர கிராமம்.
டயப்பர் என்பது அந்த நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணுக்கு அனாவசியம். இந்த பிரச்னை இன்றல்ல தொடங்கி ஆறு மாத காலம் கடந்து விட்டது.
லட்சுமியின் மகள் தனது அம்மா வீட்டுக்கு பிரசவத்திற்கு வந்த நாள் முதல் இப்பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. லட்சுமியின் மகள் கனகா சென்னையில் திருமணம் முடித்து கொடுக்கப்பட்டவள்.
தனது மகளுக்கு எல்லா தாய்மார்கள் போல டயப்பரை உடல் அங்கமாக்கி பழக்கியிருந்தாள். எப்போதும் உபயோகப்படுத்திய டயப்பரை தனது வீட்டு அருகில் உள்ள காலியிடத்தில் சேகரித்து வைப்பாள். தாய் லட்சுமி வாரம் ஒருமுறை அதனை கொளுத்தி விடுவாள். ஆனால் இடையில் எப்படியோ டயப்பர் ஒவ்வொன்றாக பத்திரகாளி வீட்டு முன்பு சென்று விழுந்து கிடந்தது. இதுதான் பிரச்னைக்கு காரணம்.
வேண்டுமென்றேதான் தன் வீட்டு வாசலில் போடுகிறார்கள் என்று எண்ணி சண்டை கட்டுவாள் பத்திரகாளி.
லட்சுமி போய் "நா போடல மதினி" என்று சமாதானம் சொன்னாலும் கேட்பதில்லை.
இது வாடிக்கையானது. இந்த பேச்சும் தொடர் கதையானது.
பக்கத்து வீட்டு சுசிலாவின் மகனும் மருமகளும் லீவுக்கு வந்திருந்தனர். மருமகள் கவிதா டயப்பரை தூக்கி வெளியில் வீசினாள். அவ்வளவுதான் மாமியார் ஓடியே வந்து விட்டாள்.
"என்ன மா பண்ணுற, அவ்வளவுதான் நமக்குதான் நாளைக்கு பூசை" என்று சொல்லிக் கொண்டே அதை கவரில் பொதிந்து படியின் அடியில் வைத்து விட்டு நகர்ந்தாள்.
மறுநாள் காலை வழக்கம் போல பத்திரகாளியின் வீட்டு வாசலில் குழந்தையின் மலத்துடன் டயப்பர் சிதறி கிடந்தது. லட்சுமியின் வீட்டை நோக்கி விடுவிடுவென நடந்தாள்.
“இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துரணும் என்ன நெனச்சிட்டு இருக்கா அவ” என்று கோபமாக லட்சுமியின் வீட்டை அடைந்தாள்.
"ஏய் லட்சுமி வெளிய வா நீ என்று கத்தினாள்."
"என்ன மதினி" என்று வெளிப்பட்ட லட்சுமியிடம் கத்த துவங்கினாள்.
லட்சுமி இன்று இப்படி எகிறுவாள் என்று நினைக்கவில்லை பத்திரகாளி.
"என்ன மதினி நீங்க விட்டா பேசிட்டே போறீங்க? என் மக ஊருக்கு போய் ஒரு வாரம் ஆச்சு. இதுவும் என் பேத்தியோடதுன்னு நெனச்சு கத்துறீங்க. ஊர்ல வேற எவளாது போட்ருப்பா போய் பாருங்க" என்று முறைத்துவிட்டு படாரென்று கதவை சாத்தினாள் லட்சுமி.
என்ன செய்வதென்று விளங்காதவள் படபடப்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.
எதிர் வாசலில் கவிதா தன் மகனுக்கு டயப்பர் மாற்றுவதை கவனித்தவள் அவளிடம் திட்ட துவங்கினாள்.
"ஏம்மா உன் பிள்ள டயப்பர போட என் வீட்டு வாசல் தான் கெடச்சுதா உன் மாமியாகக்காரி சொன்னாளா" என்று பத்திரகாளி போட்ட சத்தத்தில் சுசீலா வெளியில் வந்து விட்டாள்.
"என்ன அக்கா என்னாச்சு?"
"என்ன ஆகும் பாரு என் வீட்டு வாசல" என்று காட்டினாள்.
"ஐயோ அக்கா நான் சுத்தி தான் வச்சேன் எப்படி இப்படி ஆச்சுனே தெரியல" என்று சமாதானம் கூறினாள்.
ஆனாலும் பத்திரகாளி விடுவதாக இல்லை இன்று பூராவும் திட்டத்தான் போகிறாள் என்பத தெரிந்ததுதான்.
தலையில் அடித்தபடி உள்ளே சென்றாள் சுசிலா.
இது அந்த கிராமம் முழுதும் பரவியிருந்தது.
"யாரோ சூனியம் கீனியம் வச்சிருப்பாங்க போல அதான் நரகல் எங்க கெடந்தாலும் அவ வீட்டு முத்தத்துல வந்து விழுது."
"ஆமா மதினி நான் கூட கேள்வி பட்டேன் பக்கத்து ஊருல கூட இந்த மாறி தீட்டு துணி ஒருத்தி வீட்டு வாசல்ல தெனமும் கெடந்துருக்கு."
"ஆ.. அப்படியாக்கும்"
"ஆமா, அப்புறம் மீனாட்சிப் பட்டிக்கு போய் அந்த செய்வினைய எடுத்தப்பரமாதான் சரி ஆகிருக்கு."
"அப்படின்னா இவளையும் போக சொல்லலாமே."
"நீங்க வேற மதினி அவகிட்ட எவ பேசுவா போகுது போங்க."
இந்த பேச்சுக்கள் தொடர் கதையானது.
பத்திரகாளிக்கும் புரியவில்லை யார் நம்ம வீட்டு முத்தத்துல இப்படி போடுறது கீழத் தெருவுல எவ வீட்டு பிள்ளையாது டயப்பர் போட்டாலும் அது என் வீட்டு முத்தத்துக்கு எப்படி வருது புரியாமல் தூக்கம் தொலைத்தாள்
அன்று இரவு மணி 11 ஐ நெருங்கி கொண்டிருந்தது. அவள் கணவன் காட்டுக்கு மருந்து வாங்க போனவன் கடைசி பேருந்துக்கு தான் வந்தான்.
அவன் உள்ளே வந்ததும் கதவை மூட சென்றவளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அவள் வீட்டில் வளர்க்கும் நாய் சுப்பு எங்கிருந்தோ டயப்பரை கவ்வி கொண்டு வந்து வாசலில் போட்டு இழுத்துக் கொண்டு அந்த பிரதேசத்தையே நாற்றமடிக்க செய்து கொண்டிருந்தது.