சிறுகதை: காதலும்…தக்காளியும்!

கதையின் ஆரம்பத்தில் இருந்த காதலின் இனிமையும், இறுதியில் ஏற்பட்ட நிதர்சனமான வலியையும் இந்த கதை மிகச்சரியாக படம் பிடித்து காட்டுகிறது.
Tamil Short Story | Ramya, Raghu
Tamil Short Story | Ramya, RaghuAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

அது தருமபுரியின் சிறிய கிராமம்! பெரும்பாலான விவசாயிகள் தக்காளியைப் பயிரிட்டுப் பணம் பார்ப்பவர்கள்! ஊர் சிறிதென்றாலும் ஓரத்திலேயே நெடுஞ்சாலை போவதால், அறுவடை செய்வதும், அனைத்து இடங்களுக்கும் அனுப்புவதும் எளிதென்பதால் எப்பொழுதும் விவசாயம் களைகட்டும்! அந்த ஊரில், அந்தத் தக்காளிச் சாகுபடி வருமானத்தில்தான் அவனும், அவளும் படித்தார்கள். கல்லூரி சென்றார்கள். வேலைக்கும் சென்றார்கள்.

பெங்களூருவில் பணி செய்யும் இடத்தில்தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தார்கள். பேசிப் பழகிய பிறகுதான் ரம்யாவுக்கும் தன் பக்கத்து ஊர்தான் என்பதை ரகு தெரிந்து கொண்டான்!

‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!’ என்பதற்கு இணங்க, சொந்த மண்ணும் ஒன்று சேர்ந்தால், சொந்தத்தின் சுவை மேலும் கூடத் தானே செய்யும்! சொந்தத்தின் ‘ஹை என்ட்’ காதல் தானே!

டவுன் பஸ்ஸில், ரயிலில், நீண்ட தூரப் பேருந்தில், வளர ஆரம்பித்தது அவர்கள் காதல்! படிப்பு… படிப்பு என்றே ஓடிய அவன், காதல் வயப்பட்டதும் கவிதையின் பக்கம் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான்! ‘அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!’ என்பதை, ‘ரகுவும் நோக்கினான்! ரம்யாவும் நோக்கினாள்!’ என்று மனதுக்குள் கூவி, மகிழ்ந்தான்!

‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை ரம்யா!’ என்று சின்சியராகக் காதல் கடிதங்கள் எழுத ஆரம்பித்தான்!அப்புறம் காதல் வளர, வளர சொந்தமாகவே கவிதை எழுத ஆரம்பித்து விட்டான்!

தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் மேலெழும்பி கிலோ ரூ.120/-ஐயும் தாண்டிய நேரத்தில் அவன் ஒரு கவிதையை எழுதினான்.

‘என் இரத்தநிறத் தக்காளியே!

தங்கத்திற்கு நிகராக உன்விலை

தரணியில் உயர்ந்து நிற்பதைப்போல்…

ரம்மியமான என் ரம்யா தக்காளியே!

உன் மதிப்பும் என்மனதில்

உயரத்தில்… வெகு… உயரத்தில்தான்!’

கவிதையைக் கொடுத்து, அதைப் படிக்கையில் அவள் முகம் பழுத்த தக்காளியாய்ச் சிவப்பதை ரசிக்க அவனுக்கு ஆசை வந்துவிட்டது. நாளையே அவளைச் சந்தித்து அதனைக் கொடுத்து விட வேண்டுமென்று எண்ணி, அவளிடம் பேசி நாளை வரச் சொல்ல வேண்டுமென்று மொபைலைக் கையில் எடுத்தபோதே, அது ரொமாண்டிக்காய் சிணுங்கிற்று! சிணுங்கச் செய்தவள் ரம்யாதான்!

“வயசு நூறுடா! என்னடா? நான் கூப்பிட நெனச்சி போனை எடுத்தா… நீயே கூப்பிட்டுட்டே! இணைந்த நெஞ்சங்கள் இப்படித்தான் செய்யுமோ!” - அவன்.

“ம்! எப்பவும் ரைமிங்க் தானா? நான் கூப்பிட்ட காரணத்தைச் சொல்லிடறேன்”!

நான் நாளைக்கு அவசரமா ஓர் ‘ஆன் சைட்’ டூர் போறேன். என்னோட தோழி போக வேண்டியது. அவளுக்கு ஓர் எமர்ஜென்சி! அதனால நான் போறேன்! வர்றதுக்கு நாலைஞ்சி மாதம் ஆகலாம்! மீட் பண்ண டைம் இல்ல. வந்தபிறகு மீட் பண்ணலாம்!

“பை டா! ஒடம்பைப் பார்த்துக்கோ!” அவள் அவசரத்தில் இருப்பது, பேச்சில் தெரிந்தது!

கவிதையை நேரில் கொடுத்து அவள் முகம் சிவப்பதைக் காணத் துடித்த அவன் ஆசைக்கு, ஒரேயொரு போன் காலில் அணை போட்டு விட்டாள் ரம்யா! அவளை நேரில் பார்க்காமல் நான்கைந்து மாதங்களா? நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது. மனது, மௌனமாக அழுதது!

பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை ஓட்டினான். வாட்ஸ்அப்பில் அன்பைப் பரிமாறிக் கொள்ள முடிந்ததால் வருத்தம் சற்றே குறைந்தது! ஐந்து மாத ஆரம்பத்தில் வந்து சேர்ந்தாள் ரம்யா!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஜானியும் மோதிரமும்!
Tamil Short Story | Ramya, Raghu

வழக்கமான பூங்காவில், மாலை நேர வெயில் முகத்தில் அடிக்கும் இடத்தில் அவளைச் சந்தித்துக் கவிதையை வாசித்தான்!

படித்து முடித்து, அவள் முகம் பழுத்த இரத்தச் சிவப்பு தக்காளியாய் மாறி, மாலை வெயிலில் டாலடிக்கப் போவதைப் பார்க்க ஆவலாய் இருந்த அவனுக்கு, அவள் முகம் காய்ந்த தக்காளியாய் வெம்பியதைக் கண்டதும், அதிர்ச்சியில் உறைந்தே போனான்!

காதலில்… கனிந்து… சிவப்பாய் மாறும் என்று எதிர்பார்த்த அவள் முகம், கோபத்தில் சிவந்தது!

“என்னடா! கிண்டல் அடிக்கிறீயா என்னை? நைட் பேசின அப்பா தக்காளியை கிலோ எட்டு ரூபாய்க்குக் கேட்கறதாவும், வயல்லயே அழிச்சிடலாமான்னு பார்க்கறதாவும் வருத்தப் பட்டாரு! எனக்கு அவரை எப்படித் தேத்தறதுன்னே தெரியல!

நீ என்னடான்னா… தங்கம், பவுனுன்னு கப்சா விடறே! என் முன்னால நிக்காதே!

நான் போறேன்!” அவள் கோபமாக நடக்க,

ரகு விக்கித்து நிற்கிறான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com