

வள்ளி தனது முன்னாள் காதலன் சுவாமிநாதனை மறுபடி சந்திக்க விரும்பவில்லை. ஆனால், இன்று அது நேர்ந்துவிட்டது.
வள்ளியை இரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக சுவாமிநாதனை அவளது அம்மா அனுப்புவதாக சொன்னபோது போது வேறு யாரையாவது அனுப்பலாம் என்று வள்ளியால் சொல்ல முடியவில்லை.
வள்ளி இராஜஸ்தானில் இருந்த தனது வீட்டிலிருந்து தனது கணவன் இரகுநாதனிடம் சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதற்காக சென்னைக்கு ஜெய்ப்பூரில் இருந்து இரயில் வண்டியில் ஏறினாள். தான் விவாகரத்து கோரப் போகும் விஷயத்தை தனது அம்மாவிடம் அவள் சொன்னபோது அம்மா அதிர்ந்து போனார்.
“என்னடி இப்படி குண்ட தூக்கி போடுற? ரகுநாதன் உன்னோட அப்பாவோட ப்ரெண்டு பாபுவோட பையன்கறதும், அவங்க குடும்பம் நமக்கு கஷ்ட காலத்தில காப்பாத்தினதும் மறந்து போச்சா?” என்றார் அம்மா.
“அம்மா. இந்த மாதிரி அவங்க குடும்பத்துக்கு கடமைப்பட்டிருக்கோம்னு பழய பல்லவிய பாடாத. இப்படி சொல்லி சொல்லி என்ன கல்யாணம் பண்ண வச்சுட்டீங்க. நான் அடிக்கடி உன் கிட்ட ரகுவோட மிலிட்டரி குணத்தை சொல்லிட்டேன்.