சிறுகதை: விழிப்புணர்வே தற்காப்பு!

​நெருப்பு இல்லாத புகையில்லை என்பார்கள்; ஆனால் இன்று புகை இல்லாத நெருப்பாக இந்த நிகோடின் பவுச்சுகள் இளைஞர்களைச் சுட்டெரிக்கின்றன.
Grandpa and 3 boys sitting in the Park
Tamil Short Story - Grandpa and 3 boysAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

வழக்கமாக நடைபயிற்சி முடித்தவுடன், ​அந்தப் பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்திக்கு (76) அன்று ஏனோ மனது பாரமாக இருந்தது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் என்பதால், இப்போதும் அவர் கண்கள் இளைஞர்களை ஒருவித வாஞ்சையுடனும் கவலையுடனும் கவனிக்கும்.

அவருக்கு எதிரே இருந்த புல்வெளியில் மூன்று பள்ளி மாணவர்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பிளஸ் 2 பரீட்சைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"நாளையோட நமக்குப் பரீட்சை முடிஞ்சதும் நாளைக்கு நல்ல பார்ட்டி கொடுக்கபோறான் கிஷோர்" என்றான் சுந்தர்.

​அவர்களில் ஒருவன், தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய வட்டமான டப்பாவை எடுத்தான். அது சிகரெட்டாகவும் இல்லை, பான் பராக் மாதிரியும் இல்லை.

அதிலிருந்து ஒரு சிறிய வெள்ளை நிறப் பையை (Pouch) எடுத்து, லாவகமாகத் தன் மேல் உதட்டிற்கும் ஈறுக்கும் இடையில் மறைத்து வைத்தான். மற்ற இருவரும் அதையே செய்தார்கள்.

சத்தியமூர்த்தி அவர்களைக் கூர்ந்து கவனித்தார் புகை வரவில்லை, நெடி வரவில்லை. அவர்கள் ஏதோ ஒரு சாதாரண 'மிண்ட்' மிட்டாய் சாப்பிடுவது போலவே இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தப் பொருளை சாப்பிட்டதும் நிசப்தமான போதை சத்தியமூர்த்தியை அதிர வைத்தது.

அவர்கள் ஏதோ புது விதமான போதை பொருளை சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று மட்டும் தெரியவந்தது. அதுவும் பொது வெளியில்.

​சத்தியமூர்த்தி மெல்ல அவர்கள் அருகே சென்றார். "என்னப்பா அது? புதுவிதமான மிட்டாயா? எனக்கும் ஒன்னு கொடுங்களேன்," என்று ஒரு மெல்லிய புன்னகையுடன் கேட்டார்.

​அந்த இளைஞன் சட்டெனப் பதறி, "இல்ல தாத்தா... இது பெரியவங்க... அதாவது, இது 'நிகோடின் பவுச்'. சிகரெட் பிடிச்சா கேன்சர் வரும், வாயெல்லாம் நாறும். இதுல அந்தப் பிரச்சினையே இல்லை. இது ஜஸ்ட் ஒரு 'கிக்' அவ்வளவுதான். ஆன்லைன்ல எந்தக் கட்டுப்பாடும் இல்லாம ஈஸியா கிடைக்குது," என்றான் ஏதோ ஒரு நவீனக் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசுவது போல.

​சத்தியமூர்த்தி அந்தப் பையன்களின் கண்களை உற்றுப் பார்த்தார். அதில் இளமைக்கான ஒளியை விட, ஒருவித மந்தமான மயக்கமே மிஞ்சியிருந்தது.

"தம்பிகளா, என் கூட ஒரு நிமிஷம் வாங்களேன்," என்று அவர்களைப் பூங்காவின் ஓரத்தில் இருந்த ஒரு காய்ந்து போன செடியிடம் அழைத்துச் சென்றார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எமதர்மன் தீர்ப்பு!
Grandpa and 3 boys sitting in the Park

​"இந்தச் செடியைப் பாரு தம்பி. இதுக்கு மேல யாரும் தீ வைக்கல, இலையை யாரும் பறிக்கல. ஆனா, இதோட வேர்ல யாரோ கொஞ்சம் கொஞ்சமா ஆசிட் ஊத்திருக்காங்க. மேல பார்த்தா செடி பச்சையாத் தெரியும், ஆனா உள்ளுக்குள்ள செத்துட்டு இருக்கு. இந்த நிகோடின் பவுச்சும் அப்படித்தான். சிகரெட் நுரையீரலைச் சுடும்னா, இந்த வெள்ளைப்பை உன் நரம்பு மண்டலத்தையும், இதயத்தையும் சத்தமில்லாம அறுக்கும்," என்றார் அவர்.

குரலில் ஒரு தலைமை ஆசிரியருக்கே உரிய அதிகாரமும், தாத்தாவிற்கே உரிய கனிவும் கலந்திருந்தது.

​இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சத்தியமூர்த்தித் தொடர்ந்தார், "உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிகரெட்டை விட இதுல நிகோடின் அடர்த்தி அதிகம். இது 'புகையிலை இல்லை' (Tobacco-free) என உங்களை நம்ப வைத்து, உங்களை நிரந்தர அடிமையாக்குறாங்க. இதை விக்கிற இணையதளங்களுக்கு உங்க ஆரோக்கியம் முக்கியம் இல்ல, அவங்க லாபம் தான் முக்கியம். மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இதைக் கட்டுப்படுத்த போராடிட்டு இருக்கு. அதுக்குள்ள உங்க எதிர்காலத்தை நீங்களே பலி கொடுக்கலாமா?"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மறுவாழ்வு தந்த மழலை!
Grandpa and 3 boys sitting in the Park

​அந்த இளைஞர்களில் ஒருவன் சட்டெனத் தன் வாயில் இருந்த அந்தப் பையைத் துப்பினான். "தாத்தா, இது சும்மா ஸ்டைலுக்காக ஆரம்பிச்சது தான். ஆனா இப்போ இது இல்லாம என்னால ஒரு மணி நேரம் கூட இருக்க முடியல. கை நடுக்கம் வருது, ஒரு மாதிரி படபடப்பா இருக்கு," என்று தன் பலவீனத்தை முதல்முறையாக ஒத்துக் கொண்டான்.

​சத்தியமூர்த்தி அவன் தோளைத் தட்டினார். "தம்பி, 76 வயசுலயும் நான் நேரா நிக்குறேன்னா அதுக்குக் காரணம் எந்த ரசாயனமும் இல்லாத என் சுத்தமான மூச்சுதான். இயற்கையான காத்தை விடப் பெரிய போதை உலகத்துல எதுவுமே இல்லை. இந்த வெள்ளை மாயையில விழுந்து, உங்களை நீங்களே அழிச்சுக்காதீங்க."

​அந்த அந்திப்பொழுதில், அந்த மூன்று இளைஞர்களும் அந்த நச்சு டப்பாவை குப்பைத் தொட்டியில் எறிந்தபோது, அவரின் முகம் ஒரு ஆத்மார்த்தமான திருப்தியில் மலர்ந்தது.

தன்னுடைய அனுபவ அறிவு, நவீன காலத்து நஞ்சை வீழ்த்திய தருணமாக உணர்ந்தார்.

​நெருப்பு இல்லாத புகையில்லை என்பார்கள்; ஆனால் இன்று புகை இல்லாத நெருப்பாக இந்த நிகோடின் பவுச்சுகள் இளைஞர்களைச் சுட்டெரிக்கின்றன. விழிப்புணர்வே தற்காப்பு! என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு கிளம்பினார் சத்தியமூர்த்தி.

logo
Kalki Online
kalkionline.com