சிறுகதை: பெரிய சிவப்பி

அவுஸ்திரேலியாவிற்கே உரிய மாபெரும் சிவப்பு கங்காரு விலங்குத்திரளின் தலைவியான பைம்மாவினம் (marsupial) என்னை தாக்கத் தயாராகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
Kangaroo
Kangaroo
Published on
Kalki Strip
Kalki

முப்பது அடி தூரத்திலிருந்தபடி வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்தபடி நின்றாள் அந்த சிவப்பி. அவள் என்னிலும் உயரமாக இருந்தாள். இப்படி ஒரு அழகியை என் வாழ்நாளிலே நான் கண்டதில்லை. நான் அவளை நோக்க அவள் என்னை நோக்க, அப்படியே சில நிமிடங்கள் நின்றோம். பின்பு அவள் என்னை நோக்கி நகர்ந்தாள்.

அவளின் பின்னங்கால்களும் வாலும் சேர்ந்து முக்காலியாக அமையத் தன்னை சமநிலைப் படுத்தியபடி முன் கால்களை உயர்த்தி நின்றாள். அவுஸ்திரேலியாவிற்கே உரிய மாபெரும் சிவப்பு கங்காரு விலங்குத்திரளின் தலைவியான (marsupial) பைம்மாவினம் என்னை தாக்கத் தயாராகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னை நோக்கி சிறு துள்ளலோடு முன்னேறினாள்.

இப்படிப் பாய்ந்து பாய்ந்து தாக்கக் கூடிய அளவெல்லை வந்ததும், தன் வைரம் வாய்ந்த வால் மேல் ஊன்றிப் பாய்ந்து அவள் முன் கால்களால் என்னைப் பற்றிக் கொண்டு பின் கால்களின் நகங்களால் என் வயிற்றைக் கிழித்து குடலை உருவி எடுக்கத் தயாராகிறது, என எனக்குப் புரிந்துவிட்டது. பயத்தில் என் உடல் நடுங்கியது, மனதில் ஒரே பீதி, ஆனால் இனி பின் வாங்கமுடியாத நிலை.

ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரில் உயிர்பிழைத்து, இந்த கங்காரு தேசத்திற்கு 1995 ஆண்டில் குடிபெயர்ந்து இப்போது ஒரு கங்காருவால் சாகப் போகிறேனா? இங்கு புலம் பெயர்ந்த போது இந்த ஊரில் வேலை செய்த அனுபவம் இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலைமை. எனது நீள் துப்பாக்கி சுடும் அனுபவத்தையும் துப்பாக்கிச் சூடு போட்டிகளில் கிடைத்த பரிசு பத்திரங்களையும் காட்டி கங்காருக்களை அறுவடை செய்யும் வர்த்தகத்துறையில் முழு உரிமைபெற்ற தொழில் வல்லுநர் ஆனேன். கங்காருக்களைக் கொன்று அதன் இறைச்சியையும், தோலையும் விற்று பணம் சம்பாதித்தேன். அதோடு காட்டில் வசிக்கும் கங்காருக்கள் பெருகி, கால் நடை மேய்ச்சல் நிலப் புல்வெளிகளை மேய்ந்து அழித்து விடுவதால் பண்ணைக்காரர்கள் என்னை போன்றவர்களுக்குக் கூலி கொடுத்து கங்காருக்களைச் சுடுவதற்கு நியமிப்பார்கள். அந்த வேலையாகத்தான் பேர்த் என்ற ஊரிலிருக்கும், கமரூன் கால்நடைப் பண்ணையில் இப்போது நிற்கிறேன்.

என்னிடம் கைவசம் 12 தோட்டா மகசீன் கொண்ட ஒரு பி எஸ் ஏ 22 நீள் துப்பாக்கி இருந்தது. இது பழைய பிரித்தானியக் காலத்துத் துப்பாக்கி. ஒரு கைபார்க்கிறதென்று நான் துணிந்துவிட்டேன். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் உயிருக்குத்தான் ஆபத்து.

சிவப்பியின் தலையை அல்லது நெஞ்சைத் தான் குறிவைக்க வேண்டும். சிவப்பியின் சிறிய தலை ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓயாது ஆடிக்கொண்டிருந்தது. அவள் பரந்த நெஞ்சு மேலேயும் கீழேயும் போய்க் கொண்டிருந்தது. சிவப்பி என்னைக் கிட்டியதும், அவள் நெஞ்சைக் குறிபார்த்துச் சுட்டேன், டுமில்!! ஒரு நிரலொளுங்கு தொடங்கியது. பாய்ச்சல், சமநிலை, டுமில். ஆயினும் சிவப்பி உறுதியான நோக்கத்துடன் என்னை நோக்கி முன்னேற அவள் உருவம் பெரிதாகி பெரிதாகி என்னை அச்சுறுத்தியது. என் துப்பாக்கியில் எஞ்சியிருப்பது எத்தனை தோட்டா? ஒன்றா? இரண்டா? இதோ கிட்டவே வந்துவிட்டாள், சடாரென்று சிவப்பி குப்புற நிலத்தில் விழுந்தாள். எனக்கு ஒரு அடி தூரத்தில் அவள் தலையும் என்னைப் பற்றிப்பிடிக்கப் பார்த்த கைகளும் கிடந்தன. என் காலடியில் சிவப்பி இறந்துக்கிடந்தாள்..!

இதையும் படியுங்கள்:
மருத்துவ விழிப்புணர்வு கதை: ஒரு நொடியின் அதிர்ச்சி!
Kangaroo

உடனேயே நான் சிவப்பியின் வயிற்றுப் பைக்குள் கையைவிட்டுக் குட்டிகள் இருக்கின்றனவா என துழாவிப் பார்த்தேன். வெறுமையாக இருந்தது "கடவுளே! நன்றி", என்றேன். தாயின் மடியைவிட்டு இறங்காத குட்டிகளைக் கொல்ல எனக்கு மனம் வருவதில்லை. ஆனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் வரைந்து வைத்திருக்கும் இரக்க கோட்பாடுகளின்படி, ஒரு பெண் கங்காருவைச் சுட்டுக் கொன்றால் அதன் வயிற்றுப் பையில் குட்டிகள் இருந்தால், ஜீவகாருண்ய நியதிப்படி குட்டிகளையும் கொல்லவேண்டும். காரணம் தாயின் பை இல்லாமல் அவை உயிர்வாழ முடியாது.

சிவப்பியின் தோலை உரிப்பதற்கு என் வேட்டையாடும் கத்தி கைவசம் இருக்கவில்லை. ஆகையால் பண்ணைக்கே திரும்பினேன். இரவு உணவிற்குப் பின் ஒன்பது மணி போல, நல்ல நிலவு வெளிச்சத்தில் குறும்காட்டுப் புதரின் ஊடாகச் சென்று சிவப்பியின் தோலை உரித்தேன்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: வேடம் பூண்டு வினை தீர்த்தவன்!
Kangaroo

ஆஹா!! என்ன அழகான மினுமினுக்கும் சிவப்பு. அதைக் கோணிப்பையில் போட்டு என் முதுகில் சுமந்து கொண்டு நட்சத்திரங்கள் வழிகாட்டப் பண்ணையை நோக்கி நடக்க தொடங்கவும், ஒரு முப்பது கங்காருக்கள் கும்பலாகத்திரண்டு நாற்பது அடி விட்டத்தில் அரை வட்டமாக என்னைப் பின்தொடர்ந்தன. நான் வியர்த்து வெலவெலத்துப் போனேன். இரண்டு மைல் தூரத்திலிருந்த கால்நடைப் பண்ணைக்குப் போய்ச் சேரும் வரை பின்தொடர்ந்தன. கடவுள் காத்தார் அவை என்னைத் தாக்கவில்லை. ஆகையால் இன்றும் என் தொழில் பயணத்தைத் தொடர்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com