

முதன் முதலாய் அந்தச் செய்தியை படித்த போது நம்பவே முடியவில்லை மதனால்.
இறந்தவர் யாருடன் வேணாலும் பேச முடியும். மினிமம் மூன்று மணி நேரம் அந்த மெஷின் முன் உட்கார்ந்தால் போதும்.
இறந்தவர் த்ரீ டைமன்ஷனில் தோன்றி உங்களோடு பேசுவார்.
பட்ட பகல், இரவு... எப்போது வேணாலும் பேசலாம்.
“சரி மெஷின் பேரென்ன?” ப்ரஸ் ரிப்போர்டர் தேவன் கேட்க,
“இன்னும் வைக்கலை...” மதன் பதிலளிக்க,
"என்னடா இது பெரிய தமாஷா இருக்கு... இந்த 22ஆம் நூற்றாண்டில் எதைக்கண்டு பிடிப்பதென விவஸ்தையில்லை?" தேவன் வியக்க,
“எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை செய்து விட்டு அடக்கமா இருக்கீங்க? மார்க்கெட்டில் லாஞ்ச் பண்றதில்லை? நான் ப்ரஸ்காரன். உடனே மீட்டிங் ஏற்பாடு செய்யவா?”
“தம்பி நீ என் ஃப்ரண்டோட கஸின்... செய்னு நான் சொல்லக்கூடாது. இதோ பேப்பரில் முழு மேட்டரும் வந்திரிச்சு. என் மகன் ராமுவே வரட்டும். நானே பேசிக்கறேன்.”
“எங்கே போயிருக்கார்?”
“அதான் தெரியலை. மார்கெட்டிங் விஷயமாய்தான் போயிருப்பான். நல்ல உழைப்பாளி.”
“ஸார் நான் என்னால் முடிந்ததை செய்யறேன். முதலில் இந்த மெஷின் எப்படி ஒர்க் பண்ணுதுனு பாரக்கணும்.”
“அதை எதுக்கு நான் உனக்கு சொல்லனும்? நீ யார் எனக்கு?”
“உங்களுக்கு வேண்டியவன்.”
“அத்தோடு நிறுத்திக்க.”
“கோபப்படாதீ்ங்க ஸார். இந்த கண்டுபிடிப்பால கடனடைக்காமல செத்தவன், தற்கொலை செய்து கொண்டவன், சொத்துப் பிரச்னை, துரோகம் செய்த மனைவி-கணவன், ஆனவக்கொலை செய்யப்பட்ட ஜோடிகள்.... மற்றும் ஏராளமான மேட்டர்கள் தெளிவாயிடும். கோர்ட் கேஸ் ஈஸியாயிடும்.”
“தெரியுதில்லே. அவ்வளவு முக்யமான மெஷினைப்பற்றி நான் ஏன் உனக்கு சொல்லணும்? நீ பணம் பண்றதுக்கா? சரி இந்த மெஷின் மேட்டரை பற்றி யார் உனக்கு சொன்னா?”
“அது வந்து நல்ல பத்திரிக்கைகாரன் சோர்ஸ் பற்றி சொல்லக்கூடாது. இருந்தாலும் நான் உங்களுக்கு சொல்றேன். உங்க வீட்டு வேலைக்காரி பாமா.”
“துரோகி. அவளை வேலையை விட்டு நீக்க சொல்றேன். அது சரி, அவளை உனக்கு எப்படி தெரியும்?"
“எங்க வீட்டுக்கும் அவள்தான் வேலைக்காரி!”
“ஓஹோ! இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் இது மட்டும் மாறாது போல. சரி எனக்கு டயர்டா இருக்கு.”
“ரெஸ்ட் எடுங்க. என்னை நம்பி சொல்றதுன்னு முடிவெடுத்தால் போன் பண்ணுங்க. இந்தாங்க விசிட்டிங் கார்டு.”
“அப்படி டேபிள் மேல வச்சுட்டு போ.. போகும்போது கதவை சாத்திடு.”
“அப்ப நான் வரேன்."
'இவங்களெல்லாம் சைன்டிஸ்டுகள். வில்லங்கம் பிடிச்சவங்க. தலையை சுத்தி ஞானவெளிச்சமிருக்குனு நினைப்பு...' என்று தேவன் முனகியபடி செல்ல,
“திருட்டு பய தேவன். மெஷினை வைச்சு பணம் பண்ண பாக்கறான். ராமு வரட்டும். தேவன் சகவாசம் வேண்டாம்னு அடிக்கடி சொல்வான். தூக்கமா வரது. ஒரு தூக்கம் போடுவோம்.”
குறட்டை விட...
வெளியே போன ராமு யுனிவர்சிடியில் ஹெட்டிடம் “ஸாரி ஸார். ஏழு வருடமாகியும் என்னாலே உருப்படியா ஒன்றும் செய்ய முடியலை. சிம்ப்ளி வேஸ்ட் ஆ்ஃப் டைம் & மணி...“ தாழ்ந்த குரலில் சொன்னார்.
ஹெட் ஒரு பிடி பிடித்தார். "மேலிடத்திற்கு நானென்ன பதில் சொல்றது? முடியலைனா முதலிலேயே சொல்வதற்கென்ன?” சீற்றம் அவர் குரலில் வெளிபு்பட்டது.
தலை குனிந்தபடி நின்றார் ராமு.
“சரி கண்டுபிடிப்பை ட்ராப் செய்வோம். ஆராய்ச்சி நிலையத்தை மூடிடலாம்.”
“மூடிட்டு...?”
“மசலா சாப்பிட்டு மசாலா படம் பாத்துட்டு லைஃபை அனுபவி போய்...”
விரட்டினார்.
செம கடுப்பில் கிளம்பிய ராமு காரை எடுத்துக்கொண்டு ஒரு வேகமான ட்ரைவ் கடலோரம் கிட்டத்தட்ட 100 கி.மீ ஸ்பீட்...
அதற்குள் ப்ரண்ட்ஸ், சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் எல்லோரிடமுமிருந்தும் போன்...
“இன்னும் ஒன்றும் கண்டுபிடிக்கல. முயற்சி தோல்வி.”
“சொல்லிச்சொல்லி வாய் வலிக்குதடா... ஃபோனை ஆஃப் பண்ணுங்கடா...” கத்தினார் ராமு.
கடற்கரைக்குச் சென்று கொஞ்சநேரம் காற்று வாங்கிட்டு வீட்டுக்கு போனால் மெஷின் ஆன் லைனில் இருந்தது.
"ஆஃப் பண்ண மறந்துட்டேனா?” மெஷினை ஆஃப் பண்ணப்போக,
"நில்லுடா...” என்ற அதட்டும் குரல்!
"யாரது? பழகின குரலா இருக்கே."
மெஷின் சார்ஜரை போட, சார்ஜிலேயே இருந்தது.
மெஷின் விளிம்பில் சாய்ந்தபடி மதன்...
“அப்பா இன்வென்ஷன் தோல்வி என ஹெட்டிடம் பாட்டு வாங்கிட்டு ஊர் சுத்திட்டு வரேன். என் அழைப்புக்கு நீங்க வரலைனு நினைச்சேன். எப்பப்பா வந்தீங்க?”
ராமு குதூகலத்தில் குதிக்க...
"ஏன்டா! அழைப்பை ஏற்க மூணு மணி நேரமாகும்னு தெரியாதா? வெறும் கால் மணி நேரத்தில் வரலைனு ஓடிட்டே... சரி எதுக்கு கூப்பிட்டே? இன்னும் 5 நிமிடத்தில் நான் ரிடனாகணும். சொல் என்ன வேணும் உனக்கு?” அவசரப்படுத்தினார்.
“இந்த மெஷின் என் கண்டுபிடிப்பு. சக்ஸஸ் ஆகணும்.” மதன் பேசிக்கொண்டிருக்கும் போதே...
“ஓகே. அதான் கண்டு பிடிச்சிட்டியே!”
அப்பா மெஷின் உள்ளே சென்று மறைந்தார்.