சிறுகதை: தாத்தா பாட்டி ஓட்டுப் போட்ட கதை!

வயது முதிர்ந்தாலும், அன்பும் ஜனநாயகக் கடமையும் என்றும் இளமையானவை என்பதை இந்த கதை அழகாக உணர்த்தி உள்ளது.
Kulandaiswamy - Ponnammal
Kulandaiswamy - PonnammalAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

தாத்தா குழந்தைசாமி வயது 78, ஓட்டுப் போடும் பள்ளிக்கூட வாக்குச் சாவடிக்கு பாட்டி பொன்னம்மாளுடன் (வயது 70) ஆட்டோவில் வந்து இறங்கினார்.

பாட்டியால் டக்கென்று ஆட்டோவில் இருந்து இறங்க முடியவில்லை.

"ஒரு கை பிடிங்களேன்"

'அன்பே வா' படத்தில் சாரட்டு வண்டியில் சரோஜாதேவி கைபிடித்த எம்.ஜி.ஆர் போல... பிடித்து இறக்கி விட்டார் தாத்தா.

பாட்டி... பட்டு மாதிரி, பளபள என இப்போ வர்ற பச்சை கலர் புடவை கட்டி, மேட்சிங் பிளவுஸ் போட்டு இருந்தார். மஞ்சள் பூசிய முகத்தில் மரூன் குங்குமம்.

முக்கால் நரை தலை, கொண்டை போட்டு அதில் பூ சுற்றி... வைரத்தோடு, மூக்குத்தி டால் அடிக்க சுற்று முற்றும் பார்த்தாள்.

ஒரு பெண் கான்ஸ்டபிள் கிட்டே வந்து, "எந்த வார்டு பாட்டி?"

"ஏழு" என்றார் தாத்தா.

"நேரா போயி வலது பக்கம். 130/192ன்னு நம்பர் போட்டு இருக்கும்" என்றார் கான்ஸ்டபிள்.

மணி ஏழரை. அவ்வளவாகக் கூட்டமில்லை.

அவர் சொன்ன இடத்தை நோக்கி தாத்தா மெல்ல மெல்ல நடந்தார்.

பாட்டி அவர் பின்னால் சற்று இடைவெளி விட்டு நடந்தார்.

நேராகப் போன தாத்தா கான்ஸ்டபிள் சொன்ன திசை மறந்து இடது பக்கம் திரும்பி ஒரு வகுப்பு பக்கம் போனார்.

பாட்டி அவர் சட்டையைப் பிடித்து, "எதையும் சரியா காதில் வாங்கறதே இல்லே.. வலது பக்கம் தானே அந்த போலீஸ் சொன்னாள்.. இப்படி வாங்க."

பத்து பேர் தான்.. சின்ன கியூ போல் இருந்தார்கள் வாக்காளர்கள்.

இவர்களைப் பார்த்ததும் வாசலில் இருந்த ஏட்டு "நீங்க போங்க."

இருவரும் உள்ளே போனதும் முதல் சேரில் ஒரு பெண் ஆபீஸர் பூத் ஸ்லிப், வோட்டர் ஐடி கேட்டார்.

தாத்தா தன் சட்டைப் பையில் தேடினார்... இல்லை.

பாட்டியிடம், "பொன்னு மறந்திட்டேனே... டைனிங் டேபிள் மேலே வச்சதை எடுத்து வரலே".

பாட்டி தன் கைப் பையைத் திறந்து தாத்தா ஸ்லிப் ஐடி எடுத்துத் தந்தாள்.

"இப்படி பண்ணுவீங்கன்னு தான் பத்திரமா நான் எடுத்து வந்தேன்.. எதையும் முழுசா பண்றதில்லே." முணுமுணுத்தது கிட்டத்தட்ட எல்லோர் காதிலும் விழ புன் சிரிப்பு அவர்கள் முகத்தில்.

தாத்தா காதில் அது விழவில்லை.

"குழந்தைசாமி. அப்பா பெயர் குப்புசாமி வரிசை எண் 433" சத்தமாகப் படித்தார் பூத் ஊழியர்.

லேசாக தாத்தாவுக்கு கேட்டது ‘ஆம்’ என்பது போலத் தலை ஆட்டினார்.

(எப்போதும் பொன்னம்மா பேசறது என்னமோ கேட்பதே இல்லை அவருக்கு... காது ஆட்டோமேடிக்கா ஷட் டவுன் பண்ணிக்கும். டைனிங் டேபிளில் ஞாபகமாய் எடுத்துப் போக வச்சதை... வேண்டும் என்றே பாட்டி எடுத்து தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டது தெரியாது தாத்தாவுக்கு. இது மாதிரி அடிக்கடி பாட்டி செய்வார்... தாத்தா தேடித் தடுமாறுவதைப் பார்க்க அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.)ம் அட்டை தடுப்புக்குள் போகச் சொன்னாள்...

உள்ளே போன தாத்தா தேடினார்.. தேடினார்...அப்படித் தேடினார்...18 வேட்பாளர்கள்...

எந்த படம் யார் என்பது ஒன்றும் புரியாது விழித்தார்.. ஒரு அதிகாரி இவர் தடுமாற்றத்தை அறிந்து அருகில், ஆனால் எட்டி நின்று.

"தாத்தா கண்டு பிடிச்சிட்டீங்களா... ஹெல்ப் பண்ணட்டுமா?"

"வேண்டாம்.. இருக்கு.. இதோ "

என பட்டன் அருகில் இருந்த சிவப்புப் புள்ளியை அமுக்கி அமுக்கி எடுத்தார்.

ஓட்டு விழவில்லை.

ஓரளவு தாத்தா தடுமாற்றத்தை அறிந்த பூத் அதிகாரி "நீட்டமா ட்யூப் மாத்திரை மாதிரி இருக்கும் பட்டனைத் தொடுங்க."

அப்பாடா முடிஞ்சுது.

பாட்டி ஒரு நிமிஷத்துக்குள் போட்டு விட்டு வந்திட்டாள்.

யூ ட்யூபில் ஓட்டு போடுவது எப்படிங்கிற வீடியோவைப் பலமுறை பார்த்து மனப்பாடம் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: துணிச்சல்!
Kulandaiswamy - Ponnammal

இவர்கள் வோட்டுப் போட்டு வெளியேறிய களேபரத்தில் கூட்டம் சேர க்யூ பெரிதாக நீண்டு இருந்தது.

பாட்டி முணுமுணுத்தாள் "உங்களால் எவ்வளவு கூட்டம் சேர வச்சிட்டீங்க பாருங்க"

வாசலில் ஆட்டோ ஏற பெண் கான்ஸ்டபிள், ஒல்லியான பாட்டி உடம்பைத் தாங்கி உள்ளே தள்ளிய படி, "பாட்டி புடவை ரொம்ப நல்லா இருக்கு."

"ஆனந்தம் கடையில் எடுத்தேன்.. எழுநூத்தி ஐம்பது... எலெக்‌ஷனில் வோட்டுப் போடறதுக்குன்னு... தாங்க்ஸ் வர்றேன்."

ஒரு நிமிஷம் தான். ஆட்டோ ஓடி வீட்டு வாசலில் நின்றது. வீடு பூத் தெரு முனை தான்.. ஆனால் பாட்டியால் நடக்க கஷ்டம்.

வழக்கமாய் ஆஸ்பத்திரி போற ஆட்டோக்கார் மணி தான் வந்தார்.

இறங்க பாட்டிக்கு கை கொடுத்தார் தாத்தா.. நூறு ரூபாய் போக வர.

வாசலில் பேரனும் பேத்தியும் ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள்.

பேத்தி தாத்தாவிடம் "வோட்டு போட்டீங்களா கரெக்டா ?”

"நீ சொன்ன மாதிரியே கரெக்டா போட்டேனடா கண்ணு"

பேரன் பாட்டியை நோக்க, பாட்டி சிரித்தபடி "நீ சொன்னபடியே போட்டு விட்டேன்டா ராஜா"

பேரன் முத்தமழை பொழிந்தான் பாட்டி கன்னத்தில்.

குழந்தைகளின் அம்மா அப்பா சிரித்தார்கள்.

மருமகள் "வெயில் குறைஞ்சதும் நாம போவோம்" என்றாள்.

இப்போது ஓட்டுப் போட வயது 18 என யார் சொன்னது.. சூத்திரதாரிகள் வீட்டில் இருக்க...

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com