
முருகேசனுக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா நடத்துவதிலெல்லாம் அவ்வளவு விருப்பமில்லை. காரணம், பெரிதாக ஒன்றுமில்லை... முதல் கல்யாணத்தையே நடத்த முடியாமல் பலர் சிரமப் படுகையில் இன்னொரு கல்யாணம் எதற்கு? என்பது அவர் எண்ணம். ஆனாலும் அன்பான மகளும், மகனும், மனைவியும் விருப்பப் படுகையில் அதை வேண்டாமென்று ஒதுக்கவும் மனமில்லை. இதற்கிடையே அவரின் உள்ளத்தில் சில வருடங்களாகவே ஓர் ஆசை. ஆங்காங்கே, அடிக்கடி பழைய மாணவர்கள் ஒன்று கூடி தங்கள் இளமைக் காலத்தை அசை போட்டுக் கொள்வது போல, நாமும் முயற்சி செய்து அது போன்ற ஒரு விழா எடுக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு!
அதற்கான எண்ண ஓட்டம் அடிக்கடி மனதில் தோன்றினாலும், அந்த ஒரு நிகழ்ச்சி அவர் நினைவுக்கு ஆணி வேராக அமைந்தது. எப்பொழுதும் அவரை மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவரை அன்று காணவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்த ஆட்டோகாரர், குறிப்பிட்ட அந்த நாளில் பள்ளிக்காலப் பழைய நண்பர்களுடன் விழா கொண்டாட போய் விட்டதாகக் கூறியதும், அவரின் மனவோட்டம் பொங்க ஆரம்பித்து விட்டது. சஷ்டியப்த பூர்த்திக்கு முன்னர் அந்த விழாவை முடித்து விட உறுதி பூண்டார்!
மனதுக்குள் திட்டம் உருவாகியது. எம்.ஏ., படித்த நண்பர்களா? பி.ஏ.,படித்தபோது உடன் படித்தவர்களா? அல்லது ஆறாவது முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தவர்களா? முதுகலை படித்தது நகரத்தில். அதுவும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. பட்டம் பெற்றது வேறொரு நகரில். அது 3 ஆண்டுகள் மட்டுமே. ஆறாவது ஆரம்பித்துப் பதினொன்றாவது வரை 6 ஆண்டுகள் படித்தது பக்கத்து ஊர் உயர்நிலைப் பள்ளியில். உடன் படித்தவர்களெல்லாம் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்; சாதாரணமானவர்கள்; சிலர் அதோடு படிப்பை நிறுத்திவிட்டு, கிடைத்த வேலைகளுக்குச் செல்ல, பலர் கிராமங்களிலேயே செட்டில் ஆகி விட்டவர்கள். அவர்களைச் சந்திப்பதே பொருத்தமானது என்ற கரு உருவாகியது!
உடனடியாக ஊரில் தொடர்பிலுள்ள, ஒன்றாகப் படித்த சிலருடன் பேசி ஏற்பாடு செய்யச் சொல்ல, எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. இரண்டு நாட்கள் முன்பாகவே ஊருக்கு உற்சாகமாகச் சென்றவரின் முகம், திரும்பி வந்தபோது வற்றிய நதியாக, வாடிய மலராக, காற்றுப்போன பலூனாக களையிழந்து போய்க்கிடந்தது! மற்றவர்கள் திகைத்துப்போய் நிற்க… முருகேசன் தனக்குள்ளாகக் குமைந்து, உடைந்து போய் விட்டார்!
அந்தச் சந்திரசேகரன் எப்படித் துடிப்பாய், முதல் பெஞ்சில் அமர்ந்து, முகத்தில் முடி அலைபாய லூட்டி அடிப்பான்! அவனா இப்படி? வழுக்கை விழுந்து, சற்றே கூனி...
வைத்திலிங்கம் எப்படி மினுமினுன்னு இருப்பான்! அவன் உடம்பு எப்படி இப்படிச் சுருங்கிப் போனது?
அய்யப்பன் அப்பொழுதே அடுத்த தெரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்வான்! ஆனால் படிப்பில் எனக்குச் சரியான போட்டியைக் கொடுப்பான்! அவன் இறந்து விட்டான் என்பதை இதயம் இன்னும் ஏற்கவே மறுக்கிறதே!
சுருட்டைமுடி தெட்சணாமூர்த்திக்குப் பாட்டுன்னா உசுரு. பீரியட் மாறுகையில் பாடுவதற்கு வசதியாக எப்பொழுதும் கடைசி பெஞ்சில்தான் உட்காருவான். ஆள்தான் பெருத்து விட்டானேயொழிய அவன் குரலில், இசையின் மேல் கொண்ட ஈடுபாட்டில், குறைவில்லை. அவன் பாட்டைக் கேட்டபோது, ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் சற்றே வருத்தமாகவும் இருந்தது... அந்தப் பாட்டுக்காரன் அவன் ஊரிலுள்ள தென்னை, பனை மரங்களுக்கு மட்டுமே பாடியதோடு நிறுத்திக் கொண்டு விட்டானே என்று!
அப்பொழுதே வளர்ந்திருந்த குருசாமி ஆசிரியராய் வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டாராம்.
அது என்னவோ தெரியவில்லை... நம் கால்களில் பட்டால் சத்தியாக்கிரகம் செய்யும் கால்பந்து, சிவப்பிரகாசம் காலில் பட்டால் மட்டும் மேலெழும்பிப் பறக்கும்! அந்த சிவப்பிரகாசம் மூன்று மாதம் முன்புதான் மூச்சை நிறுத்தினாரென்று கண்ணீருடன் சொன்னார் வேம்பையன்!
ஒருமுறை வகுப்பில், ஓடி வந்த பன்னீர் செல்வம், ’அப்பாடா!’ என்று ஆசுவாசப் பெருமூச்சுவிட, ”அப்பா ஆடு ஆயிட்டா வீடெல்லாம் புழுக்கையாயிடுமே!” என்று வேம்பையன் கூற, அனைவரும் கொல்லென்று சிரித்து விட, பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஆர்.எஸ்., என்னவென்று ஒருவனிடம் கேட்க, அவனும் விஷயத்தைச் சொல்ல, வேம்பையனோ நடுங்க, ஆர்.எஸ்ஸோ தானும் சிரித்து, வகுப்பையே சிரிப்புக்கடலில் ஆழ்த்தினார்.
எப்பொழுதும் சைக்கிளிலேயே வலம் வரும் பாலசுந்தரம், சைக்கிளில் செல்கையில் லாரி மோதி இறந்து விட்ட செய்தி, எல்லோரையுமே வாட்டியது!
அமிர்தவல்லி, மலர்க்கொடி, ராஜம், ரஞ்சனி, சுசீலா என்ற பெண்டிரெல்லாம் குடும்பத் தலைவிகளாகவே தங்கள் வாழ்நாளை ஓட்டி விட்டார்கள். இருந்தாலும் தங்கள் ஆசைகளைத் தங்கள் குழந்தைகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் மூலமாக நிறைவேற்றி வருகிறார்கள்!
இப்படி சிறிய வயது உருவங்களையும், உற்சாக நிகழ்வுகளையும் மனத்தில் பிம்பமாக வைத்திருந்த அவர், இந்த விழாவின் மூலம் அந்த பிம்பங்கள் உடைய அவரே வழி வகுத்து விட்டதாக எண்ணி, யாரிடமும் சொல்லக்கூட முடியாமல் மனதிற்குள் புலம்புகிறார்!
நிறைந்து கிடந்த பிம்பங்கள் உடைந்து ஓடாய்ப் போய்விட்டனவே!