
பதினேழாவது முறையாக கபிக்கு அந்த ஃபோன்கால் வந்தது.
கோபமாய் வந்தது. எடுத்து “உன் நம்பரை ப்ளாக் பண்ணவா?” என்று கத்தினான்.
“என்னை இக்னோர் பண்ணாதே. இன்னும் இரண்டு நாளில்..”
“சொல்லிட்டே. நம்ம கிரஹத்தின் மேல் புதுவகை மனிதர்கள் படையெடுத்து வரப்போறாங்க. வரட்டும்.” என்று ஃபோனை கட் செய்தான்.
மறுபடி கால்...
கடுப்பாகி “பைத்தியமா நீ? உனக்கென்ன வேணும்? நானென்ன செய்யணும்?” எரிச்சலின் உச்சத்தில் குரல்.
“நீ தானே கிரஹத்தின் ஹெட். நீயே முடிவு செய். ஆனால் எதிரி பெரிய அறிவாளிகள் கூட்டம். ஜாக்ரதை.”
“ரொம்ப தேங்க்ஸ். நீ யார்?”
“நானா?” கடகடவென சிரித்தது, “பாதி மேக்கிங்கில் ஸ்டாப்பான உயர்தர டி கிரேட் ரோபோ”... லைன் கட் ஆனது.
கபிக்கு எச்சரிக்கையின் தீவிரம் புரிந்தது. ரோபோக்களின் கிரஹத்தை புதுவகை மனிதர்கள் பிடிப்பதா?
ரோபோக்களை கண்டு பிடித்தது வேணா மனிதர்களாயிருக்கலாம். ஆனால் ஒரு லெவலுக்கு மேல் தானே அப்கிரேடாகி, தங்களுக்கென ஒரு கிரஹத்தையே உரு்வாக்கி, தாங்களே ஆளும் வரை உயர்ந்தது தன் உழைப்பால்.
எல்லா மூலைக்கும் ரெட் அலர்ட் கொடுத்தான் கபி.
“எந்த வகை சிக்னல் வந்தாலும் ரீட் பண்ணி அனுப்புங்க. மினிட் பை மினிட். ஃபீட்பேக் அவசியம்.”
காவல் தலைமை சிபிக்கு அவசர அழைப்பு...
“சிபி, கிரஹத்துக்கு ஆபத்து. செக்யூரிடி அலர்ட்.”
கண்ணிமைக்கு்ம் நேரத்தில் எல்லாம் நடந்தது.
அடுத்த பத்தாவது செகன்டில் சேட்டிலைட் ஃபோட்டோக்கள் கபியின் கைகளில்..
கிட்டத்தட்ட 2லட்சம் கி.மீ தள்ளி ஸ்பேஸில் சதுரமான வடிவத்தில் ஒரு இமேஜ். அதனுள் வட்டமாய் பச்சை நிறத்தில் ஒரு புள்ளி.
லேபுக்கு அனுப்ப, டெவலப் செய்யப்பட்ட பிரிண்ட்டுடன் வந்த மெஸேஜ் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.
சதுரமான வடிவம் ஒரு பறக்கும் தட்டு. மணிக்கு 16,000 மைல் போகக்கூடியது. வட்டவடிவ இமேஜ் வாலும் கொம்புமுள்ள மனிதன்...
சிபியை காண்டாக்ட் பண்ண, மேலும் டிடெய்ல்ஸ் கிடைத்தன.
“அது ஒரு உளவறியும் பறக்கும் தட்டு. அதனுள் இருப்பது ஒரு ஏஜென்ட். நம் கிரஹத்தை பதினாறு நாட்களாய் வேவு பார்க்கிறார்கள்.”
கபி கடுப்பாகி “வெட்கமாயில்லே இப்படிச்சொல்ல? பதினாறு நாட்களாய் என்ன பிடுங்கிக்கிட்டிருந்தீங்களா?” கத்தினான்.
“நாம எந்திரம். வெட்கம் கிடையாது. பிடுங்கிக்கிட்டிருந்தீங்களாங்கறது எங்க மெமரியில் இல்லாத கெட்ட வார்த்தை. உங்களைப்போன்ற அதிகாரி யூஸ் பண்ணக்கூடாதது.” சிபியின் கோபசென்ஸார் சூடானது.
“இதெல்லாம் கரெக்டா பேசு. உன் வேலையில் எவ்வளவு பெரிய லீக். இந்தக் குற்றத்துக்கு உன்னை ஸ்பேர் பார்ட்ஸா ஆக்கணும். அதை கோர்ட் முடிவு பண்ணும்.”
“டூ தட். எனக்கும் ரிடையர்மென்ட் தேவை. எவ்வளவு நாள் இந்த ஓல்ட் சென்ஸாரோடு மாரடிப்பது? இப்ப என்ன ஆர்டர்?”
“கெட் த்ட் ஸ்பை வெகிகிள் வித் த ஸ்பை. கெட் லாஸ்ட்.”
“ஓகே பாஸ்” கடுப்பாகி சிபி கிளம்ப, டேபிளை ஓங்கி குத்தினார் கபி.
ஆறு மணி நேரத்தில் சிபியிடமிருந்து மெஸேஜ்.
“பிடிச்சாச்சு. என்கொயரி டிபார்ட்மென்டில் எதிரி.”
“வெல்டன். இதோ வரேன்...” கபி கிளம்பிவர ரெண்டே நிமிடம்.
“எப்படி பிடிச்சே?” என்றபடி வந்த கபிக்கு ஷாக்
பத்தடி உயரத்தில் டார்க் வயலட் கலரில் குதிரையை நிற்க வைத்தது போல் உருவம். மிக நீண்ட வால். தலையில் மூன்று சின்னக்கொம்புகள். மனித முகம் சற்றே முளைத்த மீசை தாடியுடன் “வ்வே” என்று சத்தமிட்டது.
“நம்ம டெக்னிகல் டிபார்ட்மென்ட் அல்ட்ராரெட் வேவ்ஸ் மூலமா வளையம் போட்டு இழுத்துட்டாங்க” சிபி சொல்ல...
“பக் பக்” என சிரித்த அந்த ஜீவன் “முட்டாள்களே! நானே தான் வந்தேன்” என்றது வீரமாய்.
“ஏய் நம்ம லேங்வஜ் பேசுது...” கபி வியக்க,
“மொத்தம் 214 லேங்வேஜ் பேசுவேன்” என்றது.
“வெல், நீ யார்? எந்த கிரஹம்?”
“சொல்ல மாட்டேன். சொன்னா புரியாது”
“புரியற மாதிரி சொல்”
“இருப்பிடமில்லாதவர்கள். இருப்பிடம் தேடி அலைபவர்கள்”
“ஓ! அதுதான் எங்க மேல் போர் தொடுக்க வந்தீர்களோ? எப்ப போர்?”
“சொல்ல முடியாது”
“உன் மேல் கரண்ட் பாய்ச்சுவேன்”
“கரண்ட், காந்தம், அல்ட்ரா வேவ்ஸ், ஆசிட், பாம், நியூக்ளியர் வெப்பன் கூட எங்களை ஒன்றும் செய்யாது.” திமிராய் பேசியது.
“பாத்துடுவோம்!” என்று ஒவ்வொன்றாய் டிரை பண்ண, அது அந்த ஜீவனை ஒன்றும் செய்யவில்லை.
“அதான் சொன்னேனே!” எகத்தாளமாய் சிரித்தது.
“இப்ப என்ன பண்றது? ஒரு விஷயமும் கறக்க முடியலையே...” சிபி டயர்டாய் உட்கார்ந்தது.
கபி யோசித்து முதலில் எச்சரிக்கை கொடுத்த டிகிரேடு ரோபோவுக்கு மெஸேஜ் அனுப்பி விஷயம் சொல்ல...
சிரித்து டிகிரேட் ரோபோ,
“முட்டாள்களே! வெப்பன் இல்லாத ஆர்கானிக் ஐட்டம் ஏதாவது யூஸ் பண்ணுங்க...”
“எதை?”
“எனக்கும் தெரியாது.”
“யோசி. தெரிஞ்சா சொல்” கபி கட் பண்ண, திடீரென கால் நனைந்தது.
“என்னது தரையிலே இவ்வளவு தண்ணி?” என்று கபி சத்தமிட,
“மேலே பைப் ரிப்பேர்” என்றது சிபி.
அந்த ஜந்துவின் கால்களில் தண்ணீர் பட, கால்ளை காணோம். “ஓ” வென சத்தமிட்டது அந்த ஜந்து.
“வெய்ட்” என்ற சிபி, ஹோஸ் பைப் வாங்கி அதன் மேல் தண்ணீர் அடிக்க அந்த ஜந்து அலறியபடி காணாமல் போனது.
“கரண்ட் ப்ரூவ், காந்தம் ப்ரூவ், அல்ட்ரா வேவ்ஸ் ப்ரூவ், ஆசிட் ப்ரூவ், புல்லட் ப்ரூவ் பாம் ப்ரூவ், நியூக்ளியர் வெப்பன் ப்ரூவ் பண்ணின அறிவாளி வாட்டர் ப்ரூவ் பண்ணலையே..” சிபி சிரிக்க,
“குட்! இந்தப் போரில் வாட்டர் ஹோஸ் பைப் தான் ஆயுதம்,” என்ற கபி, போருக்கு லட்சக்கணக்கில் வாட்டர் ஹோஸ் பைப் ஏற்பாடு செய்தார்.
அடுத்த நாள் அந்த ஜந்துக்கள் படையெடுத்து வர , திடீரென அசுர மழையுடன் புயலடிக்க, ஜந்துக்கள் அனைத்தும் காணாமல் போயின.