

பாலுவுக்கு கடுமையான காய்ச்சல். நான்கு நாட்களாய் பூவாயி கைமருந்து கொடுத்துப்பார்த்தும் பலன் இல்லை. நேரம் ஆக ஆக பாலு முனகிக்கொண்டே இருந்தான்.
புருஷன் வந்ததும் இரவு எந்நேரமானாலும் டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போகலாம்னு இருந்தாள் பூவாயி. மணி இரவு பத்து. பாலுவின் அப்பா சோமு கதவைத் தட்டினான். கதவைத் திறந்தபடியே பூவாயி புலம்பினாள்.
"ஏன்டி பூவாயி, பாலுக்கு காய்ச்சல் தேவலாமா?" எனக் கேட்டான்.
"இல்லைய்யா! சரி நீ வா, வண்டிய எடு. புள்ளைய டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போவலாம்," என்றாள் பூவாயி.
"இப்ப மணி என்ன தெரியுமா மூதேவி? காலைல நீ அழைச்சிட்டு போ, ஆட்டோ சொல்றேன். எனக்கு கட்சி வேலை இருக்கு. நாளைக்கு மதியம் மாயவரத்துக்கு மினிஸ்டர் வராரு. நானு நைட்டே போய் நாலு வேனுக்கு ஆள் புடிக்கணும். இந்தா, இந்த பணத்தை உள்ள வை. குளிச்சிட்டு வரேன். சாப்பிட்டதும் தெருவுக்கு போகணும், மக்களை வேனுக்கு கிளப்பணும்," என்றான்.
பூவாயி கையில் கொடுத்த பணத்தைப் பார்த்து அதிர்ந்தாள்! "ஏதுய்யா இவ்வளவு பணம்? எவ்வளவு இருக்கும்?" என்றாள் வெள்ளந்தியாக.
"யார்கிட்டேயும் சொல்லாதே. இதுல அஞ்சு லட்சம் இருக்கு. எலக்சன்ல ஓட்டு போடச்சொல்லி மக்களுக்கு பணம் கொடுக்கணும். நாளைக்கு வேன் செலவு, பூத் செலவு எல்லாத்துக்கும் தான். நாளைக்கும் கொஞ்சம் வரும்," என்று அசால்ட்டாக சொன்னபடியே, அதிலிருந்து நாலு கட்டை எடுத்து பூவாயி கிட்ட கொடுத்தான்.
"எதுக்குய்யா இது?" என்றாள்.
"இதை நீ வச்சுக்க, நம்ம பங்கு," என்றான்.
பூவாயிக்கு திகைப்பு அதிகமானது. "வேண்டாம், வேண்டாம்! தப்பு செய்யாதய்யா," என கெஞ்சினாள்.
"அதெல்லாம் சும்மா பொலம்பாதே," என அவள் வாயை அடைத்தான். நடந்த கூத்து அத்தனையும் பாலுவுக்குத் தெரியும்.
காலை ஆட்டோ சொன்னான். "சரி பூவாயி, புள்ளைய அழைச்சிக்கிட்டு மாயவரம் டாக்டர் தினேஷ் கிட்ட செக்கப் பண்ணு. ஊசி போடச்சொல்லு, வேணும்னா அட்மிஷன் போட்டுடு," என கூலாக சொல்லி கொஞ்சம் கத்தையா பணத்தைக் கொடுத்தான்.
பூவாயியிடம் கொடுத்த இரண்டு லட்சத்தையும் வீட்டில் வைக்கப் பயந்துகொண்டு கையிலேயே எடுத்துப்போனாள். டாக்டரிடம் காண்பித்து ஊசி போட்டு, மாத்திரை மருந்தெல்லாம் வாங்கிக்கிட்டு வீடு திரும்பும் வழியில், தருமபுரம் சந்தில் அதிகாரிகள் ஆட்டோவை மறித்துச் சோதனை போட்டார்கள். ஏழரை துவங்கியது!
பூவாயிக்கு எதுவும் புரியவில்லை. குலையே நடுங்கியது. அவள் கையில் வைத்திருந்த மஞ்சப்பையை வாங்கிப் பார்த்து, "ஏதும்மா இவ்வளவு பணம்?" எனக் கேட்டதும், "என்னோட புருஷன் கொடுத்தாரு. நம்ம தொகுதி வேட்பாளர் தேர்தல் செலவுக்காக என் புருஷன்கிட்ட பணம் கொடுத்தாரு," என நடந்த விஷயங்களை பயத்தில் உளறிவிட்டாள்.
சோதனை அதிகாரிகள் வேட்பாளருக்கு போன் போட்டு நடந்த விஷயம், சோமு மனைவியிடம் செய்த விசாரணை, சோமுவின் நடவடிக்கை என வரிசையாகக் கேட்டவுடன் வேட்பாளர் சுதாரித்தபடியே, "நான் ஒண்ணும் பணமெல்லாம் கொடுக்கலீங்க. கொஞ்ச நாளாவே அவன் சரியில்லை. நைட்டு எலக்சன் செலவுக்காக நிலம் வித்த பணத்தை அவன்கிட்ட கொடுத்து பீரோவில் வச்சு பூட்டச்சொன்னேன். திருட்டுப்பய இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிருக்கான். நானு ஒண்ணு செய்யறேன், லோக்கல் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திடறேன். எனக்கு ஆட்சேபணை இல்லை. நீங்க பணத்தைப் பறிமுதல் செய்யலாம். விஷயம் மட்டும் மீடியாவில வராம பார்த்துக்கோங்க சார்," என போனைத் துண்டித்தார்.
அதிகாரிகள் பூவாயி மற்றும் மகனை ஆட்டோவில் இருந்து இறக்கி ஜீப்பில் ஏற்றினார்கள். அந்த நேரம் அவர்களைக் கடந்து ஆறேழு வேன்களில் மகளிர்களை அழைத்துக் கொண்டு சோமுவோ, "தலைவர் வாழ்க! மந்திரி வாழ்க!" என வாழ்க கோஷம் போட்டபடியே போனான்.
லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் சோமு மீது புகார் கொடுத்துவிட்டு மந்திரி வருகைக்குப் போனார் வேட்பாளர். மதியம் சோஷியல் மீடியாவில் சோமுவின் செயல் விலாவாரியாக வந்தது. அப்போது அவன் மனைவிக்கும் காய்ச்சல் அதிகமானது. அக்கம் பக்கத்து வீடுகளில் புகைச்சலும் அதிகமானது!