
-வேதா கோபாலன்
''டாக்டர்... என் குழந்தைகளுக்கு என்னிக்குத்தா சரியாகும்? பிழைக்குமா, பிழைக்காதா?" கண்ணாடி அறைக்குள் டியூப்கள் செருகப்பட்டு, தேவையான உஷ்ணம் கொடுக்கும் லைட் எரிய, கீங் கீங் என்று இதயத்துடிப்பை மானிட்டர் தெரியப்படுத்திக்கொண்டிருக்க, சாண் நீளமே இருந்த தன் குழந்தையைப் பார்த்துக்கொண்டே பதைப்புடன் கேட்டாள் நிகிலா.
ஒரு பெண் குழந்தைக்காக வருஷமெல்லாம் தவமிருந்து. அதுவே பிறந்த பிறகும் இது என்ன சோதனை! பிழைக்குமா! பிழைக்காதா என்று!
டாக்டர் மென்மையாய்ச் சிரித்தார்.
''உங்களுக்கு என்னிக்கு டியூ-டேட் சொல்லியிருந்தாங்க உங்க லேடி டாக்டர்?"
அவள் யோசித்துச் சொன்னாள். "அதுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கே டாக்டர்?"
''ஆங். அன்னிக்குத்தான் நிச்சயமாய் எதையும் சொல்லுவேன்" என்றபோது மலைப்பாய் இருந்தது. அவளுக்கு இதற்கு மேல் சக்தியில்லை. என்றைக்காவது அவளுக்கு அதிருஷ்டம் இருக்கும் தினத்தில், நர்ஸ் அவளை அழைத்துத் தாய்ப்பால் கொடுக்கச் சொல்லும்போது, அதன் கன்னத்தையும் மூக்கையும் வாஞ்சையுடன் பார்ப்பாள்.
"என்னை அம்மாவாக்கிய என் அம்மாவே... பிழைச்சுண்டுடுடீ..." என்பாள். கையைக் காலையெல்லாம் தடவிப் பார்ப்பாள். 'பார்க்காதே பார்க்காதே' என்று இன்னொரு மனசு கண்டிக்கும். இந்தக் குழந்தை உயிரோடு இருக்கப் போகிறதா இல்லையா என்று தெரியாது. நிச்சயமில்லை. அதன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆசையாய்ப் பார்த்துவிட்டு இது தங்காமல் கிளம்பிப் போய்விட்டதென்றால், ஆயுசு முழுக்க இந்தக் கண்ணும் கன்னமும் கையும் காலும் மனசில் ஆழப் பதிந்து போகும். இப்போதே அதன் தீனக் குரல் கலக்குகிறது. இது மனசை விட்டு மறையப் போவதில்லை. வேண்டாம் வேண்டாம் என்றாலும் இந்தப் பாழாய்ப் போன பாசம் கேட்டுத் தொலைய மாட்டேன் என்று அடம் பிடித்தது. உற்று உற்றுப் பார்த்து 'என் குழந்தை... என் குழந்தை' என்று அக்ஞானம் கொண்டாடியது.
"உன்னை யார் ஒரு மாதம் முன்னால் பிறக்கச் சொல்லி, உன்னையும் என்னையும் சேர்த்து சிரமப்படச் சொன்னார்கள்?" என்று மனசுக்குள் கேட்டுக்கொண்டாள். பார்வை மட்டும் பாப்பா மேல்.
"நிகிலா... இன்னிக்கு உன் குழந்தை ஒரு கிலோவை எட்டிப் பிடிச்சுட்டா... வீராங்கனைதான். கங்கிராட்ஸ்" என்று நர்ஸ் சொன்போது இவளுக்கு அழாமல் இருக்க மிகவும் பிரயத்தனம் பண்ண வேண்டியிருந்தது. இது அத்தனை சாதாரண சமாசாரம் இல்லை. கொண்டாட வேண்டிய மகிழ்ச்சி. குழந்தை ஒன்றேகால் கிலோவைத் தொட்டதும் ஓரிரண்டு நாள் சாதாரணச் சூழ்நிலையில் வைத்துப் பார்த்து, ஒத்துக்கொண்டால் டிஸ்சார்ஜ் பண்ணுவதாய் டாக்டர் வாக்களித்திருந்தார்.
முதல்நாள் அவள் இந்த ஆஸ்பத்திரியில் நுழைந்தபோதே "உன் பாப்பாவுக்கு நல்ல ரெஸிஸ்டென்ஸ் இருக்கும்மா. சாதாரணமாய்ப் பெண் குழந்தைகள் போராடிப் பிழைத்துக்கொள்ளும். டெலிவரியாக இரண்டு மணி நேரத்துக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் கிடந்தும் உன் குழந்தை பிழைச்சதே அதோட ரெஸிஸ்டென்ஸுக்கு நல்ல அடையாளம். இருந்தும் பிளாட்லெட்ஸ்' வெயிட் குறைவு. சட்டுன்னு ஏறலை. தாய்ப்பால் குடுத்து வெயிட் ஏறினால்தான் எதுவும் சொல்லமுடியும். இதெல்லாம் மைனஸ் பாயின்ட்ஸ்..." என்று நல்லது கெட்டதையெல்லாம் குழந்தைக்கு எடுத்துச்சொல்வதுபோல் சொல்லி, "பெஸ்ட் ஆஃப் லக்" என்று முதுகைத் தட்டி விட்டுப் போனது இன்றுபோல் நினைவில் இருக்கிறது..
நேற்றுத்தான் அந்தச் செய்தி அவளை வந்தடைந்தது. 'நியோ 'நேடாலஜி' என்று புத்தம் புதுப் பாப்பாக்களை வைக்கும் வார்டிலிருந்து, அம்மாக்கள் அறையில் இருக்கும் இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டார்கள். நிகிலாங்கறவங்களை உடனே வரச் சொல்லுங்க..." என்றாள் ஒரு நர்ஸ்.
உடம்பும் மனசும் பதறிப் போட்டது. 'இறைவா, எந்தக் கெட்ட செய்தியையும் என் காதில் போட்டுவிடாதே. அப்படி ஏதாவது நேர்ந்தால் அது என் காதை எட்டுமுன் என்னைச் சாகடித்துவிடு. நாற்பது நாளுக்கு மேல் எதிர்பார்ப்போடு காத்திருந்தாகி விட்டது. எழுபதாயிரம் ரூபாய் வரைக்கும் கழுத்தில் காதில் இருந்ததை முதற்கொண்டு தோற்றாகி விட்டது. இத்தனைக்கும் பிறகு நம்பிக்கையைச் சிதைத்து விடாதே. உனக்கு வேண்டுமானால் குழந்தை பிறந்த அன்றைக்கே எடுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். இனி வேண்டாம். ப்ளீஸ். ப்ளீஸ்.. இறைவனிடம் மல்லுக்கு நின்றுகொண்டே முகம் பார்க்குமளவுக்குப் பளபளவென்றிருந்த கிரானைட் தரையில் கால் வழுக்க ஓடினாள்.
கண்ணாடிக் கதவுக்குப் பின் டாக்டர் முகம். அந்த முகத்திலிருந்து எதையும் ஊகிக்க முடியவில்லை. அதைப் பார்க்குமுன், தன் குழந்தை இருந்த கண்ணாடி அறைக்குள் பார்வையை மிக வேகமாக ஓட விட்டாள். குழந்தை கிடந்த நிலையைப் பார்த்தால் தூங்குகிறதா... இல்லை வேறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.
"எ... என்ன டாக்டர்... கூப்பிட்டீங்களாமே?"
"யெஸ்... உணர்ச்சி வசப்படாம நான் சொல்றதைக் கேளு..."
சிலீரென்று இதயத்தில் கத்தி பாய்ச்சிய மாதிரி இருந்தது. எதற்காக உணர்ச்சி. "சொ... சொல்லுங்க..." ஐயோ..சீக்கிரம் சொல்லிடுங்களேன்.
''நாளைக்கு... உன் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யப் போறோம்."
''நிஜம்மாவா... நிஜம்மாவா...'' ஏதோ இவளுடன் விளையாடுவது டாக்டரின் உத்தேசம்போல் கேட்டு, அப்படியே அந்தப் பளபளப்பான தரையில் டாக்டரின் காலில் விழுந்து சேவித்தாள். ஃபினாயில் வாசமடித்தது. "தாங்க்யூ... தாங்க்யூ..."
அதன்பிறகு, குழந்தையை எப்படியெல்லாம் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்கள். டிஸ்சார்ஜ் ஆர்டர் கொடுத்தார்கள்.
"கீழே போய்ப் பணம் கட்டிட்டு வாங்க... அப்படியே குழந்தைக்கு வேண்டிய டிரஸ்... ஸ்வெட்டர் எல்லாம் வாங்கி வாங்க..."
உடம்பு முழுக்க சந்தோஷ மின்சாரம் பாய்ச்சியதாய்த் தோன்றியது. விவேக் சாப்பாடு எடுத்து வந்தபோது, அவனிடம் சொன்னாள். விதம்விதமாய் இனிய உணர்வுகளுடன், "நானும் உங்ககூட கடைக்கு வருவேன்" என்று அடம் பிடித்து, ஆஸ்பத்திரிக்கு மூன்றாவது கட்டடத்தில் இருந்த கடைக்குப் போய் அத்தனை நிறங்களிலும் குட்டிக் குட்டிச் சட்டைகளும், ஸ்வெட்டர்களும், சின்னஞ்சிறு மெத்தையும் வாங்கி வந்தாள். நாப்கின்களைப் பெருமிதமாய் மடித்து வைத்தாள்.
"என்னங்க... நாலரை ஆறு வேண்டாம்... ஆறு மணிக்கப்புறம் கிளம்புவோம்" என்று தன் அம்மா சொல்லிக் கொடுத்தபடி சொன்னாள்.
காலையில் எழுந்த நிமிஷம் முதல் ஒவ்வொரு அம்மாவிடமும் போய் "என் பாப்பாவை இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க... ஆறு மணிக்குப் பிறகு கிளம்ப நினைச்சிருக்கோம்..." என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போனாள்.
இவள் குழந்தை டிஸ்சார்ஜ் ஆகப் போவதற்கு இவளைப் போலவே எல்லோரும் மகிழ்ந்தார்கள். அந்த உலகமே தனி. போட்டி பொறாமைகள் எல்லாம் இற்றுப் போய்விடும். யாருக்கும் யாரும் எந்த உதவியும் செய்யத் தயாராய் இருப்பார்கள். என்னுடையது உன்னுடையது என்றில்லாமல் யாருடைய ஹார்லிக்ஸ் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படும். யார் வேண்டுமானாலும் ஃபார்மஸிக்கு ஓடுவார்கள்.
"ப்ரின்ஸ் போயிட்டு வர்றேன். லதா... உன் குழந்தைக்காகப் பிரார்த்திப்பேன் ஜோதி.. அடுத்த வாரமே டிஸ்சார்ஜ் பண்ணிடுவார்... சாயி கீர்த்திகா... லதா... வரேன் சத்தியமாய் உங்க எல்லோருக்கும் சந்தோஷம்தான் நிகழும்." கண்ணீருடன் பேர் பேராய்க் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். ஸ்வர்ண
குழந்தையை, அழகாய் டிரஸ் பண்ணிக் கொடுத்தார்கள். சின்னப் பொட்டலம்போல பூவாய்த் தூக்கிக்கொண்டு அனைவரிடமும் விடை பெற்று, ஆட்டோவில் ஏறிக் கிளம்பு முன் கோயில் போல் ஆஸ்பத்திரியை நமஸ்கரித்து...
இதோ... வெற்றிகரமாய்க் குழந்தையும் கையுமாய் வீட்டை நோக்கி ஆட்டோவில் பயணம். அம்மா ஆரத்தியுடன் வீட்டில் காத்திருப்பாள். புக்ககத்து மனிதர்கள் சந்தோஷமே வடிவாகி வீட்டில் குழுமியிருப்பார்கள்.
சரக்கென்று ஆட்டோ பிரேக் போட்டு நின்றது. ரோடில் கூட்டம். சின்னத் திட்டாய் மனிதக் கும்பல்.
"யார் டிரைவர் என்ன ஆச்சு:'' விவேக் பதறிப் கேட்டான்.
டிரைவர் இறங்கிப் பார்த்துவிட்டு வந்து சொன்னார்.
"யாரோ குழந்தையைப் பெத்துக் குப்பை தொட்டியில் வீசி எறிஞ்சுட்டாங்கம்மா..."
அவள் எட்டிப் பார்த்தாள்.
அது ஒரு பெண் குழந்தை!
பின்குறிப்பு:-
கல்கி 23 ஜூன் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே!
-ஆசிரியர், கல்கி ஆன்லைன்