மேனேஜ்மென்ட் ஜோக்குகள் 2 - சிரித்து, பின் சிந்தித்து செயல்பட..!

Management Jokes
Man with potato and Man swimming
Published on

மல்டி நேஷனல் கம்பெனிகளில் கீழ் மட்டத்தில் பணியாற்றும் உதவி மேனேஜர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தங்களுக்குள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொள்ளும் ஜோக்குகள் பல. அவற்றில் இரண்டு இதோ:

1. ஓய்வு எடுக்கச் சென்ற மேனேஜர்

மிகப் பெரிய கம்பெனி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருந்த மேனேஜருக்கு மாரடைப்பு திடீரென்று ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர் அவர் நிச்சயமாக ஓய்வு எடுக்க வேண்டுமென்று கூறி விட்டு நகருக்கு வெளியே உள்ள பண்ணைக்குச் செல்லலாம் என்றும் யோசனை கூறினார்.

மேனேஜரும் உடனே பண்ணைக்குச் சென்றார்.

அங்கே இரண்டு நாட்கள் முழு ஓய்வில் இருந்த பின்னர் அவருக்கு ‘போர்’ அடிக்க ஆரம்பித்தது. பண்ணையை மேற்பார்வை செய்யும் விவசாயியைக் கூப்பிட்டு, “எனக்கு ஏதேனும் ஒரு வேலையைக் கொடு” என்றார்.

உடனே விவசாயி அங்கிருந்த மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்று இதை நன்கு சுத்தம் செய்யுங்கள் என்றார். மாட்டுத் தொழுவத்தில் ஒரே சாணியாக இருந்தது. பொறுமையாக அதை சுத்தம் செய்தார் மேனேஜர். நகரில் ஆபீஸில் உட்கார்ந்து பழக்கப்பட்ட இவருக்கு இதை முடிக்க ஒரு வாரம் ஆகும் என்று விவசாயி நினைத்தார். ஆனால் மேனேஜரோ ஒரே நாளில் அந்த வேலையை முடித்து விட்டார்.

விவசாயிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அடுத்த நாள் மேனேஜருக்கு இன்னும் சற்று கடுமையான வேலையைத் தந்தார். கசாப்பு கடைக்காக அங்குள்ள கோழிகளில் இருநூறின் தலையை வெட்ட வேண்டும் என்பதே அந்த வேலை.

நிச்சயம் மேனேஜரால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நிச்சயித்த விவசாயி அங்கிருந்து அகன்றார்.

ஆனால் என்ன ஆச்சரியம் அன்று மாலையே அந்த வேலையையும் முடித்து விட்டார் மேனேஜர்.

அதிர்ச்சி அடைந்த விவசாயி மேனேஜருக்கு அடுத்த நாள் ஒரு சாதாரண வேலையைக் கொடுத்தார். உருளைக்கிழங்கு மூட்டை ஒன்றையும் இரு பெட்டிகளையும் கொடுத்து இதில் உள்ள உருளைக்கிழங்குகளில் பெரிதாக இருப்பதை ஒரு பெட்டியிலும் சிறிதாக இருப்பதை இன்னொரு பெட்டியிலும் போடுங்கள் என்றார் அவர்.

மாலை வந்தது. விவசாயி மேனேஜரிடம் சென்ற போது அவர் குழப்பமாக உருளைக்கிழங்கு மூட்டை முன் உட்கார்ந்திருந்தார். ஒரு வேலையும் நடக்கவில்லை.

ஆச்சரியமடைந்த விவசாயி மேனேஜரைப் பார்த்துக் கேட்டார்: “என்ன இது ஆச்சரியமாக இருக்கிறதே! மிக கஷ்டமான வேலைகளை சீக்கிரமாக முடித்த நீங்கள், இந்த சாதாரண வேலையையா முடிக்க முடியவில்லை உங்களால்” என்றார் அவர்.

மேனேஜர் விவசாயியைப் பார்த்து, “ கேளப்பா, வாழ்நாள் முழுவதும் நான் மோசமான பயல்களுடன் காலத்தைக் கழித்து பல பேருடைய தலைகளை வெட்டி வேலையை விட்டு அவர்களை நீக்கியவாறே இருந்தேன். ஆனால் நீயோ இப்போது என்னை பெரிது எது சிறிது எது என்று சுயமாக முடிவு எடுக்கும்படி சொல்கிறாயே, முடிவு எடுத்து எனக்குப் பழக்கமே இல்லையே...” என்றார்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதை!
Management Jokes

2. முதலைக்கு நடுவில் நீந்திய அதிகாரி!

ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு அதிகாரிக்கு உற்சாகம் தாங்கவில்லை. தனது அதிகாரிகள் அனைவரையும் பிரம்மாண்டமான மாளிகைக்கு ஓய்வெடுக்க அழைத்துச் சென்றார்.

அந்த மாளிகையின் பின்னால் பிரமிக்க வைக்கும் ஒரு பெரிய நீச்சல் குளம் இருந்தது. ஆனால் அந்த நீச்சல் குளத்தில் இரைக்காகத் தவிக்கும் முதலைகள் பலவும் நீந்திக் கொண்டிருந்தன.

இதையும் படியுங்கள்:
இந்திய நாடு, வளம் இருந்தும் துரிதமாக வளராமல் இருப்பதன் காரணம்?
Management Jokes

எல்லா அதிகாரிகளையும் நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்ற தலைமைப் பொறுப்பு அதிகாரி அவர்களைப் பார்த்து, “நமது நிறுவனத்தில் அனைத்து அதிகாரிகளும் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். ஆகவேதான் நான் உங்களிடம் ஒரு சவால் விடுகிறேன் இப்போது. இந்த முதலைகள் உள்ள குளத்தில் யாரேனும் குதித்து நீந்தி எதிர் பக்கத்திற்குச் சென்றால் அவர்களுக்கு அவர்கள் கேட்கும் எதை வேண்டுமானாலும் தர நான் தயார். எதை வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். பணம், பதவி உயர்வு எதானாலும் தருகிறேன்...” என்றார்.

நடுநடுங்கிப் போன அதிகாரிகள் கூட்டம் தங்களுக்குள் இந்த தலைமைப் பொறுப்பு அதிகாரிக்கு மூளை குழம்பிப் போய்விட்டதா என்று கூறிச் சிரித்துக் கொண்டனர். அங்கிருந்து அனைவரும் திரும்பிப் போக யத்தனித்தனர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இங்கிலீஷ் பூபதி!
Management Jokes

திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். அந்தக் குளத்தில் தலைமை நிதி அதிகாரி நீந்திக் கொண்டிருந்தார்.

தனது உயிரைப் பணயம் வைத்து அவர் முதலைகளை ஏமாற்றி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மெதுவாகவும் வேகமாகவும் நீந்திக் கொண்டே எதிர்ப்பக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஒரு முதலை அவரைக் கவ்வ வந்த போது தனது ஷூக்களைக் கழட்டி அதற்குப் போட்டு விட்டு வேகமாக நீந்தினார். ஒரு வழியாக எதிர்ப்பக்கம் வந்து அங்கிருந்த கம்பியைப் பிடித்து மேலே ஏறினார்.

ஆச்சரியப்பட்ட தலைமைப் பொறுப்பு அதிகாரி அவரிடம் சென்று, “அடடா! பிரமாதம் இது போல என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. என்ன ஒரு நீச்சல்! என்ன ஒரு தந்திரம். உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லுங்கள்’ என்றார்.

‘ஹாஹா’ என்று மூச்சுத் திணறியவாறே அந்த தலைமை நிதி அதிகாரி அவரை நோக்கி, “என்னை யார் இந்தக் குளத்தில் தள்ளிவிட்டது என்று மட்டும் சொல்லுங்கள், அது போதும்!” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com