சட்டமன்ற விதி எண் 110: மக்களாட்சியை மலரச் செய்யுமா அல்லது மழுங்கடிக்குமா?

தமிழகச் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் தாக்கம், அமைச்சர்களின் பங்கு மற்றும் ஜனநாயக விவாதங்களின் அவசியம் குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.
விதி எண் 110 | Tamil Nadu legislative assembly rule no 110
விதி எண் 110 | Tamil Nadu legislative assembly rule no 110Image credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

தமிழகச் சட்டப்பேரவையில் அவசர காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய 'விதி எண் 110' தற்போது விவாதங்களைத் தவிர்ப்பதற்கான ஆயுதமாக மாறிவிட்டதா? அமைச்சர்களின் உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த விதியின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் என்ன? மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே உலுக்கும் இந்த விவகாரத்தின் முழுமையான பரிமாணத்தை அறியத் தொடர்ந்து படியுங்கள்!

ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் என்பது, அம்மாநில மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும், நிம்மதிக்கும் வழி வகுக்கும் சட்டங்களை இயற்றுகின்ற புனித இடமாகப் பொலிவு பெற வேண்டும்.

நமது பிரதிநிதிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒன்று கூடி, நாட்டுக்கு நலம் பயக்கும் விஷயங்களை விவாதித்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 174(1)ன் படி, ஒரு கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கும், அடுத்த கூட்டத் தொடரின் முதல் நாளுக்கும் இடையேயான காலம் ஆறு மாதத்திற்குள்தான் இருக்க வேண்டும். பாருங்கள்! சட்டத்தை வகுத்த வல்லுனர்கள் எவ்வளவு உஷாராகவும், துல்லியமாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை!

நமது அரசியலமைப்பின் 208(1) பிரிவின்படிதான் தமிழ்நாடு சட்டப் பேரவை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 22 அத்தியாங்களின் கீழ் 292 விதிகள் உள்ளன.

அவற்றைப் பின்பற்றியே அவை உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். விதி எண் 110ம் அவற்றில் ஒன்று.

இந்தச் சிறப்பு விதியின் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர அறிவிப்புகளை, துறை அமைச்சரோ, முதல்வரோ, சபாநாயகரின் அனுமதி பெற்று வெளியிடலாம். அவசரம் என்பதால், கால தாமதத்தைத் தடுப்பதற்காக, விவாதங்களிலிருந்து அவை விலக்கு பெறும். ஆனாலும் நடைமுறைக்கு வரும் தேதி போன்ற விபரங்களை சட்டப் பேரவை செயலாளரிடம் வழங்க வேண்டும். இது ஒரு சிறப்பு விதி. அவசர கால பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளுக்கு மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்வது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாகன நம்பர் பிளேட்டில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
விதி எண் 110 | Tamil Nadu legislative assembly rule no 110

அனைத்து உறுப்பினர்களையும் கூட்டி, கூட்டத் தொடர் நடத்துவதன் நோக்கம், நாட்டின் கடைக்கோடி உறுப்பினரும் தன் தொகுதிக்கான தேவைகளை எடுத்துரைக்கவும், அது குறித்த விவாதங்களை மேற்கொண்டு ஒரு தெளிவான முடிவுக்கு வரவுந்தான்!

ஒரு பொருள் குறித்த விவாதத்தின் போதுதான் அதன் சாதக, பாதகங்கள் தெரிய வரும். "நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்!” என்று கிராமங்களில் கூறுவார்கள். 234 பேர்களின் கருத்துக்கள் எதிரொலிக்கும் இடந்தான் நமது சட்ட மன்றம்.

சரியான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால், எந்த ஒரு திட்டம் குறித்த நல்லதும், கெட்டதும் விரிவாகவே தெரிந்து விடும். ஏற்புடைய திட்டம் என்று தெரிந்த பிறகு அது அறிவிக்கப்படுமானால், மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள்; ஒத்துழைப்பை நல்குவார்கள். சிரமமின்றித் திட்டம் சிறப்பாக நிறைவேறும்.

ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன?அமைச்சர்களுக்குக் கூட போதிய உரிமை வழங்கப்படாமல், எல்லாவித அறிவிப்புகளையும் முதலமைச்சர்களே விதி எண் 110ன் கீழ் அறிவிப்பது ஏற்புடையதல்லவே! இதன் மூலம் அந்த விதியின் சிறப்புத் தன்மையே மழுங்கடிக்கப்படுகிறதல்லவா?அமைச்சர்களின் பொறுப்பு குறைக்கப்படுகிறதல்லவா?நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் பொம்மைகளைப் போன்றவர்களா அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும்?

ஆட்சியாளர்கள் விதி எண் 110யே எப்பொழுதும் பிடித்துக் கொண்டு தொங்குவது ஏன்? விவாதங்களை விலக்கி வைக்கவா?இதன் மூலம் மக்களாட்சித் தத்துவமே அடிபட்டுப் போவதை அவர்கள் அறியாதவர்களா என்ன? அதைப் பற்றிய எண்ணத்தை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதுதானே இதன் பொருள்!

’கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, இங்கோ கட்டெறும்பாக இருந்த விதி எண் 110, கழுதையாக வளர்ந்து விட்டது.’ எல்லாச் சமயங்களிலுமே பெரும்பாலான அறிவிப்புகள் 110 ன் கீழ்தான்!

2011 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில், அப்போதைய முதலமைச்சர் 110 விதியின் கீழ் செய்த அறிவிப்புகளின் எண்ணிக்கை 181 என்று விபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் தோராய மதிப்பு ரூ 1,72,196 கோடியென்றும், அவை மேலும் கூறுகின்றன.

விதி எண் 110 | Tamil Nadu legislative assembly rule no 110
விதி எண் 110 | Tamil Nadu legislative assembly rule no 110Image credit: Chatgpt

அதனைத் தொடர்நது ஆட்சிக்கு வந்த அடுத்த முதல்வர் 453 அறிவிப்புகளை விதி எண் 110 ன் மூலமே அறிவித்தாராம். சுமார் 3.27 லட்சம் கோடி அளவிலான 1704 பணிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரூ 87 கோடி மதிப்பிலான  1167 பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டனவாம். மற்றைய முதல்வர்களும் 110 ஐப் பயன்படுத்தியிருந்தாலும், இவர்கள் அளவுக்கு இல்லையென்று விபரங்கள் கூறுகின்றன.

தற்போதைய புதிய அரசு, பல எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், மக்கள் வெளிப்படையான விவாதங்களை விரும்பும் நேரத்தில், விதி எண் 110 க்குச் சற்றே ஓய்வளிப்பதையே ஜனங்கள் விரும்புகிறார்கள். தற்போதைய முதல்வர் சுமார் 18 அறிவிப்புகளை விதி எண் 110ன் கீழ் செய்துள்ளதாகவும் அது 30க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்த செய்திகளென்றும் கூறப்படுகிறது.

இனி மேலாவது நடைபெறும் சட்ட மன்றக் கூட்டங்களில், திட்டங்கள் குறித்த நல்ல விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படுமானால், நல்ல அரசுக்கான சான்றிதழை மக்கள் அளிப்பார்கள்!

இப்பொழுதோ தகவல், தொழில் நுட்பத்துறை மகத்தான வளர்ச்சியை எட்டியுள்ளது. கர்ம வீரர் காமராஜர் காலத்தில் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை.

இருப்பினும் அவர் குறையின்றி அனைத்தையும் செய்தார்!

இதையும் படியுங்கள்:
புகையிலை முதல் போதை கலாச்சாரம் வரை: ஒரு வரலாற்றுப் பார்வை!
விதி எண் 110 | Tamil Nadu legislative assembly rule no 110

ஓரிரவில் வைரவன் பல ஃபைல்களைத் தலைவரின் கையெழுத்துக்காக வைத்திருந்தாராம். காலையில் பார்த்தால், சில ஃபைல்கள் மட்டும் கையெழுத்தாகி இருந்தனவாம். அவை, உயர் அதிகாரிகளின் பிரமோஷன், ட்ரான்ஸ்பர் போன்றவையாம். ஓய்வாக இருந்த நேரத்தில், “அவற்றை மட்டும் ஏன் தலைவரே அவசரமாகக் க்ளியர் செய்தீர்கள்?”என்று வைரவன் கேட்க, தலைவர் சொன்ன பதில் இதுதானாம்.

“இந்தக் கோப்புகள், கையெழுத்தான தேதியிலிருந்து தனி மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியவை. எந்த ஒரு தனி மனிதரும் நமது நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது.

ஸ்கீம் ஃபைலில் உடனே கையெழுத்துப் போட்டாலும், பலன் பயனாளியைச் சென்றடையச் சில நாட்களாவது ஆகி விடும். நம் சிஸ்டம் அப்படி! ஆகவேதான் அவற்றை உடனடியாக முடித்தேன்!” என்றாராம். என்னே அவரின் மாண்பு!

“படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!” என்று கவிஞர் பாடியது பெருந்தலைவரைப் பார்த்துத்தானோ!

logo
Kalki Online
kalkionline.com