கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஷோக்கள் முடிந்திருக்கும் இதைப் படிக்கும்போது என்பதால் கோட் படத்தில் விஜய் வில்லன் என்பது தமிழகத்திற்கு தெரிந்திருக்கும். அவர் ஏன் வில்லனாக மாறினார். மாற்றியது யார். ஒரிஜினல் வில்லன் மோகன் என்ன செய்கிறார். இது தான் கோட் கதை.
ஹைப் கூடாது என்று சென்ற வாரம்வரை சொன்ன வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் பின்னர் நூறு இன்டர்வியூக்கள் மேல் கொடுத்து உச்சத்தில் ஏற்றி வைத்து விட்டார்கள். சஸ்பென்ஸ் உடைக்காதீர்கள் என்று சொன்னாலும் இப்பொழுது இருக்கும் ரசிகர்கள் இங்கே கேட்பார்களா.
ஒரு முக்கியமான மிஷனுக்காக விஜய் அண்ட் டீம் பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஒடும் ரயிலில் ஒரு பொருளை மீட்க வேண்டும். ஒரு தீவிரவாதியை கொல்ல வேண்டும். அங்கே போனால் மேனன் (மோகன்) வேறு இருக்கிறார். ஒரு விபத்தில் ரயில் வெடித்துச் சிதறுகிறது. அந்த விபத்து இவர்கள் வாழ்வில் ஒரு பெரிய அபாயமாக எப்படி மாறுகிறது என்பது தான் கதை.
விஜய்க்காக மட்டும் படம் பார்க்கலாம் என்றால் மேற்கொண்டு படிக்கத் தேவையில்லை. கதை என்ற ஒன்று வேண்டுமென்றால் வேறு பாதை செல்லவும்.
திரைக்கதை மாஜிக்கும், டிவிஸ்ட்களும் படத்தைக் காப்பாற்றும் என நினைத்தவரை சரி. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னதான்பா சொல்லவரீங்க என்று ஆகிவிடுகிறது. நீண்டு கொண்டே செல்லும் முதல் பாதி மிகப் பெரிய அயர்ச்சி. செகண்ட் ஹாஃப்பில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு விட்டார்கள். இருந்தும் அடுத்தடுத்து வரும் சண்டைக் காட்சிகளும் பாடல்களும் படத்தில் எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லாமல் கடக்க வேண்டியதாகிறது. முக்கியமான நபர்களின் மரணங்களும் அதே போல் தான். இரண்டு கொலைகளுக்குப் பிறகும் இரண்டு பாடல்கள். 'வெங்கட் பிரபு நீங்கள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?' எனக் கேள்வி எழுகிறது. ஸ்டேடியத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் கொஞ்சம் பரபரப்பை கூட்டினாலும் இப்படித்தான் முடியும் எனத் தெரிவதால் முடிந்த பின் அப்பாடா என்று இருக்கிறது.
நடிப்பதற்கு வாய்ப்பு என்றால் விஜயை தவிர கொஞ்சம் பிரஷாந்த், கொஞ்சம் ஸ்னேகா. புது வரவு மீனாட்சி… பாவமே… மோகன் அடுத்த படத்தில் கம் பேக் கொடுப்பார் என்று நம்புவோம். இவ்வளவு வீக்கான வில்லனால் தான் படம் கொஞ்சம் தடுமாறுகிறது என்றே சொல்லலாம். அவர் என்ன செய்து கொண்டிருந்தார். அவர் செய்ய நினைக்கும் வேலையால் அவர் யாருக்கு என்ன நிரூபிக்க நினைக்கிறார்....? ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் என்பதால் போலீஸ் தேவையே இல்லை என்று நினைத்து விட்டார்கள் போல. போலீஸ்காரர் சுப்பு பஞ்சு இவர்கள் சொல்வது போல நடக்கிறார்.
இளவயது வில்லன் விஜய் கொஞ்சம் கூடப் பாசாங்கில்லாத வில்லத்தனம் செய்து கடைசி வரை காப்பாற்றுகிறார். டீ ஏஜிங் பார்த்துக் கொண்டால் போதும். மற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மெனக்கெட வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதால் பல இடங்களில் பிசிரடிக்கிறது. அந்த டீ ஏஜிங் காட்சிகள் கூடச் சில இடங்களில் அதுவும் டீனேஜ் விஜய் காட்சிகளில் சுத்தமாகப் பொருந்தவில்லை. விஜயகாந்த் காட்சிகளும் அதுபோலத்தான். சண்டைக் காட்சிகளைவிட சேசிங் காட்சிகள் தரம். சித்தார்த் நுனி ஒளிப்பதிவில். யுவன் இசை பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
அஜீத் மற்றும் விஜயோடு இயக்கிய இயக்குனர்கள் பட்டியலில் முருகதாஸ், ரவிகுமார், ஏ எல் விஜய், ஆகியோருடன் வெங்கட் பிரபுவின் பெயரும் சேர்ந்து விட்டது. கேமியோக்களிடம் காட்டிய ஆர்வத்தை சற்று திரைக்கதையிலும் எடிட்டிங்கிலும் காட்டி இருக்கலாம். மூன்று மணி நேரம் வெகு அதிகம்… வலிந்து திணிக்கப்பட்ட சீக்வல் டுவிஸ்ட் தேவை இல்லாத ஆணி. தனது கேங்கில் சிவா மற்றும் ஜெய்யைத் தவிர அனைவரும் இருக்கும்படி பார்த்துக் கொண்டு விட்டார் வெங்கட்.
'ஒரு தடவை பார்க்கலாம்' என்று சொல்ல வைக்காமல் ரிப்பீட் ஆடியன்ஸ் வருமாறு அமைந்திருந்தால் இது நிச்சயம் சிறந்த திரை அனுபவமாக இருந்திருக்கும். அப்படி சொல்ல இயலாமல் போனது தான் சோகம். விஜய் ரசிகர்கள் கொண்டாடலாம். மற்ற ரசிகர்கள்? இந்தப் பத்தியின் முதல் மூன்று வார்த்தைகளைப் படிக்கவும்.